ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 21 ஜூன், 2013

சாதிகள் பட்டியலில் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது: டாக்டர் க. கிருஷ்ணசாமி


மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறும் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.இது தொடர்பாக திருநெல்வேலி செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிலை குறித்து முடிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
எஸ்.சி. என்ற பிரிவு 76 சாதிகளை உள்ளடக்கிய தொகுப்பு. அதில் ஒரு சாதி தான் ஆதிதிராவிடர். ஆனால், தமிழகத்தில் 76 சாதிகளையும் சேர்த்து ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் ஆதிதிராவிடர் என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தப்பானது. ஆதிதிராவிடர் நலத்துறை என்றே செயல்படுகிறது வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை. எனவே,  எஸ்.சி. பிரிவை பட்டியலினம் என்றே அழைக்க வேண்டும். இதேபோல் பள்ளர் இனத்தை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக 40 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முந்தைய ஆட்சியில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு பிரித்து கொடுக்கப்பட்டது. இது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். சாதிகள் பட்டியலில் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.அருந்ததியர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீடு மட்டுமின்றி, மீதமுள்ள 15 சதவீத ஒதுக்கீட்டிற்கும் அவர்கள் போட்டியிடலாம் என அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 18 சதவீத இடத்தையும் அருந்ததியினர் மட்டுமே பெரும் நிலை உள்ளது. இந்த மூன்று பிரச்னைகளையும் மையமாக வைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய வாரியாக புதிய தமிழகம் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஜூலை முதல் வாரம் வரை தொடர்ந்து நடைபெறும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
கடந்த 2011- 2012 மற்றும் 2012- 2013 -ம் ஆண்டுகளில் தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் நியமனத்தில் எந்தெந்த சாதிக்கு எவ்வளவு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.எனவே, வரும் கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை அரசே நிரப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் விநியோகித்து, 25 சதவீத இடங்களுக்கு ஏழை, நலிவடைந்த மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக புதிய தமிழகம் சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட செயலர் செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலர் மதுரம் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக