ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கடந்த 27ம் தேதி தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், கடந்த 10ம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகி முத்துப்பாண்டியன் ஆகிய 2 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் சுரண்டை இடையர் தவணை ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம், விருதுநகர் மாவட்டம் முத்துசுப்பையாபுரம் சண்முகம் என்ற சண்முகசுந்தரம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூர் செல்வம் என்ற புறா மாடசாமி, பிரபு, நட்டு என்ற நடராஜன், ராஜபாளையம் சொக்கநாதன்புதூர் பாட்ஷா என்ற மாடசாமி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தாரா என்ற தாராசிங் ஆகிய 8 பேர் வள்ளியூர், சென்னை, மேட்டுப்பாளையம், நெல்லை நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான ஆறுமுகச்சாமி, அருளானந்தம், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேர் விசாரணையின்போது கொடுத்த தகவல்களை வைத்து கார், கத்தி, ரத்தக்கறை படிந்த உடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் கொலைக்கான பின்னணி பற்றிய தகவலும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணைடந்த புறா மாடசாமி மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் திண்டுக்கல் 2வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் லதா முன்னிலையில் நேற்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை போலீஸ் காவலிலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி துணை சூப்பிரண்டு நடராஜமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
பசுபதி பாண்டியனை கொலை செய்ய புறா மாடசாமி, பிரபு ஆகியோர் சதித் திட்டம் தீட்டினர். இந்த கொலை சம்பவத்துக்கு ஆதரவாக அவர்கள் பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றவும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் அந்த இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து வரும் 9ம் தேதி மதியம் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
புறா மாடசாமியின் நிஜப்பெயர் செல்வம். அவரது தந்தை பெயர் மாடசாமி. செல்வம் சிறு வயதில் இருந்தே புறா வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்ததாலும், புறா பிடிப்பதில் திறமைசாலி என்பதாலும் அவருக்கு புறா மாடசாமி என்ற பெயர் கிடைத்துள்ளது.
தனது சொந்த ஊரான முகவூரில் ஏற்பட்ட பிரச்சனையால் புறா மாடசாமி தனது காதலியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் வந்துவிட்டார். அவர் பசுபதி பாண்டியன் வீட்டருகே வீடு எடுத்து தங்கி இருந்தார்.
முதலில் திண்டுக்கல்-கரூர் ரோட்டில் ராஜாக்குளத்துக்கரையில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். பின்னர் அந்த கடையை இரு சக்கர வாகன ஒர்கஷாப்பாக மாற்றினார். இதற்கிடையே கொலையாளிகளின் அறிமுகம் கிடைத்து அவர்களுடன் சேர்ந்து பசுபதி பாண்டியனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்.
தனது வீட்டில் இருந்தே பசுபதி பாண்டியனின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளார். மேலும் கொலையாளிகளை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார். கொலையாளிகள் மாடசாமியின் காரில் தான் ஆயுதங்களுடன் கொலை செய்ய நேரம் பார்த்து சுற்றித் திரிந்துள்ளனர். அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் கைப்பற்றப்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக