‘தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் அதிகரித்து வரும் கொலைகளுக்கு மணல் கொள்ளையே காரணம்’ என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் திருவைகுண்டம் நகர செயலாளர் மா. லெட்சுமணன் என்ற பாஸ்கர்(28) கடந்த 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். பதற்றம் காரணமாக திருவைகுண்டம் வட்டத்தில் கடந்த 25-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், சாதி அமைப்பு தலைவர்கள் திருவைகுண்டம் வட்டத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி திருவைகுண்டம் செல்வதற்காக தூத்துக்குடி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த 26-ம் தேதி பாஸ்கரின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர். இந்நிலையில் தன்னை திருவைகுண்டம் செல்ல அனுமதிக்க கோரியும், 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும் கிருஷ்ணசாமி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, கிருஷ்ணசாமி மார்ச் 1-ம் தேதி காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் திருவைகுண்டம் செல்ல அனுமதி அளித்தது. அதன்பேரில் கிருஷ்ணசாமி நேற்று திருவைகுண்டம் பிச்சனார்தோப்புக்கு சென்றார். பாஸ்கரின் தந்தை மாரிமுத்து மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
பின்னர் கிருஷ்ணசாமி கூறும்போது, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை பகுதிகளில் தாமிரவருணி ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடைபெறுகிறது. இதனால்தான் இந்த பகுதியில் படுகொலைகள் அதிகம் நடக்கின்றன.
இது தொடர்பாக புகார் செய்தால், புகார் செய்பவர் மீதே போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர். வருவாய் துறையினரும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த பகுதியில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பாஸ்கர் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்ய வேண்டும்.
தலித்கள் மீது தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பாக தனி புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டு தனி நபருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், வசதிகள், வாய்ப்புகள் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. அவை முறையாக கிடைக்க பேரூராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.