புதன், 25 ஆகஸ்ட், 2010
தியாகி. இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு
செப்டம்பர் 11, 1957 தியாகி இம்மானுவேல் சேகரன் ஆதிக்க சாதியினரால் படுகொலையுண்ட நாள். ஆதிக்கத்திற்கு அடங்க மறுத்த முகவை தலித்துகளின் எழுச்சி முதுகுளத்தூர் கலவரத்தின் முக்கிய காரணம். அடக்கியாளப்பட்ட மக்கள் தங்கள் அடிமைத்தனத்தை உடைத்தெறிக்க முற்படும்போது அவை கலவரமாக மாறும் என்பதுதான் உலக வரலாறு. ‘அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும்’ என்ற மார்க்சிய விதிக்கு ஏற்ப தலித்துக்கள் அதிகமாக வாழ்ந்த முகவை மாவட்டத்தில் 52 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த எழுச்சியின் அதிர்வுகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
முகவை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தியாகி இம்மானுவேல் சேகரன். 1943 ஆம் ஆண்டு இந்திய இரானுவத்தில் சேர்ந்த அவர், தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, அப்பணியிலிருந்து விலகி, 1952 முதல் தமது 33 வயதில் ஆதிக்க சாதிய வெறியர்களால் கொலை செய்யப்படும் வரை முழு நேர சமூகப் போராளியாக மக்கள் பணியாற்றியுள்ளார்.
1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியதும் தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக களப்பணிக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும்.
வரலாறுகளை புதிய பார்வையில் அணுகும் பொழுது அவை சொல்லும் செய்திகள் என்பது, ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள கட்டமைப்புகளை தகர்க்கக் கூடியதாக இருக்கும் என்பது தவிர்க்க இயலாதது. மாறும் என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் மாறும் என்று சொன்ன மார்க்சின் தத்துவத்தை புரிந்து கொள்வதில் மார்க்சிஸ்ட்களுக்கு ஏற்பட்டிருக்கும் சமீபத்திய மாற்றம் (தலித்துகள் - வர்க்கம் குறித்த பார்வை) சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னே ஏற்பட்டிருப்பின், இந்தியாவின் விளிம்பு நிலை மனிதர்களின் அவல நிலை இன்றைய அளவிற்கு இருந்திருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
முதுகுளத்தூர் கலவரம் குறித்த அன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு இன்றும் தலித் அறிவு ஜீவிகளால் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது.
சாதி இந்துக்கள் உழைக்கும் மக்களாக இருப்பினும் அவர்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை காண கம்யூனிஸ்ட்டுகள் மறுத்தனர். ‘முதுகுளத்தூர் கலவரத்திற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்டுகளால் முன்வைக்கப்பட்டதே தவிர, அடக்கு முறை, அதற்கு எதிரான சமூக எழுச்சி போன்ற காரணங்களை அவர்கள் ஆராயவில்லை’ என்பது தலித் பகுதியினர் கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு.
வர்க்கப் போராட்டம் குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் புரிதல் அன்றைக்கு அத்தகைய நிலைப்பாடு எடுக்க வைத்ததா? அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடு என்பது முத்துராமலிங்கத் தேவர் ஆதரவு நிலைப்பாட்டில் போய்முடிந்ததா என்ற கேள்விகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தான் பதில் சொல்ல வேண்டும்.
இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கே இக்கலவரம் தூண்டப்பட்டுள்ளது என்பது போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் அறிக்கைகள் பிரச்சனையின் முழுப்பரிமாணத்தையும் காண மறுத்ததின் வெளிப்பாடு ஆகும். இந்நிலைப்பாடு அப்பகுதி தலித் மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகளை அந்நியப்படுத்தியது. அது மட்டுமல்லாமல், அவர்களை காங்கிரசுக்கு மேலும் நெருக்கமாக்கியது.
பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று 1950களில் அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலான தலித்துக்கள் தங்களை இணைத்துக் கொள்வது இதனால் தடைப்பட்டது. தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடான தலித் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் என்பது வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை தலித்துக்ளில் ஒரு பகுதியினர் நம்ப மறுப்பதற்கான காரணம் இன்னும் முதுகுளத்தூர் கலவரத்தின் காயங்கள் அவர்கள் மனதில் வடுக்களாக இருப்பதால் தான்.
இருப்பினும் மார்க்சிஸ்ட்டுகளின் தற்போதைய தீவிர தலித் ஆதரவுக் கொள்கை, மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. சித்தாந்த ரீதியில் ஏற்பட்டிருக்கக்கூடிய இம்மாற்றம் நிச்சயமாக தேர்தல் அரசியலை முன்வைத்து அல்ல என்பதை மட்டும் உறுதியாகச்சொல்ல முடியும். இருப்பினும் வர்க்க போராட்டம் குறித்த 1990களுக்குப் பின்னான மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டினை அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டுள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல முடியும். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பினும், பெண்கள் குறித்து பல பிற்போக்கு கருத்துக்கள் கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறும் கட்சி, தலித்துகள் குறித்தும் இத்தகைய பார்வை, கட்சி உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறி, அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல” என்ற யதார்த்தத்தை தலித்துகளும் புரிந்து கொள்ளல் வேண்டும்.
தலித் மக்களின் விடியலுக்கு உண்மையாக பாடுபடும் தலித் தலைவர்கள் கம்யூனிஸ்ட்டுகளோடு இணைந்து இயக்கம் நடத்திட முன்வர வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்களும், தலித் இயக்கங்களும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆதிக்க சக்திகளுக்கு அடங்க மறுத்து எழுச்சியுறும் ஒரு இனம், தனக்கும் கீழாக ஒரு இனம் இருக்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கைவிடுதல் என்பது தலித் மக்களின் ஒற்றுமைக்கான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
பூர்ஷ்வா கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து தலித் தலைவர்கள் சட்டமன்றங்களில், பாராளுமன்றஙகளில் உறுப்பினராக இருப்பதால் மட்டும் தலித் விடியலுக்கான முழுமையான தீர்வு கிடைக்காது என்பதனையும், ஜனநாயக மன்றங்களுக்கு வெளியேயும் தங்களது போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் போராட்ட குணங்களை வளர்த்தெடுப்பது என்பது தலித் விடுதலையின் ஒரு பகுதியே என்பதையும் தலித் மக்கள் உணர வேண்டும்.
நிறைவாக, மேல் சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தியாகி. இம்மானுவேல் சேகரனை “சமூக உரிமைப் போராளி” என்று தங்களது சமீபத்திய பரிணாம வளர்ச்சியின் பார்வை மூலம் மார்க்சிஸ்ட்கள் அங்கீகரிக்க வேண்டும். அணுகுமுறைகள் மாறும்பொழுது பின்னேற்பு செய்வது அவசியம் தானே? கலிலியோவுக்கு கொடுத்த தண்டனைக்கு திருச்சபை வருந்தியது என்பது ஒரு பின்னேற்பு தானே?
-சிவசு.முகிலன் ( sivsumukilan@yahoo.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக