ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 8 மார்ச், 2011

கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்





பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர்தான் சுந்தரலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார்.





சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன. கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.



கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான். அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.



இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.



1799 செப்டம்பர் 8ம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணான வடிவுடன் ஆடுமேய்ப்பவர்களைப் போல வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனான். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.





சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள்.





அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.



தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதாலேயே சுந்தரலிங்கத்தின் வீரம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது. அதனினும் கொடுமை, அந்த மாவீரனது நினைவாக விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு ‘வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம்’ என்று கலைஞர் கருணாநிதி பெயரிட்டபோது, அதைப் பொறுக்க மாட்டாமல் ஆதிக்க சாதியினர் அந்தப் பேருந்துகளை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து தீயிட்டுக் கொளுத்தியதும், பெரும் சாதிக்கலவரத்தை உண்டாக்கியதும் ,தமிழக வரலாற்றின் அவமானகரமான கருப்புப் பக்கங்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக