அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த கி.பி. 1528-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு தொலைந்துபோனதாகத் தெரிகிறது. ஆனால், பட்டியல் இன (தேவேந்திர குல வேளாளர்) மக்களுக்கு பழநி முருகன் கோயிலில் இருந்த உரிமைகளுக்கு ஆதாரமாக இருந்த அந்த செப்பேடு காணாமல் போனதில் சதி இருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
கடந்த 1995-ம் ஆண்டு பழநி முருகன் கோயில் அடிவாரத் தில் இருக்கும் பள்ளர் மடத்திலிருந்து செப்பேடு ஒன்று மதுரை அருங்காட்சியகம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை அன்றைய காப்பாட்சியர் சுலைமான் ஆய்வு செய்தார். இதுகுறித்து 1995-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழில் கட்டுரை வெளியானது.
மேற்கண்ட செப்பேடு 52.5 செ.மீட்டர் உயரமும், 30.5 செ.மீட்டர் அகலமும் கொண்டது. செப்பேட்டில் 279 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட் டிருந்தன. கி.பி. 1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடு இது. அதில் மதுரையை ஆட்சி செய்த கிருஷ்ண வீரப்ப நாயக்கர், கஸ்தூரி ரங்கப்பா நாயக்கர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அதில் பள்ளர் சமூகத்தினருக்கு (தற்போதைய பட்டியலின சமூகத்தினர்) பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி ஆறுகால பூஜைகள் செய்வது, விழாக்காலங்களில் கோயிலில் கொடி ஏற்றுவது, பிராமணர்கள் நடத்தும் யாகசாலை பூஜை களுக்கு ஏற்பாடு செய்து தருவது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் தருவது ஆகிய கடமைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்தக் காலகட்டத்தில் தேவேந்திர பள்ளர், சோழிய பள்ளர், பாண்டிய பள்ளர், கொங்கு பள்ளர், குமண மரங்கொத்தி பள்ளர், மகாநாட்டுப் பள்ளர், மாநாட்டுப் பள்ளர், வேட்டைப் பள்ளர், மீசார் பள்ளர் உள்ளிட்டோர் காசி (இன்றைய அவினாசி), கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் வசித்தனர் என்றும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்து அதில் ஆறில் ஒரு பகுதியை நாயக்கர் மன்னர்களுக்கு வரியாக செலுத்தி னர் என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர, தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பழநி உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு செலவிட் டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995-ம் ஆண்டு மதுரை அருங் காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்த சுலைமான் அன்றைய நாளில் ‘தி இந்து’விடம், ‘இந்த செப்பேடு ஒரிஜினல் கிடையாது. ஒரிஜினல் கிருஷ்ணதேவராயர் காலத்துக்கும் முற்பட்டது. அது தொலைந்துபோன பின்பு மீண்டும் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நகல் இது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான் இந்த செப்பேடு மதுரை அருங்காட்சியகத்தில் இல்லை என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.
செப்பேடுகள் குறித்து ஆய்வு செய்துவரும் ஒரிசா பாலு இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறுகையில், “மேற்கண்ட செப்பேடு குறித்து கேள்விப்பட்டு அதை ஆய்வு செய்வதற்காக மதுரை அருங்காட்சியகம் சென்றேன். ஆனால், அப்படி ஒரு செப்பேடு அங்கு இல்லை என்று கூறினர். தொடர்ந்து சென்னை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அருங்காட்சியகங்களில் விசாரித்தபோதும் அதைப் பற்றிய தகவல்கள் இல்லை.தேவேந்திர குல வேளாளர்களுக்கு கி.பி.1500- களிலேயே கோயிலில் பூஜை கள் செய்யும் உரிமைகள் இருந்த தற்கான ஆதாரமாக அந்த செப்பேடு இருந்தது. எனவே, அது காணாமல்போன பின்னணியில் சதி இருக்கலாம் என்று கருதுகிறேன்” என்றார்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கிருஷ்ணசாமி, “இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கேட்க இருக்கிறேன்” என்றார். பட்டியலின சமூகத்து மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், “ஏற்கெனவே தலித் மக்களின் வரலாற்றுத் தரவுகள், ஆவணங்கள், கல்வெட்டுகள் மிகக் குறைவு. கிராமப் பகுதிகளில் ஊருக்கு இருந்த தலித் மக்கள் சம்பந்தப்பட்ட கல்வெட்டுகள், சுமைதாங்கிகள் எல்லாம் ஏற்கெனவே அழிக்கப் பட்டுவிட்டன. எனவே, இதன் பின்னணியில் ஆதிக்க சாதியினர் சதி இருக்கலாம்” என்றார்.
மதுரை அருங்காட்சியக காப்பாட்சியராக இருக்கும் பெரியசாமியிடம் பேசினோம். “நீங்கள் சொல்லும் செப்பேடு எனக்கு நினைவு தெரிந்து இங்கு இல்லை. சேதுபதி மன்னர் காலத்தை சேர்ந்த ஒரே ஒரு செப்பேடு மட்டுமே இங்கு இருக்கிறது” என்றார். 1995-ம் ஆண்டு காப்பாட்சியராக இருந்த சுலைமானிடம் பேசினோம். நீண்ட நேரம் யோசித்து நினைவுக்கு கொண்டுவந்தவர், “அந்த செப்பேட்டை கொடுத்தவர்களே வாங்கிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் பழநி அடிவாரத்தில் இருப்பதாக நினைவு...” என்றார்.
வரலாற்றுப் பொக்கிஷமான அந்த செப்பேட்டை கண்டுபிடிப்பது அரசின் கடமை.
அந்த செப்பேடு 52.5 செ.மீட்டர் உயரமும், 30.5 செ.மீட்டர் அகலமும் கொண்டது. செப்பேட்டில் 279 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கி.பி. 1528-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தயாரிக்கப்பட்ட செப்பேடு இது. அதில் மதுரையை ஆட்சி செய்த கிருஷ்ண வீரப்ப நாயக்கர், கஸ்தூரி ரங்கப்பா நாயக்கர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக