மார்ச் 18-ல் தேர்தலைச் சந்திக்க இருக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்களுடைய வேட்பாளர்களைக் களம் இறக்கி விட்டன. ஆளும் அ.தி.மு.க-விடம் இருந்து தொகுதியைத் தட்டிப்பறிக்க பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போட்டி போடும் நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய அலசல்...
முத்துச்செல்வி: இந்தத் தொகுதியில் போட்டியிட நான், நீ எனப் பலரும் அ.தி.மு.க-வில் வரிந்து கட்டிய சமயத்தில், யாருமே எதிர்பார்க்காமல் இவரது பெயரை ஜெயலலிதா அறிவித்தார். இதனால், இந்தத் தொகுதியில் ஸீட் கேட்டுக் காத்திருந்த பலருக்கும் கடும் அதிருப்தி. அதனால் உள்கட்சியிலேயே சிலர் எதிராகக் காய் நகர்த்துகிறார்கள்.
தொகுதியில் இருக்கும் கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் இதுவரை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், சசிகலா குடும்பத்தினர் மீதான அதிரடி நடவடிக்கைகள் அந்த சமூகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருப்பதால், இந்த முறை அந்த வாக்குகள் மொத்தமாகக் கிடைப்பது சந்தேகமே. இது போன்ற பிரச்னைகளை சமாளிக்கத்தானோ என்னவோ, 34 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேர் கொண்ட மெகா குழுவை அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
வெற்றி வாய்ப்பு குறித்து முத்துச்செல்வியிடம் பேசினோம். ''கடந்த தி.மு.க ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் சீர்படுத்தி செம்மையான ஆட்சியை அம்மா நடத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அம்மா செயல்படுத்தி வருகிறார். அதை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பேன். மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச் சென்றிருக்கும் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பு கொடுக்கும்படி வாக்காளர் களிடம் கேட்பேன், வெற்றி பெறுவேன்'' என்றார் பவ்யமாக.
ஜவஹர் சூர்யகுமார்: தி.மு.க-வில் ஸீட் கேட்டு உள்ளூர், வெளியூர்ப் பிரமுகர்கள் பலரும் காத்திருந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஜவஹர் சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி தரப்பில் இருந்து அவரவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவு வந்து இருப்பதால், தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலை செய்கிறார்கள்.
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த இவர், இடையில் ம.தி.மு.க. பக்கம் தாவி, அதன் பின்னரே தி.மு.க-வுக்கு வந்தவர் என்ற அதிருப்தி இருக்கிறது. தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையே நம்மிடம் பேசிய அவர், ''தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது வழக்குப் போட்டு பழிவாங்குவதில் காட்டும் அக்கறையில் பாதியைக்கூட மக்கள் நலனை மேம்படுத்துவதில் இந்த அரசு காட்டவில்லை. ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 மணி நேரமானதுதான் சாதனை. சமச்சீர்க் கல்வி, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூலகம் போன்றவற்றை முடக்க நினைப்பதை மக்களிடம் எடுத்துச் சென்று நியாயம் கேட்பேன். எங்களுக்குத்தான் வெற்றி'' என்றபடி கிளம்பினார்.
சதன் திருமலைக்குமார்: வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள் வருவதால், சொந்த பலத்தைப் பரிசோதிக்க நினைத்து ம.தி.மு.க. தனியே களம் இறங்குகிறது. வேட்பாளரான டாக்டர் சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகம். இதே தொகுதியில் 1996-ல் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த இவர், 2005-ல் பக்கத்துத் தொகுதியான வாசுதேவநல்லூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-ஆக இருந்தவர். வைட்டமின் 'ப' இல்லாமல் களம் இறங்கி இருப்பது ம.தி.மு.க-வுக்கு மைனஸ். ஆனாலும், ஆளும் கட்சிக்கு இணையாக ஒரு மாதத்துக்கு முன்பே பிரசாரக் களத்தில் இருப்பது சாதகம்.
சதன் திருமலைக்குமாரிடம் பேசியபோது, ''இந்த அரசு மீதும் மக்களுக்கு ஏமாற்றம் வந்துவிட்டது. அதனால், எங்களை மாற்று சக்தியாக மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும் இந்த மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்போது இருக்கும் அ.தி.மு.க.வும் எதையும் செய்வதாகத் தெரியவில்லை. கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் நலனுக்காகப் பாடுபடும் வைகோவை இந்த மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமையும்'' என்றார் நம்பிக்கையுடன்.
முத்துக்குமார்: தே.மு.தி.க-வுக்கு இந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றபோதிலும், ஜெயலலிதாவிட்ட சவாலை எதிர்கொள்வதற்காகவே தனித்துக் களம் இறங்கி இருக்கிறது. வேட்பாளரான முத்துக்குமார் 2006 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு 5,531 வாக்குகள் பெற்றவர். விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இங்கு முகாமிட்டு, கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்யும் திட்டம் இருக்கிறது.
கம்ப்யூட்டர் இன்ஜீனியரான முத்துக்குமாரிடம் பேசுகையில், ''பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்றவற்றால் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேண்டாதவர்களைப் பழிவாங்கும் செயலில் மட்டுமே தீவிரம் காட்டுவதால், அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அது, இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும்'' என்றார் உற்சாகமாக.
வாக்காளர்களின் மனதில் இருப்பது யாரோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக