ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பரமக்குடி சம்பவம் - உண்மை அறியும் குழு அறிக்கை

பரமக்குடி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கள ஆய்வு செய்த மக்கள் கண்காணிப்பகக் குழுவின் இடைக்கால அறிக்கை. (காவல்துறையின் அதிகாரிகளை சந்திக்க முடியாததால் இது இடைக்கால அறிக்கை) 

ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று, கொண்டாடப் படும் தலித் தலைவர் இமானுவேல் சேகரனின் நினைவு நாள், நினைவு நாளாக மட்டும் இல்லாமல், ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதீய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலியாகவும் ‘கலாச்சார வெளிப்பாடாகவும்’, ஆதிக்க சாதியின் தலைவராக கருதப்படும் முத்துராமலிங்கத் தேவருக்கு இணையாக கொண்டாடப் படுகிறது. பரமக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூடு காரணமாக 7 தலித்துகள் உயிரிழக்க இதுவே காரணமாக அமைந்தது.
 THSHK_PARAMAKUDI_1_779809g
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, பரமக்குடி மட்டுமல்லாமல், மதுரை சிந்தாமணி மற்றும் இளையான்குடியில் துப்பாக்கிச சூடு நடக்கையில், சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை விரும்புவோர், சட்டம் ஒழுங்கு தொடர்காக உத்தரவுகளை பிறப்பிப்பது யார் என்று சந்தேகம் கொள்கின்றனர்.   சாதாரணமாக, மாவட்ட நீதி நடுவராக இருக்கும் மாவட்ட ஆட்சியர்தான் ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு.   காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கும் நடத்தை விதிகளின் பிரிவு 4 இவ்வாறு கூறுகிறது. “சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டும் போது, காவல்துறையினர், கூடுமான வரையில், பேச்சுவார்த்தை, அறிவுரை, எச்சரிக்கை, ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.  பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற நெருக்கடி உருவாகும் போது, எவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டுமோ, அவ்வளவு குறைந்த பலத்தை பிரயோகிக்க வேண்டும்.” தமிழக காவல்துறைக்கும், குடிமக்கள் சாசனத்தை (Citizens Charter) பின்பற்றி பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில், தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 1990ம் ஆண்டின் காவல்துறையினருக்கான அடிப்படைக் கோட்பாடுகளில் இது போன்ற சூழல்களில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து விளக்கப் பட்டுள்ளது.  ஆனால், சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகள் !!

ஆண்டுதோறும் செப்டம்பர் 11 அன்று தலித் சமூகத்தினரால் தங்கள் தலைவருக்கு செலுத்தப் படும் அஞ்சலி நிகழ்ச்சியானது இதே போன்ற மற்றொரு சமூகத்தின் தலைவருக்கு அக்டோபர் 30 அன்று நடைபெறும் இதே போன்ற விழா அரசு விழாஎன்பதை மறந்து விடக்கூடாது.   கடந்த ஆண்டு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன், தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, பேசும் போது அதிமுக ஆட்சிக்கு வருமேயானால்,  தேவர் குரு பூஜை அரசு விழாவாக கொண்டாடப் படும் என்று பேசியிருக்கிறார்.   அதே ஆண்டு அக்டோபர் 2010ல் மத்திய அரசு, முத்துராமலிங்கத் தேவரை சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், மனித உரிமைக் போராளியாகவும் கவுரவப் படுத்தி தபால் தலையை வெளியிட்டது.  இதைத் தொடர்ந்து பல தலித் தலைவர்கள் தற்போதைய தமிழக முதல்வர் மே 2011ல் பதவியேற்றவுடன், இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை வைத்தனர்.  ஆனால், அது நடக்கவில்லை.

வழக்கமாகவே, செப்டம்பர் 11 அன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் காலையில் இமானேவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர்.   மாலையில் தலித் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவர்.    இந்த ஆண்டு பிரச்சியின் தொடக்கம் என்னவென்றால், இந்த ஏற்பாடுகளின் படி வைக்கப் பட்ட ஒரு ப்ளெக்ஸ் போர்டு பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது.  அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எஸ்சி எஸ்டி பிரிவு ஒரு ப்ளெக்ஸ் போர்டை வைக்கிறார்கள்.  அந்த ப்ளெக்ஸ் போர்டில் “தேசியத் தலைவர், தெய்வத் திருமகனார் இமானுவேல் சேகரன்” என்று வைத்துள்ளனர்.   இது தேவர் சாதியினரால் எதிர்க்கப் படுகிறது.   மறத் தமிழர் சேனை என்ற அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் செப்டம்பர் 7 அன்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இமானுவேல் நினைவு தின விழாக் குழுவினர் காவல்நிலையத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப் படுகிறார்கள்.  தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தெய்வத்  திருமகன் என்ற பட்டம் முத்துராமலிங்கத் தேவருக்குச் சொந்தமானது, அதை வேறு எவரும் பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர்.  இதை தலித் அமைப்பினர் எதிர்க்கின்றனர்.  பேச்சுவார்த்தை முறிகிறது.   பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையின் டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர், தலித் அமைப்பினரைப் பார்த்து, சமாதானத்துக்கு ஒப்புக்  கொள்ளாததால்,  இந்த வருடம் விழாவிற்கு தங்களின் ஒத்துழைப்பு கிடைக்காது என்று கூறுகின்றனர்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், பச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ் ஒன் படிக்கும் தலித் மாணவன் பழனிக்குமார் என்பவன் அன்று நாடகம் பார்த்து விட்டு திரும்பி வரும் வேளையில், ஒரு கூட்டத்தால் செப்டம்பர் 9 அன்று இரவு படுகொலை செய்யப் படுகிறான்.   பச்சேரியைச் சேர்ந்த தலித்துகள் கடும் கோபமடைந்து தங்கள் தலைவர் ஜான் பாண்டியனை (தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) வருகை தருமாறு கோருகின்றனர்.  ஜான் பாண்டியனும், செப்டம்பர் 11 அன்று இமானுவேல் சேகரனின் நினைவு தினத்துக்காக வருகை தருகையில், இறந்தவர் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்வதாக உறுதி அளிக்கிறார்.

ராமநாதபுரத்துக்கு வருகை தரும் இந்த முடிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் எதிர்க்கப் படுகிறது. (ஜான் பாண்டியன் தூத்துக்குடியில் தான் இருப்பார்) ஜான் பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கள் நுழையக் கூடாது என்று உத்தரவிடுகிறார்.   செப்டம்பர் 13 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்  படும் வரை ஜான் பாண்டியன் கைது செய்யப் பட்டு வைக்கப் பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 11 அன்று காலை ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.  அதே நாளன்று காலை பரமக்குடியில் வழக்கம் போல, ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் நடப்பது போல கடைகள் அடைக்கப் பட்டன, அஞ்சலி செலுத்தும் இடம் இருக்கும் சாலையில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்தனர்.   சரியாக காலை 12.45 மணிக்கு 30 நபர்கள், பெரும்பாலும் பெண்கள், ஆயுதம் ஏதுமின்றி, ஐந்து ரோடு சாலையில், ஜான் பாண்டியனை விடுதலை செய் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் அமர்ந்தனர்.

அதற்குப் பிறகு பின் வருமாறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.

1)    இப்போது ஊடகங்களில் வெளிவருவது போல, சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு கலைந்து செல்லுமாறு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.    சாலையின் ஒரு புறம் வருவாய் அதிகாரிகளும், மறுபுறம், அடையாறு துணை ஆணையர் செந்தில் வேலனும் (இவர் இது போன்ற சம்பவங்களை கையாளுவதில் திறமையானவராம் !!!) நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே காவல்துறையினர் தடியடி நடத்த தொடங்கினர். காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, பொது மக்கள் குறைவாகவே இருந்தனர்.   காவல்துறை இருந்த எண்ணிக்கையை வைத்து இந்தப்  பொதுமக்களை எந்த வித பலப்பிரயோகமும் இல்லாமல் குண்டுக்கட்டாக அப்புறப் படுத்தியிருக்க முடியும்.

2)       மறியல் செய்தவர்கள் மட்டும் தடியடிக்கு ஆளாகவில்லை.  சாலையில் போவோர் வருவோரெல்லாம் தடியடிக்கு உள்ளாகினர்.  தடியடியைத் தொடர்ந்து செந்தில்வேலனும், இன்ஸ்பெக்டர் சிவக்குமாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் உடனடியாக மூவர் உயிரிழந்தனர்.  முதலில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, தண்ணீரைப் பீய்ச்சுவது போன்ற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை.

3)    ஒரு குழு உடனடியாக கிளம்பி, இளையான்குடி சாலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்சுகள், வஜ்ரா வாகனம் போன்றவற்றுக்கு தீ வைத்தது. இந்தக் குழுவும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

4)       சம்பவ இடத்திலிருந்து ஓடியவர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக விடித்து வந்து, அவர்களை ஐந்து சாலை சந்திப்பில் வைத்து லத்திகளாலும், ரைபிளின் பின்புறத்தாலும் கடுமையாக தாக்கியுள்ளனர்.     ஐக்கிய நாடுகள் அவையின் சித்திரவதைக்கு எதிரான ஷரத்து 1ன் படி, இது காவல்துறையின் சித்திரவதையே ஆகும்.   காவல்துறையின் இந்தத் தாக்குதலே நூற்றுக் கணக்கான தலித் இளைஞர்கள் படுகாயமடைந்து, சரியான மருத்துவ வசதி கூட இல்லாமல் இன்று மருத்துவமனைகளில்,இருக்கிறார்கள்.  இவர்கள் மீது காவல்துறை  பல்வேறு கிரிமினல் வழக்குகளை புனையப் போவதும் அவர்களுக்கு தெரியும்.   நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும், வீடியோ ஆதாரங்களும் (நீதி விசாரணையின் போது சமர்ப்பிக்கப் பட உள்ளதால் இப்போது பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது) இரண்டு நபர்கள், காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கின்றன.  இது ஒரு அப்பட்டமான கொலையே தவிர வேறு ஒன்றும் இல்லை.  ஜனநாயக இந்தியா இது போன்ற ஒரு படுகொலையை பார்த்தது இல்லை.

5) இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அருகாமையிலுள்ள மாவட்டங்களான சிவகங்கை மற்றும் மதுரையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.  ‘மேலிட உத்தரவு’ காரணமாக, போலீஸ் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவு சொல்லாமல் சொல்லப் பட்டது.    தென் மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸின் வரலோரே இது போல பல்வேறு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியவர் என்பதுதான்.  1996ல் இவர் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, இதே போல துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஆவணங்களில் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்தும் என்று ஒரு தவறான நம்பிக்கை உள்ளது.

இந்த மொத்த விவகாரத்தில் வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், இந்த சம்பவத்தால் இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த, எந்த தலித் தலைவருக்கும்  அனுமதி வழங்கப்படவில்லை என்பதுதான்.

போலி என்கவுன்டர்கள், தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணத்தை தயாரித்த க்ரிஸ்டாவ் ஹெயின்ஸ் தனது முதல் அறிக்கையில், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை எப்படிக் கையாள்வது என்று கூறியுள்ளார்.  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது போன்ற ஒரு அளவுகோல்களை கையாள்வது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டத்தை கையாள்வதற்கு உதவி செய்வதோடு, அனைத்து உயிர்களை பாதுகாக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.

1)    ஒரு அரசுக்கு ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பாதுகாப்பான, ஆபத்தற்ற ஒரு பொது இடத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

2)    உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்கக் கூடிய அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுவது மிக அவசியம்.   அடக்குமுறை சட்டங்கள் பயன்படாது.

3)    ஜனநாயக சமூகத்தினை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தவர் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் போதுமான, நியாயமான நிபந்தனைகளை விதிக்கலாம்.   அந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீதித்துறையின் அமைப்பு அவசியம்.

4)    ஆர்ப்பாட்டம் நடக்கும் போது, சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே மாநில அரசின் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ளாமல், அமைதியை காப்பதும், மக்களைக் காப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

5)       காவல்துறையினர் பலத்தை பிரயோகிக்க நேர்ந்தால், சர்வதேச தரத்தில் எப்படி தேவையான அளவு மட்டும் பிரயோகிக்கப் படுகிறதோ, அவ்வாறே பிரயோகிக்க வேண்டும்.   இறப்பை தடுக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும்.  உயிரைக் காக்க மட்டுமே துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டும், மற்ற நேர்வுகளில், பெரும் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

6)    ஒன்று கூடும் உரிமை, பலப்பிரயோகம் குறித்த கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து, போராடுபவர்கள் முடிவெடுக்க ஏதுவாக வெளிப்படையாக தெரிவிக்கப் பட வேண்டும்.

7)       தேவையற்ற முறையில் பலப்பிரயோகம் ஏற்பட்டாலோ, துப்பாக்கிகள் அவசியமற்ற முறையில் பயன்படுத்தப் பட்டிருந்தாலோ, அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உரிய வழி முறைகள் ஏற்படுத்த வேண்டும்.

அப்பட்டமாக மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்தும், துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய பல்வேறு சட்ட நடைமுறைகளை பின்பற்றாதது குறித்தும் கடும் கவலையடைந்த மக்கள் கண்காணிப்பகம், பரமக்குடிக்கும், அரசு மருத்துவமனைக்கும் உண்மை அறியும் குழுவை அமைத்தது.    பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு மறு நாளே (செப்டம்பர் 12) அன்று சம்பவ இடங்களை சுற்றிப் பார்த்து, இந்த இடைக்கால அறிக்கையை அளிக்கிறது.   வழக்கறிஞர் குழுவும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு மக்களை சந்தித்து, அவர்களின் கண்ணீர் கதைகளை பதிவு செய்து வருகின்றனர்.   இந்த உண்மை அறியும் குழுவில் தமிழ்நாடு மனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான திட்டம் (Tamil Nadu Program on Human Rights and Democracy) அமைப்பின் இயக்குநர் சி.ஜே.ராஜன், மாநில கண்காணிப்பு அதிகாரி பழனியம்மாள், தலைமை வழக்கறிஞர் பாண்டியராஜன், ஊரக ஒருங்கிணைப்பாளர் அனந்தக்குமார், மற்றும் அய்யப்பன், மற்றும் குப்புசாமி ஆகியோர் இருந்தனர்.

இந்தக் குழு கள ஆய்வு செய்த போது தெரிந்த விஷயங்கள், சென்னையில் இருந்த நபர்கள் – அரசிலும் அரசுக்கு வெளியேயும் – இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு ஆற்றியிருப்பதை காண முடிந்தது.  இந்தக் குழு பேசிய பல போலீஸ் அதிகாரிகள் “எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு” என்று சொன்னதை காண முடிந்தது. பெரும்பாலான பொதுமக்களிடம் சாதாரணமாக, முதல்வருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, சசிகலா இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறார் என்று பேசிக்கொள்வதைக் காண முடிந்தது. திட்ட அமலாக்கத் துறையில் இருக்கும் பன்னீர் செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் அதிகாரங்களும் செயல்பாடுகளும், பல்வேறு தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.  இந்த பன்னீர் செல்வம், 1995ல் கொடியங்குளத்தில் தலித்துகள் மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது மாவட்ட ஆட்சியராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக முதல்வர் 9 செப்டம்பர் அன்று இரவு 15 தலித் குடியிருப்பான பச்சேரியைச் சேர்ந்த தலித் சிறுவன், அருகாமையிலுள்ள தேவர் குடியிருப்பான முத்துராமலிங்கபுரத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி சுவற்றில் தவறான வாசகம் எழுதப்  பட்டிருப்பதனாலேயே தலித் சிறுவன் கொல்லப் பட்டிருப்பதாக தெரிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது.  இந்த கிராமத்தில் தலித்துகள் இன்று கூட காலணி அணிந்து கொண்டு நடக்கக் கூட முடியாது என்ற நிலையில், ரேஷன் கடைக்கு செல்வது போல நடந்து சென்று சுவற்றில் முத்தராமலிங்க தேவரைப் பற்றி எழுதினார்கள் என்ற காவல்துறையின் உண்மைக்கு மாறான கூற்றை நம்பியதாகவே தெரிகிறது.

மக்கள் கண்காணிப்பகம், அரசு உடனடியாக கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.

1)    உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்

2)    7 தலித்துகள் பலியானதற்கு தலித் சமூகத்திடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். இது இரு சமூகத்தினரிடையே நிலவி வரும் வெறுப்பை குறைக்க உதவும்.   காவல்துறையினர் எந்த வித தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக விருப்பி வெருப்பின்றி செயல்படும் என்று முதலமைச்சர் தமிழக மக்களுக்கு உறுதி அளிக்க வேண்டும்.

3)    மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல், காவல்துறையின் அதிகாரிகள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட, சட்டம் ஒழுங்கு தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

4)       நீதி விசாரணை என்பது, தற்போது பணியில் இருக்கும் நீதிபதியாக இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் இப்போது இருக்கும் அமைப்புக்கு உள்ளேதான் செயல்பட வேண்டும்.  காவல்துறையின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஆவணங்கள் இருக்கும் சூழலில், இப்போதே பெரும்பாலான ஆவணங்கள் திருத்தப் பட்டிருப்பதற்கான வாய்ப்பு, குறிப்பாக வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு  நடத்தப் பட்டதாகவும், முன் அனுமதி பெற்றே துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் ஆவணங்கள்  தயாரிக்கப் பட்டிருக்கும். தாமிரபரணி சம்பவத்தில் அமைக்கப் பட்ட மோகன் விசாரணை ஆணையமே இதற்கு சான்று.  உண்மையில் கண்டு பிடிக்கப் பட வேண்டிய விஷயம், தென் மண்டல ஐஜியை, மாவட் ஆட்சியரை மீறி, கட்டுக்கு மீறி செயல்பட வைத்த சென்னையைச் சேர்ந்த அந்த மர்ம கரம் எது என்பதுதான்.  இதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பு விசாரணை நடத்துவது அவசியம்.  எனினும், தற்போது விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டு விட்டதால், தமிழக அரசை நீதி விசாரணைக்கு பதிலாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரப்படுகிறது.

5)    ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச் சட்டம் சரியான முறையில் பயன்படுத்தப் படுகிறதா என்பதையும், முதல்வருக்கு நெருக்கமான மர்மக் கரம் தடுக்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

6)    தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு பரிந்துரைகள் செய்வதோடு, சம்பவத்திற்கு காரணமான நபர்களை கண்டறிந்து அவர்கள்  மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்ய வேண்டும்.

7)       மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், பாதிக்கப் பட்ட, காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.  தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8)    உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகளின் படி, காவல்துறையை சீரமைக்க ஒரு வரைவு சட்டத்தை உருவாக்கி, அதை பொதுமக்களின் கருத்துக்கு சுற்றில் விட வேண்டும்.  அப்போதுதான் காவல்துறை எந்தவிதமான தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடியும்.

இதனிடையே இன்று மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் மையம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது.
 IMG_0518
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய வழக்கறிஞர் திரு.விஜயக்குமார் அவர்கள் பரமக்குடியில் நடந்த சம்பவம் ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவம்.  சமூகத்தை நேசிக்கக் கூடிய அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும் என்றார்.  அதன் பொருட்டே, சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்று கூடி, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும்,  அடுத்த கட்டமாக 22 செப்டம்பர் அன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
 IMG_0517
இவரை அடுத்த பேசிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ஒரு கூட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கட்டுப் படுத்த முடியாத போலீஸ் போலீசே அல்ல.  அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடலாம்.  போலீசாக இருப்பதற்கே அவர்கள் தகுதி இல்லாதவர்கள்.  அரசு நியமித்துள்ள சம்பத் கமிஷன், போதுமானதல்ல.   ஓய்வு பெற்ற நீதிபதிகளை விட, பதவியில் இருக்கும் நீதிபதிகளே நியமிக்கப் பட வேண்டும்.  தலைமை நீதிபதியை அரசு அணுகினால், நிச்சயம் நீதிபதிகள் ஒதுக்கப் படுவார்கள்.

மேலும், தற்போது உயிரிழந்தவர்களுக்கு கொடுக்க பட்டிருக்கக் கூடிய ஒரு லட்ச ரூபாய் இழப்பீடானது மிக மிக குறைவானது.  ஒரு ராணுவ அதிகாரி சுட்டதால் சிறுவன் உயிரிழந்த தில்ஷன் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் வழங்கும் முதலமைச்சர், இது போன்ற காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு உடனடியாக கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும், நடந்திருப்பது ஒரு கொலை ஆகையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்  சொன்னார்.

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் பேசுகையில், மிக மிக வருத்தத்திற்குரிய சம்பவம் இது. ரயில்வே விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரும் அரசு, தலித்துகள் இறந்தால் 1 லட்சம் கொடுக்கிறது என்றார்.   ஓய்வு பெற்ற நீதிபதிகள் எப்போதுமே ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான்.  ஆகையால் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக