ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'

சிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார். இத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான். இப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்? பின் குறிப்பு : விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக