தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் 'நாடர்கள் மூவேந்தர் மரபினர்' என்று திருவாய் மலர்ந்து அருளியதற்க்கு, 'மள்ளர்கள்' சார்பில் செந்தில் மள்ளர் அவர்கள் 'இந்தியன் ரிப்போர்டர்' வார இதழுக்கு (1 திசம்பர் 2012) அளித்துள்ள கட்டுரை இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ளது. வாசிப்பதற்கு இலகுவாக, அந்த கட்டுரை இங்கே தட்டச்சு செய்யப்பட்டு பதிப்பிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் பாட புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்துக்கள் இருப்பதாக பெரும் போராட்டமே கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நடந்தது. இதை முடித்துவைப்பதாக நினைத்து இன்னொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
மத்திய பாடத்திட்டத்தில் நாடார்கள் இழிவுப் படுத்தப் பட்டிருப்பதைப் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, 'தமிழ் நாட்டை ஆண்ட பரம்பரையான நாடார்களை கேவலப்படுத்தியிருக்க கூடாது' என்று சொல்லி இருந்தார்.
இதற்க்கு காட்டமாக விளக்கம் அளிக்கிறார் 'மள்ளர் மீட்புக் களத்தின்' நிறுவனர் கு.செந்தில் மள்ளர்.
'நூற்றாண்டு கால நாடார் சமூகத்தின் வீரம் செறிந்த சமூக விடுதலைப் போராட்டத்தை மதிக்கிறோம். தலை வணங்குகிறோம்.பல்துறைகளிலும் நாடார் சமூகத்தின் நிகரற்ற வளர்ச்சி கண்டு மிக மகிழ்ச்சி அடைகின்றோம். நாடார் சமூகத்தை போல, எல்லா தமிழ் சமூகங்களும் முன்னேற வேண்டும் என்பதே எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் விருப்பமாகும்.
நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் செய்தியைப் பாடப்புத்தகத்தில் அரசே இடம்பெறச் செய்ததென்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது தான். நாடார் சமூகத்தை மட்டுமல்ல;எந்தவொரு சமூகத்தையும் இழிவுபடுத்துவதேன்பது கண்டனத்துக்குரியது.இதற்காக நீதி கேட்டு முதல்வர் செயலலிதா முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றோம்.
இந்த ஆண்டு காவல்துறை ஆய்வாளர் ஆல்வின் சுதன் என்பவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப் பட்டார்.ஒரு காவல் துறை அதிகாரி கொல்லப் பட்டும், இரு காவல் துறையினர் கத்தியால் குத்தப் பட்டும், தமிழக முதல்வர் துப்பாக்கி சூடு நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடவில்லை. அந்த சமூக விரோதிகளை வெளிப்படையாக கண்டிக்க கூட முன்வராத தமிழக முதல்வர் செயலலிதா, ஆல்வின் சுதன் நாடார் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தை திருப்திபடுத்த வரலாற்றைத் திரிக்கும் வேலையைச் செய்துள்ளார்.
'சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் தான் நாடார் சமூகத்தினர் என்று' எந்த வித சான்றுகளும் இன்றி செயலலிதா கூறியிருப்பது, அவரின் வரலாற்று அறியாமையையே காட்டுகிறது. நாடார்களையும், சேர,சோழ,பாண்டிய மரபினர்களான மள்ளர்களையும் அறிவுத்தளத்தில் மோதவிடும் ஆரிய சூழ்ச்சியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இதன் மூலம் ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்க்காக மள்ளர்,நாடார் சாதி கலவரத்தை உண்டு பண்ண செயலலிதா முயற்சிப்பதாகத் தெரிகிறது.
உலகிலேயே வளங்களுக்கேற்ப நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனப் பாகுபடுத்தி,இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மருத நிலா மக்களின் மரபுப் பெயரே 'மள்ளர்' என்பதாகும். 'மள்ளர்' என்பதற்கு 'உழவர்' என்றும், 'வீரன்' என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.
'அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும் வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்'
என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணம் ஆகும். இவ்வாறே 'மள்ளர்' என்ற சொல்லிற்கு பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும்,சூடாமணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளன.
எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற 'மள்ளர்களே' இன்றைய 'பள்ளர்கள்' என்பதை * டி.கே. வேலுப்பிள்ளை * ஞா.தேவநேயப் பாவாணர் * சோ.இலக்குமிதரன் பாரதி * எம்.சீனிவாச ஐயங்கார் * எ.வி.சுப்ரமணிய அய்யர் * வீரமா முனிவர் * கச்சியப்ப முனிவர் * திருவாடுதுறை ஆதீனம் * ந.சேதுரகுனாதன் * ஈக்காடு ரத்தினவேலு முதலியார் * இரா.தேவ ஆசீர்வாதம் * பேராசிரியர். குருசாமி சித்தர் * பேராசிரியர். தே.ஞான சேகரன் * அறிஞர் குணா * மேலைநாட்டு அறிஞர் முனைவர் வின்சுலோ * மேலைநாட்டு அறிஞர் சி.ஒப்பார்ட் * கே.ஆர்.அனுமந்தன் * யாழ்ப்பாணத்து அறிஞர்களான ந.சி.கந்தையாப் பிள்ளை * பண்டித சவரிராயர் ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர்.
* சேலம் மாவட்ட குடிக்கணக்கும் (1961) * கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டும் மள்ளர்களே 'பள்ளர்கள்' என்று பதிவு செய்துள்ளது.
பள்ளர் என்னும் மள்ளர்களே 'பாண்டிய மரபினர்' என்பதை முக்கூடற்ப் பள்ளு (செய்யுள்: 91), திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு (செய்யுள் 35,149,159), திருமலை முருகன் பள்ளு ,ஏழு நகரத்தார் பேரிற் பள்ளு (செய்யுள்: 3,4,7,8,13,14), வேதாந்தப் பள்ளு (செய்யுள்: 35), பறாளை விநாயகப் பள்ளு (செய்யுள்: 79), மேரூர் நல்லபுள்ளியம்மன் பள்ளு, தென்காசைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகிய பள்ளு இலக்கிய செய்யுள்கள் மூலம் அறிய முடிகிறது.
மருத நில ஆறுகளிலும், குளங்களிலும்,கண்மாய்களிலும்,வயல்களிலும் மள்ளர்களின் வாழ்வியலோடு மீன்களும் இருப்பதாலும், வானத்து மீன்களைக் கொண்டே பருவ காலங்களைக் கணக்கிட்டுப் பயிர் செய்கையை மேற்கொண்டதாலும், மள்ளர் குலத்தவர்கலான பாண்டியர்களுக்கே மீன் சின்னம் வாய்த்தது.
வீரபாண்டிய புரம், சுந்தர பாண்டிய புரம்,திருநெல்வேலி மாவட்டத்தில் அழகிய பாண்டிய புரம், சுந்தரபாண்டிய புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பராக்கிரம பாண்டி,புதூர் பாண்டியாபுரம், போன்ற பாண்டியர் பெயர் தாங்கிய பள்ளர் ஊர்களே, பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றது.
பாண்டியர்களின் கடைசிப் போர் கயத்தாறில் நடக்கிறது. போரின் முடிவில் பாண்டியர்களும், அவர்தம் உறவினர்களும்,மேற்கு நோக்கி சென்று பொதிகை மலையில் தஞ்சம் அடைகின்றனர். பின்னாளில் பொதிகள் மலையில் இருந்து கீழிறங்கிய பாண்டியர்கள் வழி வாழ்ந்த பள்ளர்களே இன்று செங்கோட்டை,தென்காசி வட்டங்களில் 'பாண்டியர் குல விவசாயம்' என்ற நில ஆவணத்தொடும், 1924 இல் 'பாண்டியர் சங்கம்' தொடங்கியும், 09.03.1946 இல் 'பாண்டியர் சங்க மாநாடும்' நடத்தியுள்ளனர். அப்பகுதிப் பள்ளர்கள் இன்றும் தங்களைப் 'பாண்டியர் சமுதாயம்' என்றே அழைத்தும், அடையாள படுத்தியும் வருகின்றனர்.
வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தமிழ்தேசிய ஓர்மை பொங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், முதல்வர் செயலலிதா மள்ளர்,நாடார் ஆகிய தமிழ்சாதிகளை சீண்டி விடுவதை தமிழின உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது முதலமைச்சரோ, நீதிபதியோ செய்ய வேண்டிய வேலை அல்ல. தமிழக முதல்வர் தமிழர் வரலாற்றை திறக்கின்ற வேலையை விட்டு விட்டு வரலாறு உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது' என்கிறார் செந்தில் மள்ளர்.
பின் இணைப்பு: நாடார் சமுதாய மக்கள் பற்றி முதல்வர் அளித்துள்ள அறிக்கையின் பத்திரிகை ஆதாரங்கள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக