சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் பேசியபோது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலளித்தார்.
அப்போது, ‘‘ஜனநாயக ரீதியாக போராடினால் கைது செய்வதில்லை. நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தால் கைது செய்யப்படுவார்கள்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் பி.தனபாலிடம் கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. குணசேகரன் விவாதித்து முடித்த பிறகும் அனுமதி கேட்டு பாலபாரதி எழுந்து நின்றார். அப்போதும் அவர் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
எனவே, மைக் தராத நிலையிலும் பாலபாரதி பேசிவிட்டு, வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதுபோல புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமியும் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால், அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார். ஆனாலும் வெளிநடப்பு செய்த அனைவரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலளிப்பதற்கு முன்பதாகவே அவைக்கு திரும்பிவிட்டனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தி, அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பாலபாரதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அவர், ‘‘நானும், அண்ணாதுரை எம்.எல்.ஏ.யும் நடுச்சாலையில் அமர்ந்து போராடவில்லை. மக்கள் போராடும்போது போலீசார் தடியடி பிரயோகம் செய்யாமல், பிரச்சினையை சுமுகமாக முடிக்க முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
வெளிநடப்பு செய்த நிலையில் சட்டசபைக்கு வெளியே பேசிய பாலகிருஷ்ணன், ‘‘கற்பழிப்பு குற்றம் தொடர்பாக முதல்–அமைச்சர் அளித்த விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. சிறுமிகள் கூட கற்பழிக்கப்படுகின்றனர். மேலும் முதல்–அமைச்சர் கூறும் கருத்துக்கு பதிலளிக்க எங்களுக்கு அவகாசம் வழங்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக