ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை

தமிழகத்தில் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஏற்கனவே இருக்கும்போது, புதிதாக ‘நாம் தமிழர்’ அமைப்பு தொடங்கப்படுவதற்கான காரணம் என்ன? ஈழ விடுதலை என்பது ஈழத் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டமைப்பது அல்ல; அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஓர் அரசை நிறுவுவது. 12 கோடி தமிழர்களுக்குமான ஒரு நாட்டை அமைப்பது. அப்படித்தான் தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார். அப்படிப்பட்ட ஒரு அரசை நிறுவும் போராட்டத்தை, பெரும்பான்மையான தமிழர்கள் வசிக்கும் தாய்நிலமான தமிழக அரசு அங்கீகரிக்கவில்லையென்றால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் பிற நாடுகளும் எப்படி அங்கீகரிக்கும்? அவன் கேட்க மாட்டானா – உன் சொந்த சகோதரனே உனக்கான போராட்டத்தை அங்கீகரிக்காதபோது, நாங்கள் எப்படி அங்கீகரிப்பது? இங்கிருக்கும் தமிழக அரசு ஏன் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரலை எழுப்ப மறுக்கிறது என்றால், இது தமிழர்களுக்கான அரசு அல்ல. பச்சைத் தமிழரான காமராசர் கூட ஒரு இந்தியராகத்தான் இந்த மண்ணை ஆண்டார். அது இப்போது வரை தொடர்கிறது. தமிழர் என்ற உணர்வோடு இந்த மண்ணை ஆளவில்லை என்றால், அந்த அரசு தமிழுக்கும், தமிழர்களுக்கும் முழுப்பயனைத் தராது; இழந்த உரிமைகளை மீட்கவும் உதவாது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நல்லதோ, கெட்டதோ நடக்க வேண்டும் என்றால், அதைத் தீர்மானிக்கிற சக்தி தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே அப்படி ஒரு நல்ல தலைமையில்லாத வெற்றிடம்தான் இருக்கிறது. நெடுமாறன் அய்யா, மணியரசன் அய்யா, தியாகு அண்ணன் இவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். ‘இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குள் நின்றுகொண்டு நாம் விரும்புகிற தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க முடியாது’ என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்; தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கிறார்கள். நான் இதில் மாறுபடுகிறேன். தேர்தல் அரசியல் திருடர் பாதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒருவன் திருடுகிறான் என்றால் அதைப் பாய்ந்து தடுக்க வேண்டும். இல்லையென்றால் திருடன் மென்மேலும் திருடுகிறவனாக மாறுவான். இந்தத் திருடர்கள் எந்த வாக்கு அரசியலை வைத்து நம்மை ஏமாற்றுகிறார்களோ, அதைக் கைப்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நாம் தேர்தல் அரசியலை நம்பாதவர்கள் எனும்போது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசிடம் போய் நம் உரிமைகளைக் கேட்டு எப்படிப் போராட முடியும்? ‘தமிழக அரசே தலையிட்டு போரை நிறுத்து!’ என்று போராடுவது, கடவுள் நம்பிக்கையற்றவன் கடவுளிடம் முறையிடுவது போல் இல்லையா? எனக்கும் இங்கிருக்கும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கும் நோக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ‘தமிழர்களின் நலன்’ என்ற திடலில் ஒன்றாக இருக்கிறோம். அவர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள்; நான் ஓட்டப்பயிற்சி செய்கிறேன். என்னதான் பெரும்பான்மை இருந்தாலும் அர்ச்சகராகும் உரிமை, இடஒதுக்கீடு என தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். நிலைமை இப்படி இருக்குபோது, இந்திய பார்ப்பனியக் கட்டமைப்புக்குள் ஜெயித்து என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்? இங்கு அரசை அமைத்து என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறீர்கள். ஒரு மராட்டியன் சாதிப்பதை, ஒரு மலையாளி சாதிப்பதை, ஒரு கன்னடன் சாதிப்பதை ஒரு தமிழன் சாதிக்க முடியாதா? நாம் உறுதியாக நின்று வலுவான குரலை எழுப்பினோம் என்றால் நமக்கு எதிராக எவனாவது செயல்பட முடியுமா? இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே? காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் போகாது என்று அடித்துச் சொல்ல வேண்டாமா? அவனுக்கு அவன் மக்கள், அவன் நாடு முக்கியம் என்றால் எனக்கு என் நாடு, என் மக்கள் முக்கியம் என்று ஏன் சொல்ல முடியவில்லை? இந்த இடத்தில் தமிழன் ஒருவன் தமிழர்களு க்கான அரசை நிறுவினால் இதைச் செய்யமுடியாதா? இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், நான் என் சகோதரர்களுக்கு ஆயுத ம் கொடுப்பேன் என்று அறிக்கை விடும் தைரியம் தமிழக அரசுக்கு இருந்தால் அவன் ஆயுதம் கொடுப்பானா? பதவிக்காக மத்திய அரசிடம் கூனிக் குறுகிக் கொண்டு இவர்கள் நிற்பதால்தானே அவன் ஏறி மிதித்து போய்க்கொண்டு இருக்கிறான். போரை நிறுத்துங்கள் என்று அழுகுரல்தான் எழுகிறதே தவிர, ‘போரை நிறுத்துடா’ என்று சொல்கிற உயரத்தில் தமிழன் இல்லையே! அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பாததால்தான் இங்கிருக்கிறவன் விஜயகாந்த் பின்னாடியும், ஜெயலலிதான் பின்னாடியும் ஓடுகிறான். என்னிடம் கொள்கை என்ன கோட்பாடு என்று கேட்கிறவர்கள் விஜயகாந்திடம் கேட்டீர்களா, இதற்கு முன் ஆண்டவர்களிடம் கேட்டீர்களா? தமிழ், தமிழன் என்று ஒருவன் போராட வந்தால் லட்சம் கேள்விகள் கேட்கிறீர்கள், குறுக்கே விழுகிறீர்கள், மல்லாக்கப் படுக்கிறீர்கள். ஆனால் எளிதாக மக்களை ஏமாற்றிச் செல்பவனை கண்டுக்காமல் விட்டுவிடுகிறீர்கள். நானும் இதைச் செய்யவில்லை என்றால், என்பின்னால் இருக்கிற ஆயிரக்கணக்கான் தம்பிமார்கள் எங்கே போவார்கள்? எங்களை அரசியலுக்குப் போகக்கூடாது என்பவர்கள், இந்த அரசியலைக் கைப்பற்றாமல் வேறு எந்த வழியில் போராடுவது என்பதைச் சொல்லட்டும். சமூகத் தளத்தில் போராடுவதற்குத்தான் சரியான அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறதே, எல்லோரும் ஏன் அதே தளத்தில் போய் நிற்கவேண்டும்? நாம் தமிழர் என்று ஒன்றுகூடும்போது, சாதியும் மதமும் மிதிபட்டுச் சாகிறது. இந்த முழக்கத்தோடு அரசியலைக் கைப்பற்றுவோம். நமக்கான அரசை நிறுவுவோம். நாம் தமிழர் என்று ஒன்று கூடுவதால் சாதி ஒழியும் என்கிறீர்கள். திமுக கட்சியின் பின்னாலும் இதுமாதிரி உடன்பிறப்புகள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால் அவர்கள் மாநாடு முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது சாதிமனிதர்களாகத் தானே திரும்பச் செல்கிறார்கள்? அவர்கள் சாதியாகத்தான் சமூகத்தைப் பார்க்கிறார்கள். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அதே சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். மாற்று சாதியினரை திமுகவோ, அதிமுகவோ என்றாவது நிறுத்தியது உண்டா? நாங்கள் ஆதிக்கசாதியினர் அதிகமாக இருக்கும் தொகுதியில் தலித் சகோதரரை நிறுத்தி, நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு செயல்படச் சொல்வோம். அப்படித்தான் இதை ஒழிக்க முடியும். ஆனால் தலித் சகோதரர்கள் பதவிக்கு வந்தால் அவர்களை வெட்டிக் கொல்லும் சாதி வெறிதானே இன்று சமூக நிலைமையாக இருக்கிறது? அந்த சாதி வெறியை மழுங்கடிக்க வேண்டும். கடவுள் மறுப்பை எப்படி சட்டம்போட்டு நிலைநிறுத்த முடியாது அதுபோலத்தான் இதுவும். ஆனால் பரப்புரையால் சாதிக்க முடியும். எல்லோரையும் சொந்தமாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். அருந்ததியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் எல்லோரையும் இழுத்துவிட வேண்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா நாட்களிலும் சாதி நீடிக்கத்தான் செய்யும். சாதி பற்றி பேசும்போது, வேறொரு விடயத்தையும் இங்கு பேசுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அண்மையில் தேவர் சிலைக்கு நீங்கள் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்' என்று பதிலளித்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீங்கள் சொல்கிறபடி முத்துராமலிங்கம் போராளி என்றால், ராஜபட்சேவும் போராளிதானே? தலைவர் பிரபாகரனும் அதைத்தான் சொன்னார். ராஜபட்சே அவர் இனத்திற்கு உண்மையாக இருக்கிறார் என்றும், நம் இனத்துத் தலைவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு ராஜபட்சே எவ்வளவோ பரவாயில்லை என்றும்தான் சொன்னார். அதேநேரத்தில் தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பவனையும், தன் இனத்தின் அடிமைத்தனம் நீங்குவதற்காக போராடியவரையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது. குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? ரெட்டைமலை சீனிவாசனும் இமானுவேல் சேகரனும் சமத்துவத்திற்காகப் போராடிய காலகட்டத்தில்தான் முத்துராமலிங்கம் சாதிரீதியிலான சமத்துவமின்மையை முன்னிருத்தினார். உரிமைகளுக்காகப் போராடிய இமானுவேல் சேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலித் சகோதரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சாதிவெறியை கடைசி வரைக்கும் கைக்கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை முன்னிருத்தினால் ‘நாம் தமிழர்’ என்று எப்படி ஒன்றிணைய முடியும்? நாங்கள் முன்னிருத்தவில்லை. தவறான ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். நாங்கள் காமராஜரையும், வ.உ.சி.யையும் எங்கள் முன்னோடிகளாகக் கருதுகிறோம் என்றால், அவர்கள் தமிழ் தேசியவாதிகள் அல்ல. ஆனால் இந்த மண்ணின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள். அதுபோலத்தான் முத்துராமலிங்கத் தேவரும். அவர் தமிழ்த் தேசியவாதி இல்லையென்றாலும், இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். பெரும்பான்மை சமூகத்தின் மேன்மைக்கு உழைத்தவர். அந்த சமூகத்தையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதியைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கி வைக்கப்போகிறீர்கள்? எத்தனை காலத்திற்குத்தான் இருசமூகத்திற்கும் இடையேயான பகையை நீட்டித்து வளர்க்கப் போகிறீர்கள்? இருவருக்கும் இணக்கம் ஏற்படும் வகையில் இந்த சீமான் முயற்சி செய்தால் என்னை விமர்சனம் செய்கிறீர்கள். இப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா? பெருவாரியான சமூகத்தை காலகாலத்திற்கும் சாதியோடு பிணைத்திருக்கும்படியான பணியைச் செய்தவர் முத்துராமலிங்கம் என்று குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருக்கிறதே? அதை மாற்றும் வேலையை நான் செய்கிறேன் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு தேவர் சாதி தம்பிகளையும், முத்துராமலிங்கம் சிலை இருக்கும் இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு போவது இருவருக்கும் இடையேயான இணைக்கத்தை ஏற்படுத்த விரும்பும் செயல் அல்லவா? பெரியார் இறந்தபோது பார்வார்ட் பிளாக் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவில்லை என்று குற்றம் சாட்டுகிற நீங்கள், சாதியொழிப்பு, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடிய பெரியார், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்தார் என்று அந்த மக்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? பெரியார் ஒட்டுமொத்த விடுதலைக்குத்தானே பாடுபட்டார். இந்த சாதிக்கு ஒரு போராட்டம், அந்த சாதிக்கு ஒரு போராட்டம் என்று அவர் நடத்தவில்லையே? அப்படி இல்லை. இது வெள்ளை ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்ட போராட்டம். அதை எதிர்த்து எங்கள் அய்யா என்ன செய்தார்? எல்லா இடத்திலும் விமர்சனம் இருக்கிறது. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது. இதைக் கேட்கும்போது உங்கள் மனது எப்படி காயப்படுகிறது. அதுமாதிரித்தான் நீங்கள் முத்துராமலிங்கம் மீது வைக்கிற விமர்சனமும் அந்த மக்களுக்கு காயத்தைத் தரும். நான் எல்லோருக்கும் பொதுவான பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் என்னை குறுகிய வட்டத்தில் அடைக்கிறீர்கள்? நான் செய்வது தவறு என்றால் விலகிச் செல்ல்லாம். நம்பிக்கையிருந்தால் என்கூட வரலாம். அதைவிட்டு விட்டு நான் இங்கு போக வேண்டும், இங்கு போக்க்கூடாது என்று பிறர் சொல் கேட்டு நடப்பதற்கு, நான் என்னுடைய இயக்கியை பிறர் கையில் கொடுத்துவிட்டுச் செல்லும் ரோபோட் அல்ல. நான் சுதந்திரமான மனிதன்; பெரியாரையும், பிரபாகரனையும் நேசித்து, சிந்தித்து வளர்ந்த பிள்ளை. சாதியொழிப்பிற்குத்தான் இதை நான் செய்கிறேன். நீங்கள் சாதியக் கண்ணாடியோடு இதைப் பார்ப்பதால்தான் உங்களுக்கு சாதி தெரிகிறது. இப்படிப் பார்ப்பவர்களைத்தான் சாதிவெறியர்கள் என்று நான் சொல்வேன். எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்குத்தான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று ஜெகத் கஸ்பர் குற்றம் சாட்டியிருக்கிறாரே? எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டியதில்லை! எல்லாக் கட்சியிலேயும் தான் எனக்கு சீட் தர தயாராக இருக்கிறார்களே!! நான் ஒரு இனத்திற்கு நாடு அடையத் துடிக்கிற போராளி. எம்.பி., எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டுப் போகலாமே! இவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதே இல்லை. இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லையே. பணம், புகழ்தான் முக்கியம் என்றால் அதற்கு நான் இருக்கிற திரைத்துறையே வசதியானது. ஜெகத் கஸ்பார் குறை கூறுவதற்கு வழியே இல்லாமல், இதைக் கூறுகிறார். இதை மக்கள் யாராவது நம்புவார்களா? எம்.பி. ஆக விரும்புகிற எவனாவது தமிழ்த் தேசியம், தன் இனத்திற்கு ஒரு நாடு என்றுபேசி சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்புவானா? தமிழ்த் தேசியம் என்று பேசும்போது மொழிச் சிறுபான்மையினருக்கான இடம் என்ன என்ற கேள்வி பொதுவாக எழுகிறதே? எல்லாருக்குமான இடம் இங்கே இருக்கிறது. வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்று சொல்கிறோம். கேரளாவை மலையாளிகள் தவிர வேறுயாரும் ஆளவில்லை; ஆந்திராவை தெலுங்கு பேசுகிறவர்கள் தவிர வேறு யாரும் ஆண்டதில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் தவிர எல்லோரும் ஆண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக்க் கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம். திராவிட அரசியலால்தான் கெட்டோம் என்று நீங்கள் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது திராவிடம் என்ற சொல்லாடலை நாங்கள் எதிர்த்தால், உடனே சீமான் பெரியாரை எதிர்ப்பதாகக் கூறக்கூடாது. நான் தமிழனா, திராவிடனா என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மும்பையில் பேசியபோது பால் தாக்கரேயை ‘பெருமகன்’ என்று சொல்லிவிட்டேன் என்று குதிக்கிறார்கள். ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரே பற்றிப் பேசும்போது, அவன் இவன் என்று பேசச் சொல்கிறீர்களா? இதுவா பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு? சோனியா காந்தியைப் பற்றிப்பேசும்போதுகூட மதிப்பிற்குரிய சோனியா காந்தி என்றுதான் சொல்கிறோம். ஏன், போர்ச்சூழலில்கூட அண்ணன் பிரபாகரன், ராஜபட்சேவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் என்றுதான் பேசினார். ஓரிடத்தில்கூட ‘அவன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதுதான் பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அரிப்பு இருக்கிறது பேனா இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் குதர்க்கமாக எழுதக்கூடாது. திராவிட அரசியலை எதிர்க்கிறேன் என்று சொல்வது திமுகவையும், அதிமுகவையும்தான். திமுக ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருக்கும் மாலதி ஒரு பார்ப்பனர். திராவிடக் கட்சியின் தலைவராக அதிமுகவில் இருப்பது ஒரு பார்ப்பனர்தானே! எனவே அரசியல்தளத்தில்தான் திராவிடம் என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம். சமூகத் தளத்தில் ஆதரிக்கிறோம். சமூகத் தளத்தில் சாதியை ஒழிக்க பெரியார் திராவிடர் கழகம் போராடுகிறது. நாங்களும் அவர்களுக்குத் துணை நிற்கிறோம். ஆனால் அரசியல்தளத்தில் சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்தி திராவிடக் கட்சிகள் சாதியை வளர்க்கின்றன. பெரியாரை முழுமையாக ஏற்றுச் செயல்படும் நாங்கள், இதை எப்படி அனுமதிப்போம்? இவர்களை ஒழிக்காமல் எப்படி தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பது? திராவிடம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த இவர்களால் தமிழினத்திற்கு, மொழிக்கு என்ன பயன் வந்தது? வார்த்தைப் பிரயோகத்தில் அண்மையில் வந்த ஒரு சர்ச்சை, ஈனசாதிப்பயலே என்று நீங்கள் கூறியது? தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நம்மவர்களைக் கொன்று குவித்த சிங்களவனுடான கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கிற இனவுணர்வு அற்றவர்களை, இழிவான மக்கள் என்று குறிப்பதற்குத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதை சாதி வன்மத்துடன் பேசியதாகப் பார்க்கக்கூடாது. எனக்கு அத்தகைய எண்ணமும் இல்லை. எந்த நோக்கத்திற்காகப் பேசினேன் என்பதைப் பார்க்காமல், அந்த சொல்லையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. தேவர் சிலைக்கு மாலை போடப்போனபோது, அங்கே ஒரு அப்பத்தா, ‘ஐயா ராசா, உன்னை சினிமாவுலே பார்த்தது’ என்று எனக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசியது. அந்நேரம் அங்கே இருந்த ஊடகங்கள் அதைப் பதிவு பண்ணின. உடனே பெரியார் பேரன் திருநீறு பூசிக் கொண்டார் என்று அலறுகிறார்கள். அவர்கள் அன்போடு பூசும்போது, ‘சீச்சி! என்ன அசிங்கம்’ என்று அதை தட்டிவிடச் சொல்கிறார்களா? இதுவா பெரியார் நமக்கு சொல்லிக் கொடுத்த பண்பாடு? பெரியாரே குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசியபோது ஏற்றுக்கொண்டாரே! அவருக்கு ஒரு நியாயம், அவர் பேரனுக்கு ஒரு நியாயமா? அதேபோல சே குவேராவைப் பற்றி சொன்னதும் ஒரு ஆதங்கத்தில்தான். நாம் நேசிக்கும் கியூபா, ஈழத்திற்கு எதிராக கையெழுத்திட்டபோது எழுந்த ஆதங்கத்தில் சொன்னது அது. அதற்காக சே குவேராவைத் தூக்கி எறிந்துவிட்டேனா என்ன! இதோ அலுவலகத்துச் சுவரிலெல்லாம் அவர் படம்தான் இருக்கிறது. விமர்சிக்கிறவர்கள் விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரிப்பு இருக்கிறது என்பதற்காக என்னை சொரியக்கூடாது. திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கம் இருக்குமா அல்லது அவர்களோடு சேர்ந்து நிற்கும் சூழல் வருமா? எனக்குப் பதவி ஆசை கிடையாது. இருபது வருடங்கள்கூட காத்திருக்கத் தயார். இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கத்தை மாற்றுவேன். நானே இறந்துவிட்டால்கூட, எனக்கு அடுத்து வரும் தம்பிமார்கள் நான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் இந்த இனத்திற்கான, மொழிக்கான ஒரு அரசை அமைப்பார்கள். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக