ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி...தேவேந்திர இளைஞர்களின் பலம்

தமிழ்நாடே ஆச்சர்யமாகப் பார்க்க வேண்டிய ஓர் அறிவுஜீவி கிராமம்... திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகிலிருக்கும் ஆயக்குடி! காரணம்... இந்தக் கிராமத்து தேவேந்திர இளைஞர்கள், ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வுகளில் படைக்கும் சாதனைதான்! 'காசு கொடுத்தாலும் கிராம மக்களுக்கு நல்ல கல்வி பயிற்சிகள் கிடைக்காத இந்தக் காலத்தில், இது எப்படி சாத்தியம்?' என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு பதில்... இங்குள்ள 'மக்கள் மன்றம்'! இந்த மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சிதான் வெற்றிகளுக்கான ஒற்றைத் திரி! இங்கு பயிற்சி பெற்றவர்களில் இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, இன்று பல்வேறு அரசுப் பணிகளில் உள்ளனர். கிராமத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளிதான் கோச்சிங் சென்டர். விடுமுறை நாளான ஞாயிறுதோறும் பயிற்சி வகுப்புகள் களைகட்டுகின்றன. பள்ளியின் வராண்டா ஒன்றில் 'மக்கள் மன்ற'த்தின் தலைவர் கமலக்கண்ணன் பாடம் நடத்திக் கொண்டிருக்க... வாழ்த்துக்களுடனும், வியப்புடனும் நாம் நெருங்க... கையில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி புத்தகத்துடன் வந்தவர், சாதனை ஹிஸ்டரியை சுருக்கமாக விளக்கினார். "ஆயக்குடி பகுதி, பழனி தொகுதியில இருந்துச்சு. அதை ஒட்டன்சத்திரம் தொகுதியில சேர்க்க அரசு முயற்சி செஞ்சுது. அதை எதிர்த்து கடுமையா போராட்டம் செய்தோம். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த 'மக்கள் மன்றம்'. எங்களோட எதிர்ப்பால தன்னோட முயற்சியை அரசு கைவிட்டுச்சு. அதுக்குப் பிறகுதான் எங்க பலம் எங்களுக்கு முழுசா தெரிஞ்சுது. அடுத்ததா, மன்றத்தோட அக்கறையை வேலை இல்லாத இளைஞர்கள் பக்கம் திருப்பினோம். சரியான வழிகாட்டல் இல்லாம, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாம தேங்கிடற இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து, அரசு பயிற்சித் தேர்வுக்கு தயாரானோம். அதுல நானும் ஒருத்தன். ஆரம்பத்துல படிக்கறதுக்கான இடம்கூட இல்லாம அவதிப்பட்டோம். பேராசிரியர் ராஜாசின்னகருப்பன் (முன்னாள் எம்.பி-யான பாலகிருஷ்ணனின் மகன்) நூலகமும், படிக்க ஒரு இடமும் ஏற்படுத்தித் தந்ததோட, பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார். 2005-ல எல்.ஐ.சி. டெவலப்மென்ட் ஆபீஸர் போட்டித் தேர்வுல ஜெயிச்சு, எங்களுக்கான முதல் வெற்றியை ஆரம்பிச்சவர்... ரபீக். அடுத்தடுத்து எங்களோட வெற்றி தொடரவே, 'நமக்கு நாமே திட்டம்' போல... தேர்வுல வெற்றி பெற்றவங்கள்லாம், அடுத்து பயிற்சி எடுத்திட்டிருக்கவங்களுக்கு ஆசிரியரா மாறி, வேலையில இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்து சேவை மனப்பான்மையோட கிளாஸ் எடுக்கறாங்க. ஸ்டடி மெட்டீரியல்களையும் சொந்தப் பணத்துல ரெடி பண்ணி கொடுக்கறாங்க'' என்ற கமலக்கண்ணன், இப்போது எல்.ஐ.சி. டெவலப்மென்ட் ஆபீஸர். மக்கள் மன்ற செயலாளர் குணசேகரன், "சமீபத்துல நடந்த வி.ஏ.ஓ. எக்ஸாம்ல 22 பேர், குரூப்-டூ எக்ஸாம்ல 112 பேர், போலீஸ் தேர்வுல 60-க்கும் மேற்பட்டோர்னு 'மக்கள் மன்றம்' மூலமா பயிற்சி பெற்றவங்க தேர்வாகியிருக்காங்க. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டு இருக்கு. இந்த வருஷம்கூட குரூப் - ஒன் தேர்வுல மெயின் எக்ஸாம் வரை ரெண்டு பேர் போயிருக்காங்க. மக்களோட ஒற்றுமை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம வகுப்பெடுக்கற ஆசிரியர்கள், அந்த நல்லெண்ணத்தை பயன்படுத்திக்கிட்டு ஜெயிக்கணும்கிற குறிக்கோளோட படிக்கற மாணவர்கள் இதெல்லாம்தான் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணம்!'' என்று நெகிழ்ந்தார். இந்த மன்றத்தின் வெற்றிகளைக் கவனித்து... திருச்செந்தூர், நெய்வேலி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் என்று தமிழ்நாட்டின் 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள் இளைஞர், இளைஞிகள். ஆயக்குடி ஸ்டடி மெட்டீரியலுக்கு தமிழ்நாடு முழுக்க 'வான்டட்' இருக்கிறது! ஒவ்வொரு பணியாளர் தேர்வுக்கும் மொத்த மாணவர்களையும் பேட்ச், பேட்ச்சாக பிரித்து வகுப்பு எடுக்கிறார்கள். இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள ஆண்களும், பெண்களுமாக எல்லா வகுப்பறைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உட்கார, நிற்க இடம் இல்லாமல்... ஜன்னல், வகுப்பறை வராண்டா, படிக்கட்டு என்று கிடைத்த இடங்களில் எல்லாம் நின்று கொண்டு பாடம் படிக்கிறார்கள். வகுப்பு எடுப்பவரின் முகம் தெரியாவிட்டாலும், குரலைக் கேட்டே குறிப்பெடுக்கிறார்கள். "எங்களுக்காக இவங்க பண்ணிட்டு இருக்கற இந்தச் சேவையை 'கல்வி புரட்சி'னுதான் சொல்லணும். ஜெயிப்போம்கிற நம்பிக்கை இப்போ எங்களுக்கு வந்துடுச்சு!'' என்கிறார்கள் இங்கு பயிற்சி பெறும் இளைஞர், இளைஞிகள் ஒருமித்த குரலில்! 'லஞ்சம் வாங்க மாட்டேன். பொறுப்பான அதிகாரியாக பணியாற்றுவேன்...' என்பது 'மக்கள் மன்ற'த்தின் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் மறக்காமல் எடுக்கும் உறுதிமொழி. "கூடுதல் வகுப்பறைகள் ஒதுக்கப்படும்!" இங்கே பயிற்சி பெற்று... இன்று வி.ஏ.ஓ., டெபுடி தாசில்தார், கல்லூரிப் பேராசிரியர் என்று பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் வகுப்பு எடுக்கின்றனர். ஆனால், போதுமான வகுப்பறைகளும், அதற்கான சூழலும் குறைவாகவே இருப்பதுதான் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறது. விஷயத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆர்வமாகக் கேட்டுக் கொண்டவர், "ஆர்.டி.ஓ&வை அனுப்பி வகுப்புகளை பார்வையிடச் சொல்வதுடன், விரைவில் சி.இ.ஓ. மூலமாக அந்த அரசுப் பள்ளியில் அவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கவும் பரிந்துரை செய்கிறேன்!" என்று உறுதிகொடுத்தார் வள்ளலார். "தேவேந்திர இளைஞர்களே! நாம் ஒன்றிணைவது அவசியமாகிறது.நம் சமூதயத்தை நாமே வடிவமைப்போம்,அதற்கான நம் கடமைகளில் இன்றே, இப்பொழுதே,இந்தக்கணமே இணைவோம் தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) .அரசியலையும் ,அரசியல் தலைவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்பது மட்டுமே நம் சமூதயத்தில் எந்த மாற்றத்தையும ஏற்படுத்தது எம் இளைஞர்களே! நாமே களம் காண வெண்டும்! "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக