ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 மார்ச், 2015

தென்மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டுகளில் 105 கொலைகள்- துணை ராணுவம் கேட்கும் டாக்டர் கிருஷ்ணசாமி! ..

1995-ஆம் ஆண்டு பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் பெரிதும் வாழும் கொடியங்குளம் கிராமம்  தூத்துக்குடிகாவல்துறையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல் நீடித்தது. புதிய தமிழகம் கட்சியின் தொடர் முயற்சியால் 2001-க்குப் பிறகு சமூக நல்லிணக்கம் உருவாக்கப்பட்டது. 2001-லிருந்து 2011 வரையிலும் 10 ஆண்டுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பெரிய அளவிலான மோதல்களோ, தொடர் சம்பவங்களோ நடைபெறவில்லை. 2011-ஆம் ஆண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மரணமெய்தினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஆங்காங்கே நடைபெற்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலங்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் அடுக்கடுக்கான கொலை சம்பவங்களாக மாறிவிட்டன. கடந்த ஒர் அண்டில் மட்டுமே தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் பிற பட்டியலின வகுப்பினர் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
15, 16 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி முன்னோடிகள் என குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதையே தங்கள் சாதிக்கு எதிரான சவாலாகக் கருதி கைதேர்ந்த கூலிப்படைகளை ஏவி கொலைசெய்யும் போக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிய வடிவம் எடுத்துள்ளது. தென்தமிழகத்தில் பட்டியலினப் பிரிவு மக்கள் மட்டுமின்றி வேறெந்த சமுதாயத்திலும் ஒருபடி மேலே வளரக்கூடியவர்களை கொலை செய்து அழித்தொழித்து அதன் மூலம் அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிடப்படுகிறது.
இதுவரையிலும் உத்திர பிரதேசம், பீகார் போன்ற வடக்கு மாநிலங்களில் மட்டுமே நிலவிவந்த சாதிமறுப்புத் திருமண தம்பதியினரை உயிரோடு கொளுத்தும் அவலங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக மிகமிக அதிகரித்துவிட்டன. இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 105 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கெளரவக் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தருமபுரி இளவரசன் கொலையில் துவங்கி நேற்றைய தினம் சிவகங்கை தமிழ்செல்வி வரையிலும் எண்ணற்ற கொலைகள் அரங்கேறிவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றியோ, கெளரவக் கொலைகள் குறித்தோ கொடுக்கப்படும் எந்த ஆதாரங்களையும் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய பன்னீர்செல்வம் கண்டுகொள்வதாய் இல்லை. அதைவிட 100 படி மேலே சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் கெளரவக் கொலைகளும் தமிழகத்தில் நடைபெறவே இல்லையென்று அப்பட்டமான பொய்யை அவர் தெரிவிக்கிறார்.
கண்ணெதிரே நடக்கக்கூடிய கொலைகளைக் கூட அது கொலையே அல்ல என்று காவல்துறை அமைச்சர் வக்காலத்து வாங்குகிற பின்புலத்தில் கொலைகாரக் கும்பல் முழு தைரியத்தோடு தமிழகத்தில் வலம் வருகிறது. அ.இ.அ.தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் இதுபோன்ற எளிய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தானாக அதிகரித்துவிடும் என்பதற்கு இந்தமுறை ஆட்சியும் விதிவிலக்காக விளங்கவில்லை. மாறாக
இவ்வாட்சியில் புதிய வரலாற்றைப் படைக்கக்கூடிய அளவிற்கு கெளரவக் கொலைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல, அந்த மக்கள் சிறிது வளமோடு வாழக்கூடிய பகுதிகளில் அவர்களை சொந்தக்காலில் வளர்ந்துவிடாமல் தடுத்திடும் நோக்கத்தோடு அவர்களுடைய சொத்து சுகங்களை அபகரிக்கும் கொடுமைகளும் அதிகரித்துவிட்டன. கொடியங்குளம் சம்பவத்தில் கூட அது ஒரு சாதி மோதல் என்பது ஒருபக்கம் இருப்பினும் சிறிது வசதியோடு வாழ்கிறார்கள்; அந்த வசதிகளை நிர்மூலமாக்க வேண்டுமென்று தான் அன்றைய காவல்துறையைப் பயன்படுத்தி அந்த கிராம மக்களுடைய சொத்துகளும் சுகங்களும் சூறையாடப்பட்டன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருவைகுண்டம் பிச்சனார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நகரப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பாஸ்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லை; யாரோடும் முன்விரோதம் ஏதும் இல்லை. ஆனால் அந்தப் பகுதியில் சிறிது நிலபுலன்களோடு வாழ்ந்துவந்த தங்களுடைய சொந்தங்களுக்கு பக்கபலமாக விளங்கியவர். அந்த கிராமத்தில் இன்றுவரையிலும் நடக்கக்கூடிய விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளை சொல்லி மாளாது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 40 வீட்டுமனைகளில் இப்பொழுது 85 குடும்பங்கள் நெருக்கடியிலேயே வாழ்கிறார்கள். பேரூராட்சியின் அங்கமாக இருக்கக்கூடிய அந்தப் பகுதிக்கு எந்தவிதமான சாலைவசதிகளும் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அங்கன்வாடி இல்லை; சமுதாயநலக்கூடம் இல்லை. பேரூராட்சியும் அவர்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய வசதிகள் எதையும் செய்யவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது அப்பகுதியின் அமைச்சராக இருக்கக்கூடியவரும் ஏதும் செய்யவில்லை.
அருகாமையில் இருக்கக்கூடிய அங்கன்வாடிகளுக்கு பிள்ளைகள் சென்றால் அந்த அங்கன்வாடி ஆசிரியையே சாதியக் கண்ணோட்டதோடு அக்குழந்தைகளை அடித்து விரட்டிடும் கொடுமை; அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கூட பட்டியலின வகுப்பினர் பிள்ளைகள் எவரும் படிக்க முடியாத அளவிற்கு அன்றாடம் அச்சுறுத்தல் தொல்லைகள்; பெண்கள் அந்தப் பகுதியைத் தாண்டி வேறுபகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு தங்கள் குடியிருப்புகளுக்கு வரக்கூடிய வழியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இளைஞர்களால் படக்கூடிய அவமானங்களுக்கு எல்லையே இல்லை. அப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கும் குமரகுரு பள்ளி மற்றும் கல்லூரியில் தேவர் ஜெயந்தியன்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வலுக்கட்டாயப்படுத்தி இனிப்பு கொடுத்து கொண்டாடுவது; அதை கல்வி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அதற்கு அனுமதியளித்து வருகிறது. பள்ளி செல்ல முடியாது, கல்லூரி செல்ல முடியாது, வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லமுடியாது.
தங்களிடத்தில் இருக்கக்கூடிய அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்த நிலங்களிலே விளையும் எந்தப் பயிர்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. நன்கு விளைந்த நெல் அல்லது உளுந்து அல்லது பயிர்வகைகள் எதுவானாலும் அய்யாமார்கள்(தேவர்கள்) மாடுகள் திண்றது போக மீதம் இருந்தால் தான் இம்மக்கள் அறுவடை செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 10,000 செலவழித்து வளர்ந்த நெற்பயிராயிற்றே… அறுவடை செய்யும் தருவாயில் இருக்கக்கூடிய பயிராயிற்றே… உளுந்தாயிற்றே… அதில் மாடுகளை விட்டு அழியாட்டம் செய்யலாமா? என்று தட்டிக் கேட்டால் அடி உதை. புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு; தங்களது அழியாட்டங்களை தட்டிக்கேட்க தலைநிமிர்ந்தால் கூலிப்படைவைத்து வெட்டிக் கொல்வது, இதுதான் திருவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நடக்கும் சமூகநீதி. தனக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் இதுபோன்ற அநியாயங்களை எதிர்த்தும் குரல் கொடுத்ததற்காகத்தான் புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர் பாஸ்கர் கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டுக்குள் நாடு என அரசியல் சாசனத்தை துச்சமென மதிக்காத சாதிசாசனத்தை உருவாக்க தொடர்ந்து ஒரு கும்பல் தென்தமிழகத்தில் முயற்சித்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் இரையானவர்கள் பட்டியலின தேவேந்திரகுல வேளாளர்கள் என்றாலும் பிற சமுதாயத்தினரும் தப்பியதில்லை. 2002-ஆம் ஆண்டு தேவகோட்டையில் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லமுறையில் வளர்ந்து வந்த ரூசோ என்ற தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் படுகொலைக்கு ஆளானார். திருவைகுண்டம் அருகே நடந்துவரும் மணல் கொள்ளையை தடுக்க தன்னலம் கருதாமல் பாடுபட்ட ஆசிரியர் தேவசகாயம் நாடார் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோன்று சுயம்புலிங்க நாடார் என்பவர் கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டார். வள்ளியூரில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த் டேவிட் ராஜா என்ற கல்லூரி மாணவர் மற்றும் திருநெல்வேலியில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த பொன்னையா என்ற இளைஞர் ஆகியோர் கொலைசெய்யப்பட்டனர்.
தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய எல்லா சம்பவங்களிலும் ஒர் அம்சம் நிரந்தரமாக நிலையோடிருக்கிறது. கொலை செய்வதன் மூலம் கொலைக்குள்ளாகும் சமூகங்களின் மத்தியில் ஓர் அச்சத்தை உருவாக்குவது; அதன்மூலம் தங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எந்தப்பகுதியில் இருந்தும் வராதவாறு பார்த்துக் கொள்வது; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எல்லாவிதமான சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது; அச்சம் காரணமாக விலைமதிப்பற்ற தங்கள் வீடுகள், நிலங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட பல சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு எப்படியாவது அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு போனால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி, அதன்மூலம் அச்சொத்துகளைக் கவர்வது; கேட்ட விலைக்கு நிலத்தைக் கொடுக்கவில்லையெனில் 500, 1000 எண்ணிக்கையிலான மாடுகளை விட்டு விவசாய நிலங்களை அழிப்பது; சிறு மற்றும் குறு விவசாயிகளுடைய நிலங்களை அந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரே நிலவுடைமையாளரின் அனுமதி இல்லாமலேயே உழுவது மற்றும் பணத்தை வசூலிப்பது போன்ற எண்ணற்ற அக்கிரமங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசியல் பின்புலத்தோடு அரங்கேறி வருகின்றன.
கூலிப்படையினருக்கு அரசு மீதும் காவல்துறை மீதுமிருந்த கொஞ்சநஞ்ச பயமும் கடந்த 6 மாத காலமாக முற்றிலும் போய்விட்டது.
தேசம், தேசியம், தமிழ், திராவிடம் பேசும் எவரும் பூர்வீக தமிழ்க்குடி மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுங்கோண்மைகளை எதிர்த்து குரல் கொடுக்கத் தயாராக இல்லை. தென்தமிழகம் ஆசியக் கொடுங்கோண்மையின் (Asian Despotism) கருவூலமாக மாறிவருகிறது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மண்ணுரிமை மறுக்கப்படுகிறது; மனித உரிமை காலில்போட்டு மிதிக்கப்படுகிறது; வாழ்வுரிமை கேள்விக் குறியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக