ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம். உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. “உத்தமபுரம் என்கிற பெயர்ப் பலகையுடன் வளைவு அமைத்து அதில் வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்” என முதல்வர் கருணாநிதி வாக்களித்திருந்தும் கூட இதுதான் இன்றைய நிலை. சென்ற சில நாட்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சிலர் ஒரு ஆட்டோவில் போலீஸ் துணையுடன் ஒரே ஒரு முறை சென்று வந்ததையே பெரிய ‘சாதனை’யாகச் சொல்லக் கூடிய அளவுக்கு அங்கே நிலைமை மோசமாக உள்ளது. அரசு எந்த வகையிலும் நிலமையைச் சீர் செய்து 1) உடைந்த சுவர் வழியே வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்தவோ 2) பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கோயில் அருகிலுள்ள ஆல மரத்தைச் சுற்றி வந்து பள்ளர்கள் முளைப் பாறி எடுக்கும் நிலையை மீண்டும் ஏற்படுத்தவோ 3) பேருந்து நிறுத்தத்தில் ‘ஷெல்ட்டர்’ ஒன்றைக் கட்டவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக சர்ச்சைக்குரிய கோயிலில் பிள்ளைமார்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே.ரங்கராஜன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இதற்கு வழங்கிய ரூ. 3.5 லட்சத்தைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'ஷெல்ட்டர்’ கட்டும் முயற்சியை இப்படி முறியடித்ததோடு பள்ளர்கள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமரக் கூடிய சாக்கடையை ஒட்டிய கட்டைச் சுவரின் மீது சென்ற சில நாட்களுக்கு முன் (ஜீன் 17) சாக்கடையை வாரி கொட்ட பிள்ளைமார்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் வந்தடையும் அந்தச் சாக்கடைக்கு உரிய வடிகால் அமைத்துத் தர வேண்டும் என்பது பள்ளர்களின் கோரிக்கையாக இருந்த போதும், காவல்துறையின் பார்வையிலேயே இப்படி நடந்துள்ளது. பள்ளர்கள் மத்தியில் பிளவு ஒன்றையும் காவல்துறையினர் திட்டமிட்டு உருவாக்கி மாரிமுத்து என்ற அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பிள்ளைமார்களுமாக அதைச் செய்துள்ளனர். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் குடும்பத்தினரை திட்டமிட்டு காவல்துறையினர் பள்ளர்களிடமிருந்துப் பிரித்து எதிராக நிறுத்தியுள்ளனர். இதன்மூலம் இரு சாதிகளிடையேயான பிரச்சினையை பள்ளர்களுக்கு இடையிலான பிரச்சனைப் போல முன்வைக்கின்றனர். எழுமலை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இந்த தோரணையிலேயே எங்களிடம் பேசினார். உட்காரும் கட்டைச் சுவர் மீது போடப்பட்ட சாக்கடையை அள்ள வேண்டும் என பள்ளர்கள் திரண்டு வந்து கேட்டபோது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து காலம் தாழ்த்தியுள்ளது. இதனால், பிரச்சனை முற்றி இரு தரப்பிலும் கற்கள் வீச உடனடியாக எழுமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஈஸ்வரன் (தலையில் 20 தையல்), சங்கரலிங்கம் (கையில் காயம்), ராமன் (இடது கையில் முறிவு) உள்ளிட்ட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்த நாள் அழகம்மாள் என்ற பெண் உட்பட பொன்னையா, சங்கரலிங்கம், பெ. ராமராஜ், நாகராஜ், தங்கராசு, கணேசன், குருசாமி, முனியாண்டி, சுந்தரராஜ், நாகராஜ், தங்கராசு, மணி ஆகியோர் பள்ளர்கள் தரப்பிலும், பிள்ளமார்கள் தரப்பில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து ஜீன் 21 அன்று மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுள்ளது. அன்றுதான் பாலபாரதியுடன் பள்ளர்கள் சிலர் ஆட்டோவில் உடைக்கப்பட்ட சுவர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. இதை ஒரு பெரிய சாதனையாக எழுமலை காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார். சென்ற வாரத்தில் (ஜூன் 28) பள்ளர் தரப்பில் கைது செயப்பட்டவர்கள் பிணை பெற்று விடுதலையாகி வந்த கையோடு பழைய வழக்கொன்றைக் காரணம் காட்டி சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் அப்பட்டமான சார்புத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆசியுடன் இது நிகழ்ந்துள்ளது. இந்திய அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு பிரச்சனையில் தமிழக அரசு இப்படி மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிள்ளைமார்கள் மத்தியில் அரசு ஆதரவு அளித்த தெம்புடன் கூடிய சாதிவெறி அதிகரித்துள்ளதையும் நாங்கள் நேரில் கண்டோம். தேனி நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் குச்சனூர் முருகன் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ள டொம்புச்சேரி என்னும் ஊரில் சுடுகாட்டுப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. பிள்ளைமார்கள், கள்ளர்கள், செட்டியார்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள், பறையர்கள் ஆகியோர் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர்களுக்கு என ஊருக்கு வெளியே சித்தவங்கி ஓடை என்னுமிடத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சுடுகாடு ஒன்றை அரசு அமைத்துள்ளது. எனினும் அங்கு சென்று வர முறையாக சாலை வசதி ஏதும் செய்யப்படவில்லை. எனவே, பள்ளர்கள் ஊருக்குக் கிழக்கே சுடுகாட்டிலேயே பிணங்களைப் புதைத்து வந்துள்ளனர். அங்கு பிணங்களை எரிக்கும் வழக்கமில்லை. இந்நிலையில் கடந்த ஜீன் 23 அன்று பள்ளர் சமூகப் பெண் ஒருவரை மணந்து அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வந்த கதிர்வேல் பண்டியன் என்ற கவுண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பிணத்தைப் புதிய சுடுகாட்டில் எரிப்பதற்கு, தற்போது அங்கு செல்வதற்கு உள்ள ஒரே வழியான பேச்சியம்மன் கோயில் சாலை வழியாக, சவ ஊர்தி ஒன்றில் வைத்து எடுத்துச் செல்ல பள்ளர் சமூகத்தினர் முயன்றுள்ளனர். கோயிலை விரிவாக்கி கட்டியுள்ளதால் அவ்வழியே எடுத்துச் செல்லக்கூடாது எனத் தேவர்கள் தடுத்துள்ளனர். வேண்டுமானால் தங்கள் தெரு வழியே கொண்டு செல்லலாம் என அவர்களில் ஒரு சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் தடுத்துள்ளனர். பள்ளர் குடியிருப்பின் இறுதியில் உள்ள பள்ளர் சாவடியில் சில மணி நேரம் பிணம் கிடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாத நிலையில் தேவர் தரப்பிலிருந்து கல் வீச்சு தொடங்கியுள்ளது. பள்ளர் சாவடி கல்வீச்சில் சிதைந்துள்ளதையும் அவர்கள் வீட்டுக் கதவுகள் சில உடைந்துள்ளதையும், அவர்களில் சிலர் காயம்பட்டுள்ளதையும் நாங்கள் நேரில் பார்த்தோம். பள்ளர்கள் தரப்பிலிருந்தும் ஒரு சிலர் கல் வீசித் தாக்கினாலும் தேவர் தரப்பில் பெரிய சேதம் இல்லை. இதற்கிடையில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அன்வர்ஷா ஆகியோர் தலைமையில் ஒரு போலீஸ் படை வந்து இறந்தவரது பிள்ளைகளின் ஒப்புதலின்றி பிணத்தை எடுத்துச் சென்றுள்ளது. தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை எனவும், பிணத்தை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை எனவும், இறுதிச் சடங்குக் கூட செய்ய இயலாமல் போனது ஆறாத துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவரது மகன் ராஜா கூறினார். கல்லடி சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கலாராணி என்பவர் சாதி உணர்வுடன் தேவர்களைத் தூண்டி விட்டதாக பள்ளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பள்ளர்கள் தரப்பில் 11 பேரும், தேவர்கள் தரப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அப்பட்டமான தீண்டாமை உணர்வுடன் பள்ளர்கள் தாக்கப்பட்ட போதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படாமல் ஒரே குற்ற எண்ணின் கீழ் (930/2010) பி.சி.பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்ற எண்ணின் கீழ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 336, 427, 332 மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்புச் சட்டப் பிரிவு 36 ஆகியவற்றின் கீழ் தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் என இருசாரார் மீதும் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஊருக்குச் சென்று ஒன்றிய தலைவர் திருமதி. பஞ்சவர்ணம் உட்பட எல்லா தரப்பினரையும் சந்தித்துப் பேசினோம். பிள்ளைமார்கள், தேவர்கள், செட்டியார்கள் முதலிய ஆதிக்கச் சாதியினர் ஒரு பக்கமாகவும், பள்ளர், பறையர், அருந்ததியர் ஒரு பக்கமாகவும் செங்குத்தாக பிரிந்துக் கிடப்பதை எங்களால் காண முடிந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு (ஜீலை 2) சமதானக் கூட்டம் ஒன்றை ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் நடத்தியுள்ளனர். அடுத்த 40 நாட்களுக்குள் பள்ளர்கள் தமது பிணங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக பொதுச் சுடுகாட்டை நோக்கி தனிப் பாதை அமைத்துத் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட யாரும் விடுதலை செய்யப்படவில்லை. பள்ளர்கள் தரப்பில் நிலவிய அச்சத்தின் விளைவாக சம்பவத்தையொட்டி சில நாட்கள் அனைவரும் ஊரை விட்டு ஒடித் தலைமறைவாகி இருந்துள்ளனர். பொதுவாக தேனி, போடி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான சாதி வெறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் காவல்துறையினர் இதற்குத் துணை போய் வருகின்றனர். பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை போடுவதற்காக தாரைத் தப்பட்டைகளுடன் ஊர்வலம் சென்று சிலை முன் கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிகழ்ச்சியை நிறுத்துமாறு தேவையின்றி போலீசார் கூறியுள்ளனர். அதையொட்டி விளைந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. சாமிதுரைவேல், வடைகரை காவல்நிலைய ஆய்வாளர் சீராளன் ஆகியோர் இதைச் செய்துள்ளனர். யாரும் காயமடையாத போதும் தலித் மக்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதும், இன்று வரை அவர்கள் நிபந்தனைப் பிணையிலேயே அவதியுறுவதும் அதனால் அப்பகுதியில் அச்சம் சூழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அப்பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் திரு. பிச்சை. எமது பரிந்துரைகள்: 1)இந்திய அளவில் கவனம் பெற்ற உத்தபுரத்தில் பிரச்சனை சிறிதளவுக் கூட தீர்க்கப்படவில்லை. அங்குத் தொடர்ந்து தீண்டாமை நிலவுவதையும், மாவட்ட நிர்வாகம் அதற்குத் துணை போவதையும், தமிழக அரசு மவுனமாக ஆதரவளிப்பதையும் வன்மையாக்க் கண்டிக்கிறோம். தீண்டாமைச் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு அவ்வழியே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துதல், திரு. டி.கே.ரங்கராஜன், எம்.பி. அளித்த ரூ. 5 லடசத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக ‘ஷெல்ட்டர்’ அமைத்தல், ஆல மரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இடித்தல் முதலான நடவடிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2)போடி, தேனி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தீண்டாமை ஒதுக்கமும், சாதி உணர்வும் மிகுந்துள்ளதை அரசுக் கவனம் கொள்ள வேண்டும். இப்பகுதியில் வருவாய் மற்றும் காவல்துறைகளில் ஆதிக்கச் சாதிகள் அல்லாத அதிகாரிகள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும். போதிய அளவில் தலித் அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு ஊர் தோறும் குழுக்கள் அமைத்து தீண்டாமை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். 3)டொம்புச்சேரியில் மாவட்ட நிர்வாகம் வாக்களித்தபடி போர்க்கால துரிதத்துடன் புதிய சுடுகாட்டுப் பாதை அமைக்கப்பட வேண்டும். கதிர்வேல் பாண்டியன் குடும்பத்தாரை அவரது இறுதிச் சடங்குகள் செய்யவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பது விளக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு சிறையில் உள்ளோர் விடுதலைச் செய்யப்பட வேண்டும். தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, பள்ளர்களின் உடைக்கப்பட்ட ஊர்ச் சாவடி திருத்தி அமைக்கப்படுதல் ஆகியவற்றையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். 4)பெரியகுளத்தில் சென்ற ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற தேவையற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு, வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். 5)சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் தமிழகமெங்கும் உள்ளன. இம்மாதிரியான இடங்களில் இரண்டு மூன்று போலீஸ் வேன்களை நிறுத்தி வைத்தால் போதும் என்கிற ரீதியில் இதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கையாள்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஆராய்ந்து பொதுவான கொள்கை முடிவு எடுக்க நீதித்துறையினர், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக