ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

முத்துராமலிங்க (தேவர்) நூற்றாண்டு விழா அரசு நடத்தலாமா?

முத்துராமலிங்க (தேவர்) நூற்றாண்டு விழா அரசு நடத்தலாமா? எதிர்வரும் அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நூற்றாண்டு விழாவை அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட ஏற்படுகள் செய்து வருகின்றனர்। பிரமாண்டம் என்பதைப் புரிந்து கொள்ள சில விவரங்கள் நமக்கு உதவும். அதாவது வழக்கமாக ஒரே நாள் மட்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வு இவ்வாண்டு 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 1/2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிட விரிவாக்கத்திற்கு பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக, தேவர் சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்து வந்த 72 தாழ்த்தப்பட்ட சமூகக் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் 'நிரந்தரமற்றது' என்பதை இது உறுதிப்படுத்துகிறது। மேலும், (தேவர்) இறந்து போன பசுமலையில் அவரது நினைவு மண்டபம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நினைவு மண்டபம் கட்ட தேவைப்படும் இடத்திற்காக பசுமலையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் இடத்தை அரசு கேட்டுள்ளது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதி சந்ரு அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார். மேற்சொன்ன இரண்டு பிரச்சினைகளும் சொல்வது என்ன? ஒரு தனிப்பட்ட நபரின் புகழ்பாட இப்படி இடங்களை அரசே ஆக்கிரமிப்பதின் மூலம் பாதிக்கப்படுவது ஒரு எதிர்கால தலைமுறையின் வாழ்வு என்பது தான்। தேவையெனில் பள்ளிக்கூடத்தை இடம் மாற்ற ஆலோசனை சொல்கிறது உயர்நீதி மன்றமும் அரசும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம் - நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர்நீதி மன்றம். எல்லாவற்றையும் பணம் மட்டுமே சரி செய்துவிட முடியாது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கு அக்கறை வேண்டாமா? பசும்பொன் முத்துராமலிங்கத்தைப் போல இவ்வாண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராயிருந்த ஜீவா, சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது। ஆனால் இவ்விழாக்கள் ஒரே ஒருநாள் மட்டுமே அரசால் அனுசரிக்கப்பட்டது. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நாளிதழ்களின் செய்திகளின்படி, அவ்விழாவிற்குப் போதிய கூட்டம் வராததால்தான் ரத்து செய்யப்பட்டதாக அறிகிறோம். மிக வலிமையான அரசியல் கட்சியாகவும், அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்வதாக இருந்தும், அவ்விழாவிற்கு 100 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்ததால் அவ்விழா ரத்து செய்யப்பட்டது. ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் 'பொது அடையாளம்' அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் தேசிய தலைவர் என்றும், அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சுதந்திரப்போராட்ட தியாகி என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் உருவாக்கி வருகின்றனர்.ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர மற்றைய அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை. சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து, நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்திய விடுதலைக்காக சாதி, மத பேதமின்றி எள்ளளவும் சுயநலமின்றி வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். அவருக்கு வழங்கப்படாத 'தேசிய தலைவர்' அடையாளம் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுபினர் என இரு பதவிகளுக்கும் போட்டியிட்ட, சொந்த சாதி மக்களை தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி சாதிவெறியூட்டி வளர்த்த, தமிழகத்தில் 'சாதிக்கலவரம்' என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு அதாவது முத்துராமலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். அரசு அதை அங்கீகரிக்கக்கூடாது. 1957ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுதேர்தலின் போது முத்துராமலிங்கத்தை எதிர்த்து, தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர் முத்துராமலிங்கம்। இவ் வன்முறையின் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய இம்மானுவேல் சேகரன் 11-09-1957 அன்று படுகொலை செய்யப்பட்டார் (அவரது 50ஆம் ஆண்டு நினைவுநாள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் பங்கேற்றதாகக் கடந்தமாதம் அனுசரிக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஒரே ஒருநாள் நடந்து முடிந்தது) அவ்வழக்கில் முத்துராமலிங்கம் குற்றவாளியாகக் கருதப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டார். 1957 'முதுகுளத்தூர் கலவரம்' குறித்து அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் , முத்துராமலிங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக, தனித்த சாதி அடையாளத்துடன் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவர் தேசியத் தலைவராகவோ,அனைத்து மக்களுக்கான பொது அரசியல்வாதியாகவோ கருதப்படக் கூடாது என்பதே நமது விமர்சனம். தேவர் ஜெயந்தி விழாவை அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து 'ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' என்ற அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது। இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது சம்பந்தமாக விளக்கம் தர தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 30ந்தேதி அதாவது தேவர் நூற்றாண்டு தினம் அன்று எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இவ்விசாரணைக்கான அடிப்படை ஆதாரமாக, 1957ல் தமிழக சட்டமன்றத்தில் திரு,பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதும், வழக்குகள் புனையப்படுவதும் வழமையான செயல்கள் தானே என்று முத்துராமலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் இக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதகமாக,அவரும் அவரைச் சாந்தவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீது புனையப்பட்டவை. பல்வேறு சாதியினரும் அன்றைய காலகட்டத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாக, ஒரு அரசின் இறையாண்மைக்கு சவால்விடும் விதமாக,பல்வேறு கூட்டங்களில் அவரது சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. அவரது பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்துள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மை தெரியும். சமீபத்தில் வெளியான 'முதுகுளத்தூர் கலவரம்' - ஆசிரியர் தினகரன் என்ற நூல் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் இரத்த சாட்சியமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அரசியல் நட்ந்து வருகிறது। 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும், அரசியல் உரிமைக்காகவும் போராடி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச்சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை 'தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத் தேவருக்குப்பின் இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஒரு ஊரில் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூட இதுவரையான எந்த அரசுகளும் முன்வருவதில்லை। நடுநிலையானவர்கள், சனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் கூட நேர்மையாக இவ்விசயத்தில் நடந்து கொள்வதில்லை. அனைத்தும் போலிகள் என தோலுரிந்து போன நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களத்தில் இறங்கி, தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், அரசியல் ரீதியாக அமைப்பாகவும் முன்வர வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. இச் சூழலில் 'சூத்திரன் பட்டம்' நீங்க போராடும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 'பஞ்சமன்' என ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும்-காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் 'தேவர் ஜெயந்தி' போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக