ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

''சாதி வெறி மிக மோசமானது!''

ரமக்குடியில் கடந்த 11-ம் தேதி நடந்த தியாகி இம்மானுவேல் குருபூஜை அமைதியாக நடக்குமா என்று, பொதுமக்களும் அரசு தரப்பும் மிக உன்னிப்பாகக் கவனித்துவந்தனர். காரணம், கடந்த ஆண்டு நடந்த மோசமான கலவரமும் அதைத் தொடர்ந்து 6 தலித்துகள் போலிஸாரால் கொல்லப்பட்டதும்தான்.
 இந்த நிகழ்வை சரியாக ஒருங்கமைத்தது பரமக்குடியில் செயல்படும் தேவேந்திர பண்பாட்டுக் கழகம். எந்தவொரு தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளின் மேடையாக இம்மானுவேல் நினைவிடத்தை ஆக்காமல் இவர்கள் பார்த்துக்கொண்டனர். இவர்களே தலித் இளைஞர்களைத் தன்னார்வத் தொண்டர்களாக நியமித்து இருந்ததால், போலிஸுக்கு வேலை இல்லாமல் போனது. ஆனாலும், காவல்துறை மீதும் ஜெயலலிதா அரசு மீதும் கோபம் குறையவில்லை என்பதை வருகைதந்த தலித் மக்களின் உணர்வுகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
வழக்கமான தமிழகத் தலைவர்களின் வருகைக்குள், வட இந்தியாவிலிருந்து வந்த ராம் விலாஸ் பஸ்வான்,  பஞ்சாப்பிலிருந்துவந்த பி.எஸ்.பி. கட்சித் தலைவர்கள் தேவேந்திர மக்களை ஆச்சரியப்பட வைத்தார்கள். இருந்தும், இவ்வளவு மாஸ் தலைவர்களின் வருகையையும்  பீஸ் பீஸாக்கியது ஒரு கல்லூரிப் பெண்ணின் வருகை. அவர் ஒரு அமெரிக்கப் பெண்!
தமிழகத்துப் பெண்போல சுரிதார் அணிந்துகொண்டு,  பின்னல் ஜடை போட்டு, பூ, பொட்டு வைத்துக்கொண்டு மலர் மாலையோடு அஞ்சலி செலுத்தவந்தார். '' அமெரிக்க பல்கலைக்கழக மாணவி விக்டோரியா, சாதி ஒழிப்பு போராளிக்கு வீர வணக்கம் செலுத்தவந்துள்ளார். அவருக்கு தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று, மைக்கில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு கேட்டவுடன் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற தேவேந்திர மக்கள் எல்லோரும் திரும்ப வந்து  விக்டோரியாவை சூழ்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்களின் அன்பு மழையில் நனைய ஆரம்பித்துவிட்டார் விக்டோரியா. அஞ்சலி செலுத்திவிட்டு பந்தலில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்க ஆரம்பித்தவரிடம் பேசினேன்.
'’அமெரிக்காவில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?''
'’என் சொந்த ஊர் நியூயார்க். கொலம்பியா யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டு இருக்கிறேன். சின்ன வயசில் இருந்தே இந்தியாவைப்பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அதிலும் தமிழகத்தைப்பற்றி அதிகம்தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆய்வு படிப்புக்காகத் தென்னிந்தியாவில் இருக்கும் சாதிப் பிரச்னைகள்பற்றி ஆய்வு செய்ய கடந்த வருடம் சென்னைவந்தேன்.''
''தமிழ்நாட்டில் நிலவிவரும் சாதிக் கட்டமைப்புபற்றி எந்த அளவுக்குத் தெரிந்துகொண்டீர்கள்?''
''சாதி ஏற்றத்தாழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்கிறது. இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. அவர்களின் நிலை மிக மோசமானது. அதைத்தான் என்னுடைய ஆய்வில் சேகரித்துக்   கொண்டு இருக்கிறேன்''
''கடந்த வருஷம் நடந்த கலவரம்பற்றித் தெரியுமா?''
''அப்போது நான் சென்னையில் இருந்தேன். தகவல் கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்''
''இம்மானுவேல் சேகரன்பற்றித் தெரியுமா?''
''தெரியும்.  தாழ்த்தபட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியதற்காகக் கொல்லப்பட்டார். அதற்காகத்தான் மக்கள் அவரை தெய்வமாக வழிபடுகிறார்கள். இவ்வளவு மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டுவருவதைப் பார்க்கும்போது அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. சாதி வெறி மிக மோசமானதுதான்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக