ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

ஒடுக்கபபட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே

இம்மானுவேல் சேகரன் என்கிற‌ பெயர் சாதிய சமூக‌ அமைப்பு நீடிக்கும் வரை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய அடையாளமாக நினைவுத்தூண் போன்று சாட்சியம் அளிக்கும் . யாரைக் கடித்து குதறலாம் என்று நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு உலகை வலம் வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் என்கிற‌ வெறி நாயின் நடு மண்டையில் விழுந்த கல்ல‌டியாய் 9/11 குறிக்கப்படும். செப்டம்பர் 11, பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் தன் குருதியை விதையாய் விதைத்த நாள். 1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள், தென்மாவட்டங்களில் அப்போது நடந்த தேர்தலுக்கு பின் நடந்த ஆதிக்க‌ சாதி ஒடுக்குமுறையின் மீது அமைதியை(!) நிலைநாட்ட இராமநாதபுரம் ஆட்சியரால் கூட்டப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் வெவ்வேறு சமூகத்தை (சாதி) சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அக்கூட்டத்திற்கு ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதியாக,தலைவராக‌ இம்மானுவேல் சேகரனும் அழைக்கப்பட்டிருந்தார். இது பார்ப்பனியத்தின் அடியாளான முத்துராமலிங்கத்துக்கு பொறுக்குமா ? பொறுக்கவில்லை, இம்மானுவேலை எப்படி இந்த கூட்டத்திற்கு அழைக்கலாம், இம்மானுவேல் தனக்கு சமமான தலைவனா என்றெல்லாம் கொதித்து போய் கேள்வி எழுப்பினார்.இதற்கு தியாகி இம்மானுவேல் சேகரன், தான் தேவருக்கு சமமான தலைவனா இல்லையா என்பதைப் பற்றி தன்னை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும் என்று பதிலளித்தார். கூட்டத்திலிருந்து கடுகடுவென்று வெளியே வந்த முத்துராமலிங்கம்,தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்த ஒருவன் தனக்கு சரிசமமாக காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு வளரவிட்டு விட்டீர்களே என்கிற தனது சாதிவெறியை தொண்டர்களிடம் கொட்ட‌.அந்த கோபத்தை தணிக்கும் பொருட்டு அடுத்த நாளே (செப்டம்பர் 11ம் நாள்) தேவர் சாதிவெறியர்கள் இம்மானுவேல் சேகரனை கொடூரமாக வெட்டி சாய்த்தார்கள்.தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 52ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமகுடியில் இவ்வருடமும் நினைவஞ்சலிக்காக ஆதிக்க சாதிக்கெதிரான தன் வலிமையை காட்டும் குருபூஜைவிழா 11-09-09 அன்று நடைபெற்றது. மதுரையில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள பரமகுடியில் இவ்விழா வருடந்தோரும் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து பரமகுடி நோக்கி போகும் வழி நெடுகிலும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள பிளெக்ஸ் பேனர்களில் தியாகி இம்மானுவேல் சேகரன் கம்பீரமாக வரவேற்கிறார்.அம்மாவீரனின் கம்பீர தோற்றம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஒன்று குவிந்துள்ள ஆதிக்க சாதிகெதிரான சினமாக‌ காட்சியளிக்கிறது. நினைவஞ்சலி செலுத்த வரும் மக்கள் வண்டிகளில் வரும் போது சில அவசர காரியமாக‌ மரத்தின் ஓரமாக‌ வண்டியை நிறுத்தினாலும் காவல் துறையினர் கலகலத்து போய் விடுகிறார்கள்.ஆளும் வர்க்கத்தின் ஏவல் ஆட்களான இந்த காவல்துறையினர் ஆதிக்க சாதி பெரும்பாண்மையினர்‌ வாழும் ஊர்களின் எல்லைகளிலும், முத்துராமலிங்கத்தின் சிலையை சுற்றிலும் கண் இமைக்காமல் காவல் காக்கின்றனர். தலித் மக்கள் அவ்வூர்களில் எல்லாம் நுழைந்து கலகம் செய்வதற்காகவே வருவது போலவும் அதை தடுப்பதற்காகவே இவர்கள் இருப்பது போலவும் சிறப்பு அதிரடி படை,அந்த படை,இந்த படை என்று பரமகுடியை சுற்றி குவிந்து கிடக்கிறார்கள். இந்த‌ காவல்துறை அடிமைகள் முத்துராமலிங்கத்தின் குருபூஜை நடக்கும் போதும் பாதுகாப்புக்கு(!) வருவார்கள். ஒடுக்கபட்ட மக்கள் மீது வன்மத்தை செலுத்துவதில் வெறி கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் தாங்கள் செல்லும் வழிகளில் எல்லாம் ஓநாய்களைப் போல தமது இரத்தவெறிக்கு தாழ்த்தபட்ட மக்கள் வாழும் ஊர்களில் புகுந்து நாசம் செய்யும் போது மட்டும் கிராபிக்ஸ் காட்சி மாதிரி காணாமல் போய்விடுவார்கள். தியாகி இம்மானுவேல் சேகரன், அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த நுழைவு வளையத்திலிருந்துபரமக்குடி துவங்குகிறது. அங்கிருந்து சுமார் 3கி.மீ தொலைவில் நினைவிடம் உள்ளது.ராணுவ உடையில் காட்சியளிக்கும் அம்மாவீரனின் அணியில் இளைஞர்கள் சேருவது போல் நினைவிடத்தை நோக்கி அணி வகுத்து செல்கின்றார்கள். பல கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கபட்டும் நசுக்கப்பட்டும் வருகிறார்கள். சிதைக்கப்படும் தமது வாழ்க்கை பற்றி உள்ளத்தில் புகைந்திருக்கும் தன் உள்ளக் குமுறல்களை, உணர்ச்சியை சிலம்பாட்டம், தப்பாட்டத்துடன் கூடிய கிராமிய கலையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்த்து தன் இன்னுரை நீத்த ஈகைக்கு நன்றி செலுத்தும் நாளாக இவ்விழாவில் பால் குடம் ஏந்தி தன் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர். ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் இம்மக்கள் தமது அவலங்களுக்கெல்லாம் தீர்வு என்ன என்று திக்குத்தெரியாமல் தவிப்பது அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் அவர்களின் அவலங்களை தன் கட்சியின் விளம்பரத்திற்காகவும், அவர்களின் ஓலங்களை தன் கட்சியின் ஒலிபெருக்கிக்காகவும் பயன்படுத்தி தேர்தலில் ஆளும் வர்க்கத்துடனும்,ஆதிக்க சாதி வெறியர்களுடனும், ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சியினருடனும் தஞ்சம் அடைந்த தலைவர்களோ மக்கள் நடந்து செல்லும் வழி முழுதும் தியாகி இம்மானுவேல் சேகரன் பேனரில் பளிச்சென பல்லிளித்து போஸ் கொடுக்கிறார்கள். ம‌க்கள் அதையும் பார்த்து எந்த உணர்ச்சியுமற்று கடந்து தான் செல்கிறார்கள். தன்னை ஆண்ட பறம்பரை என்று கூறும் ஆதிக்க சாதியினரிடம் அடிமைசாதியாய் ஒருபுறம். தன்னை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தனக்கான தலைவனிடம் தான் அடிமை என்று உணராமலேயே அடிமையாய் இருப்பது மறுபுறம். இதுதான் இன்று தாழ்த்தபட்ட மக்களின் நிலை, மிகவும் அவலமான‌ நிலை. இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்று அப்பாவித்தனமாய் (!) கேட்பவர்க‌ளும், மக்கள் போராடுவதற்கு தயாராக இல்லை என்றும் அரசு தான் எதையாவது பார்த்து செய்ய வேண்டும் என்று அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் சமரசவாதிகளும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். சாதி கொடுமையென்றால் என்ன என்பதையும் அதற்கெதிரான மக்களின் எழுச்சியையும் அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொளும் போராட்டங்களையும் காண வேண்டும். ஆனால் ஆண்ட பர‌ம்பரையினருக்கு எதிராக தாங்களும் ஆண்ட பர‌ம்பரையினரே என்று தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவது ஆண்ட பர‌ம்பரையினர் என்னும் குலப்பெருமையில் வாழ ஆசை படுவதையே காட்டுகிறது. ஆனால் தாழ்த்தபட்டவர்கள் ஒருகாலத்தில் வரலாற்றில் ஆண்டபறம்பரையினராய் இருந்திருந்தாலும் அவர்கள் ஆண்ட பரம்பர‌ையாய் வாழ்ந்ததற்கு ஒரு அடிமை சமூகமும் இருந்திருக்கும். இன்று இவர்கள் எவ்வாறு அடிமை தீயால் வேகின்றனரோ இதே அடிமை தீ அன்று அந்த அடிமைகளையும் சுட்டிருக்கும். ஆண்ட பர‌ம்பரையினர் எனும் ஆதிக்க சாதியினர் தேவர் என்றால் நாங்கள் தேவேந்திரர் என்றும், தாழ்த்தபட்ட மக்களுடன் எங்களை சேர்க்க வேண்டாம் என்றும், நாங்கள் தாழ்த்தபட்ட மக்கள் அல்ல என்றும் என்று சிலர் கூறுவது சற்று வேதனையான உண்மை. நினைவிடத்தில் மக்கள் எழுச்சியை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு துண்டு பிரசுரம் கைக்கு கிடைத்தது. இதில் சில கருத்துகள் மக்களை ஏய்க்கும் ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பது பற்றி இருந்தாலும் கீழ்காணும் கருத்துக்கள் நெருடலை உண்டாக்குபவையே. தேவேந்திரகுலப் பெருமக்களே! 1. தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே அரசியலாக்குவோம் தலித்திய வியாபாரிகளிடமிருந்து விலகி நிற்போம்! 2. சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்ற பெயரிலேயே தலைவரை அடையாளப்படுத்துவோம்! 3. தேவேந்திரர்களை ஏமாற்றும் இந்திய, திராவிட மாயையிலிருந்து விடுபட்டு, தமிழ் தேசியம் குறித்துப் பார்வையைச் செலுத்துவோம் 4. தேவேந்திரர்களை ஆதிதிராவிடராக மாற்றும் அரசியல் சதியை முறியடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக