புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.
ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.
நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.
எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.
சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக