ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

முதுகுளத்தூர் கலவரம்

முதுகுளத்தூர் கலவரம் கா.அ.மணிக்குமார் ஆசிரியர்: தினகரன்முதற்பதிப்பு: ஜனவரி 1958மறுபதிப்பு: டிசம்பர் 2006. பதிப்பாசிரியர்:அ.ஜெகநாதன்பக்கம் 120. விலை:ரூ.70.யாழ்மை வெளியீடு134,3 வது தளம்தம்புசெட்டித்தெரு,பாரிமுனை, சென்னை-11957 செப்டம்பரில் கிழக்கு ராமநாதபுர மாவட்ட தலித்களுக்கும்(பள்ளர்) தேவர்களுக்கும் (முக்குலத்தோர்-மறவர், கள்ளர், அகமுடையார்) நடந்த மோதல்கள் பற்றி அறிய சம காலத்து நூல்களாக டி.எஸ் சொக்கலிங்கத்தின் முதுகுளத்தூர் பயங்கரம், தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் திகழ்கின்றன. பார்ப்பனரல்லாத காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிர்கட்சிகளின், பிரதானமாக கம்யூனிஸ்ட் தலைவர்கள், மாபொசி, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும் கலவரங்களை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் சொக்கலிங்கம் எழுதியுள்ளார்.தினகரனோ (அன்றைய தினகரன் பத்திரிகை ஆசிரியர்) உயர்கல்வி, வெளியுலக தொடர்பு பெற்று அதன் மூலம் தான் பெற்ற பயனை தனது முக்குலத்தோர் இன மக்களும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென விரும்பினார். ஆனால் தனது சுய அரசியல் லாபத்திற்காக முக்குலத்தோரை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக முத்துராம லிங்கத் தேவரை வெறுத்தார். எனவே அவரையும் அவருக்கு ஆதரவாக இருந்த எதிர்கட்சியினரையும் நூல் முழுவதும் சாடுகிறார். இவரும் விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தவர்.சமீபகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள கட்டுரைகள், புத்தகங்கள் பெரும்பாலும் மேற்கூறிய இரு ஆசிரியர் களின் கருத்துக்களையே ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அதன் விளைவு: சில ரவுடிகள் துணையுடன் தனது தலைமையை தம் இன மக்கள் மீது தேவர் திணித்ததாக சித்தரிப்பதும் அவரது அரசியலுக்கு துணைபோனதாக கம்யூனிஸ்ட்டுகளை கண்டிப்பதும் ஆகும். அரசியலில் வன்முறை அகந்தை சர்வாதிகார சிந்தனை போன்ற பலகீனங்களைக் கொண்டிருந்தாலும் தேவர் முக்குலத்தோர் ஆதரவு பெற்ற தனிப்பெரும் அரசியல் தலைவராக கிழக்கு ராமநாதபுர மாவட்டத்தில் விளங்கியவர். அதற்கான பின்னணியை இங்கு விளக்க வேண்டியது அவசியம்.1930களில் நிலவிய பொருளாதார பெருமந்தத்தால் ஏற்பட்ட விவசாய பொருட் களின் விலை வீழ்ச்சி விவசாயிகளை கடுமையாக பாதித்தது. காலனி அரசு எத்தகைய நிவாரண நடவடிக்கையும் எடுக்காததால் இரயத்துவாரி பகுதிகளில் வரிகொடா இயக்கம் நடத்தியும் ஜமீன் பகுதிகளில் குத்தகை பணம் செலுத்த மறுத்தும் விவசாயிகள் போராடினர். இப்போராட்டங்களுக்கு பல இடங்க ளில் காங்கிரசார் தலைமையேற்றிருந்த னர். குறிப்பாக ஆந்திர கடலோரப் பகுதி களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்.ஜி.ரங்கா. அக்காலகட்டத்தில் ராமநாதபுரம் ராஜா வுக்கு சொந்தமான ஜமீன் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை பாக்கியை தர மறுத்தனர். இதனால் 1934ல் ராமநாத புரம் ஜமீன் திவாலாகியது. இவ்வாடகை கொடா இயக்கத்துக்கு தலைமை ஏற்ற தன் மூலம் பெரும்பாலும் குத்தகை விவசாயிகளாக இருந்த தன் இன மக்க ளின் நல்லெண்ணத்தை முத்துராமலிங் கத்தேவர் பெற்றார். அதுபோல் குற்றப் பரம்பரை சட்டம் ராமநாதபுர மாவட்டப் பகுதிகளில் அமுல்படுத்த முடியாத அளவுக்கு மக்களைத் திரட்டி எதிர்ப்பு தெரிவித்ததில் தேவருக்கு பெரும் பங்குண்டு. மக்கள் ஆதரவு பெற்று அங்கீ கரிக்கப்பட்ட தலைவராக இருந்தமை யாலே காங்கிரஸ் அவரை 1937 தேர்தலில் நீதிக்கட்சி ஆதரவுடன் போட்டி யிட்ட ராமநாதபுரம் சேதுபதிக்கு எதிராக நிறுத்தியது. இத்தேர்தலில் தேவர் அமோக வெற்றி பெற்றார்.சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மதுரை மில்தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். 1937-39ல் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் தலைமையின் கட்டளைக்கு எதிராக, மில் வளாகத்தில் போடப்பட்டிருந்த 144 தடைச்சட்டத்தையும் மீறி தொழிலாளர்கள் கோரிக்கைக்காக கைதாகி சிறைக்கும் சென்றவர் தேவர். ஆனால் இவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து "அரசுக்கு நிலவரி செலுத்தாதே என மக்களை ஏவியவர்," "காவல் துறையினரை செயல்பட அனுமதிக்காது சில ரவுடிகளை ஏவி அராஜகம் செய்தவர்" போன்ற குற்றச்சாட்டுகள் 1950களில் போடப்பட்டன. அவையே பிரதானமாக அரசின் ஆவணங்களில் இடம் பெறுவதால் தேவரின் அரசியல் பங்களிப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தேவரைப் பற்றிய நூல்கள் எல்லாம் அவரை துதி பாடுவதாக அமைந்துவிட்ட நிலையில் அவர் மீது உண்மையான மதிப்பீடு என்பதே இயலாது போய்விட்டது.தஞ்சையில் குத்தகை விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் இணைந்து ஜமீன்தார்/பெரும் நிலவுடமை யாளருக்கு எதிராக வர்க்கரீதியாய் போராடுவது 1930 களின் இறுதியில் சாத்தியமானபோது ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத்தேவரின் சாதி ஆதரவுடனான எழுச்சி அத்தகையதொரு வர்க்கரீதியிலான ஒற்றுமையை கட்டு வது சாத்தியமற்றதாக்கியிருக்கலாம். காவல் துறையின ரின் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் தலித்கள் எழுச்சியை ஒடுக்கிய காங்கிரஸ், ராமநாதபுர மாவட்டத்தில் ஓட்டுவங்கியாக தலித்களை கருதி நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்பதை நன்கு புரிந்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையே பிரதானமாக முன்னிருத்தி செயல் பட்டனர். தலித்களின் எழுச்சியை விரும்பாத முத்து ராமலிங்கத்தேவருக்கு அது சாதகமான அரசியல் நிலை யாக அமைந்ததால் கம்யூனிஸ்ட்டுகள் இன்று விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர்.இங்கு முக்குலத்தோர் பற்றிய புரிதலும் மிக அவசிய மாகிறது. சிவகாசி கலவரம்(1899), கமுதி கலவரம் (1918) ஆகியவற்றுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஆனால் முக்குலத்தோ ரின் நடத்தை அப்போது எப்படி இருந்ததோ அப்படியே தான் தேவர் காலத்திலும் இருந்தது. சமூக வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் எமுதிய ஆதிகால கலவரக்காரர்கள் புத்தகத்தை படித்து தேவர்களின் குணாதிசயங்களை புரிந்துகொள்ள முடியும். வரலாற்றுக் காலத்தில் பல்வேறு காரணங்களால் அவதிக்குள்ளாகி பின்தங்கிய நிலையிலிருந்த தேவர்களும் தாழ்த்தப்பட்ட தலித்களும் மோதிக்கொள்ளுவதை மனித சமூகத்தின் பால் அக்கறைகொண்ட எவரும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவே முயலுவர். அத்தகையதொரு நிலை பாட்டையே கம்யூனிஸ்ட்டுகள் எடுத்துள்ளனர்.குற்றபரம்பரைச் சட்டத்திற்குட்படுத்தப்பட்ட இனத்தின ருக்கு சுதந்திர இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சிறப்பு நிவாரணங்கள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு வந்தபோது இங்கு தமிழகத்தில் அத்த கைய பிரிவைச் சார்ந்த தேவர்களை காங்கிரஸ் அரசு மேலும் கடுமையான இன்னலுக்கு ஆளாக்கியது. எனவே தான் தினகரன்கூட இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கத் தவறவில்லை."காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிற்கும் அபேட்சகர்கள் சீட்டி ஆக்டால் அவதிப்பட்டவர்களையும், அவர்கள் சந்ததியினர்களையும் அணுகும்போது நாங்கள்தான் சீட்டி ஆக்டை எடுத்தவர்கள் என்று எலெக்ஷனில் ஜெயிப்பதற்காகச் சொன்னாலும் உண்மையில் அப்பரம் பரையினரிடம் காணும் கெட்ட பழக்கத்தை மாற்றி யமைக்க வழிசெய்தார்களா? என்பதும் சிந்திக்கத்தக்க விஷயம்."1930களில் சிறு, குத்தகை விவசாயிகள் போராடிய அதே காலத்தில் விவசாயத் தொழிலாளர்களும் எழுச்சிமிக்கதோர் இயக்கம் கண்டனர். தலித்களின் விடுதலைக்கான இவ்வியக்கம் 1930களில் வலுப்பெற்று பலப்படுத்தப்பட்டதாக காவல்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இராமநாதபுரத்தில் விவசாயத் தொழி லாளர்களான தலித்கள் (பெரும்பாலும் பள்ளர்கள்), ஜமீன்தாரின் குத்தகைதாரர்களாக இருந்தபோதிலும் நடைமுறையில் நிலஉடைமையாளர்களாக நடந்து கொண்ட தேவர்களோடு மோதியது, அப்பகுதியில் காவலர்களை நிரந்தரமாக நிறுத்த காலனி அரசைக் கட்டாயப்படுத்தியது.பதிப்பாசிரியர் குறிப்பிடும் "காந்தி என்ற மனிதர்" தான் இம்மோதலுக்குத் தீர்வுகாண அவரது பாணியில் முயன் றிருக்கிறார். அவரது அரிஜன சேவா சங்கம் முக்குலத்தோ ருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1)அரிஜனங் கள் ஆதிக்க சாதியினருக்கு இலவசமாக ஊழியம் செய்ய கட்டாயப்படுத்தப்படக்கூடாது. உழைப்புக்கு கூலி கேட் கும் உரிமையும், கூலி கொடுக்காவிட்டால் உழைப்பு வழங்க மறுக்கவும் அவர்களுக்கு உரிமையுண்டு. 2) அரிஜனங்களுக்கு சட்டை போடவும், மேலாடை அணிய வும் உரிமை உண்டு. பெண்கள் அவர்களுக்குப் பிடித்த ஆபரணங்களை அணியலாம். ஆனால் கண்டதேவி, மற்றும் இளவன்கோட்டை தேர்த்திருவிழாவின் போது நாட்டார்கள் மேல்சட்டை போடும் பழக்கம் இல்லா ததால் அரிஜனங்களும் மேல்சட்டை போடத் தேவை யில்லை. 3)அரிஜனங்கள் தங்களுக்கு பிடித்தமான முறை யில் எப்படியென்றாலும் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.மேற்கூறிய ஒப்பந்தத்தை வரவேற்று காந்தி 1937-ம் ஆண்டு மார்ச் 27 அன்று "அரிஜன்" பத்திரிகையில் கீழ் கண்டவாறு எழுதுகிறார்: இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினர் தாங்கள் விரும்பிய ஆடையையும், அணிகலன் களையும் அணியமுடியாது, "உயர்சாதி"யினரின் விருப் பத்தைப் பொறுத்தே அவர்கள் உழைப்பிற்கு ஊதியம் கிடைக்கும் என்பது அற்பக் குணத்தைக் குறிப்பதாகும். 'உயர் சாதியினர்' அரிஜனங்களை விட மேலானவர்களாகக் கருதுகிறார்கள், ஆனால் எவ்விதத்திலும் அவர்கள் அரிஜனங்களுக்கு உயர்ந்தவர்கள் அல்லர்.பி.மருதையாவின் அறிக்கை பற்றி குறிப்பிடும் பதிப்பா சிரியர் "இராமநாதபுரம் ஜில்லாவில் நடக்கும் கலவரங் கள் சாதிச்சண்டையா? அல்லது அரசியல் குழப்பமா? உண்மை விவரங்கள்" என்ற தலைப்பில் 16 பக்கங்கள் கொண்ட அவரது அறிக்கையை புத்தகத்துடன் இணைக் கவில்லை. அதில் காந்தி பற்றி பி.மருதையார் எழுதும் வரிகள் இவை: எத்தனையோ மகான்கள் தோன்றிய இந்த நாட்டில் உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்திஜி அவர்கள் தோன்றி ஹரிஜன சேவை செய்திரா விட்டால் இன்று ஹரிஜன மக்கள் மனிதர்களாக சுதந்திர நாட்டில் வாழமுடியாது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இன்று இராமநாதபுரம் ஜில்லா வில் சுமார் 3000 ஹரிஜன வீடுகள் தீக்கிரையாகி ஹரிஜன மக்கள் பரிதவிப்பது ஜாதியின் கொடுமையே தவிர வேறல்ல, இன்று காந்திஜி உயிரோடு இருந்தால் ஹரிஜன மக்கள் ஜாதிக்கொடுமையால் அவதிப்படுவதைப் பார்த்து கண்ணீர்விடுவார்... (ப.5, 6)காந்திஜியின் தலித்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் அவரை இந்து மத துரோகி என தேவர் சாடினார். இந்து மகாசபைத் தலைவரான கோல்வால்கருக்குப் பண முடிப்பு கொடுக்கப்பட்டபோது, 'காந்தி இந்து மதத் துரோகி, ஆதலால்தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கி றேன்' என்றார். இதுபற்றி எழுதும் தினகரன் 'கசந்து போன காங்கிரஸ்பக்தி, காந்தியைக்கூடக் கன்னா-பின்னா என்று பேசச் சொல்லுகிறது. நேரு எந்த மூலை? காமராஜர் எம்மாத்திரம்" என்கிறார். காந்தி பற்றி இங்கு குறிப்பிடுவது காந்தியத்தை உயர்த்திப் பிடிக்க அல்ல. மாறாக வராற்றில் ஆய்வு செய்யும்போது கடந்தகால நிகழ்வுகளை அன்றைய சூழலிலேயே நோக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே ஆகும்.தேவராக இருந்தபோதும் சாதிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் தினகரன். தலித்களை வன்முறையில் ஈடுபடுமாறு நாடார்கள் தூண்டுகிறார்கள், அவர்கள் பின்னால் காம ராஜர் உள்ளார் என தேவர் குற்றம்சாட்டிய வேளையில் நாடார் சமூகம் நம்நாட்டின் நல்ல சமூகங்களில் ஒன்று என துணிச்சலாகக் கருத்து தெரிவித்து எழுதுகிறார் தினகரன்.இதர சமூகங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தூரத்தில் தள்ளி வைத்ததோ அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத்தில் அது முன் னேறி வருகிறது. பொதுப்பாதைகளில் நடக்கக் கூடாது, பொதுக்கோவில்களில் கும்பிடக்கூடாது, பொதுப்பள்ளி களில் படிக்கக்கூடாது என்று... அத்தனை தடைகளையும் மீறி இப்போது முன்னேறியிருக்கிறது. சொந்தமாய் கிணறுகள் வெட்டிக் கொண்டும், கோவில்கள் கட்டிக் கொண்டும், பள்ளிகள் அமைத்துக் கொண்டும் அது முன்னேறியது. ஹரிஜனங்கள் அப்படிச் செய்யமுடிய வில்லை. அரசாங்கமே வந்து அதைச் செய்து கொடுக்க வேண்டியதிருக்கிறது. (பக்-31)எனவே தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்தை மறுபதிப்பு செய்திட பெருமுயற்சி மேற் கொண்டுள்ள தோழர் ஜெனநாதன், அதை வெளியிட்ட பதிப்பாளர் திரு.இளம்பரிதி ஆகியோர் பாராட்டுவதற்குரியவர்கள்.

1 கருத்து:

  1. கள்ளன் மறவனை தேவன் என்று எழுதும் நீ,மற்றவர்களை தலித் என்று எழுதுகிறாய்.நீ என்ன கைக்கூலியா?

    பதிலளிநீக்கு