ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 17 அக்டோபர், 2011

பரமக்குடியில் ஏழு உயிரைக் குடித்தது யார்?


1பரமக்குடியில் அநியாயமாக 7 உயிர்களை போலீஸார் ஈவு இரக்கமில்லாமல் குடித்து இருக்கின்றனர். அதற்காக வன்முறையாளர்களை கையைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கச்  சொல்லவில்லை.

.இந்த கலவரத்துக்கு யார் காரணம். போலீஸார் தான். அதனால்தான் அவர்கள் 7 பேரின் உயிரை குடித்துவிட்டதாக தமிழ் லீடர் குற்றஞ்சாட்டுகிறது.

பிரச்னை எங்கிருந்து என்று ஆரம்பத்திலிருந்து வருவோம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருக்கும் இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவு தினம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்காக குரல் கொடுத்த இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் கடந்த சில வருடங்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
இதுவரை நடந்த நினைவு தின கூட்டங்களில் ஒரு கலவரமும் வெடித்தது இல்லை. ஏதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச் சின்னத் தகராறு நடந்திருக்கும். மற்றபடி தடியடி, துப்பாக்கிச் சூடு என்று நிலைமை வந்தது கிடையாது.
இச்சூழ்நிலையில், இந்த ஆண்டும் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிறது. இந்த நாளில், பரமக்குடியில் இருக்கும் அவரது சமாதிக்கு தேவேந்திர குல வேளாள மக்களும் அச்சமுதாயத்தின் அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். இதற்காகப் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்த முறை என்ன நடந்தது. கடந்த 9ம் தேதி பரமக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11வது வகுப்பு மாணவர் பழனிகுமார் கொலை செய்யப்பட்டார். அவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த கொலை தொடர்பாக பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கும் தேவர் சமுதாயத்துக்கும் இடையே பதட்டம் நிலவி வந்திருக்கிறது.
இந்த நிலையில், இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்த2 யாரெல்லாம் வருவார்கள்… அங்கே என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் யார்? போலீஸ் அதிகாரிகள் தானே?
அஞ்சலி செலுத்த வந்த ஜான் பாண்டியனை ஏன் கைது செய்ய வேண்டும். அவர் அஞ்சலி செலுத்துவிட்டு, கொலைச் செய்யப்பட்ட பழனிகுமாரின் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டார். அவர் அந்த கிராமத்துக்கு வந்தால், நிச்சயம் கலவரம் வெடிக்கும் என்று போலீஸ் உளவுத்துறை எச்சரித்திருந்ததாம்.
எல்லாம் சரி. கலவரம் வெடிக்கும் என்றால், அதுவும் அத்தகவல் முன் கூட்டியே தெரிந்தும் இருக்கும் போது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, ஜான் பாண்டியனை அனுமதித்திருக்கலாமே. இம்மானுவேல் சேகரன் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, பழனிகுமாரின் வீட்டுக்கு செல்லவும் போலீஸ் பாதுகாப்பு தருவதில் என்ன தயக்கம்.
அப்படி வந்து ஜான்பாண்டியன் சென்றிருந்தால் தான் சட்டம்-ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. ஜான் பாண்டியனை தடுத்து கைது செய்ததின் விளைவு, சாலை மறியல்- கல்வீச்சு- தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு- துப்பாக்கிச் சூடு. கடைசியில் 7 பேர் செத்தும் போய்விட்டார்கள்.
3தேவேந்திர குல வேளாள சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், அந்த கலவரத்தை தடுக்க அல்லது கலவர சூழலே ஏற்படாமல் செய்திருக்க வேண்டிய பொறுப்பு போலீஸ் அதிகாரிகளுக்குத்தான் உண்டு.
அங்கே வரும் மக்கள் கலவரத்தை கையில் எடுத்தால்,  தங்களுக்கு சிக்கல் வரும் என்ற அளவுக்கு போலீஸ் படையை குவித்திருக்க வேண்டும். அதை முதலில் செய்யத் தவறிவிட்டார்கள். பரமக்குடியில் சாலை மறியல் நடந்த இடத்தை டிவியில் பார்த்தால் புரியும். சுமார் 25 போலீஸார் தான் முதலில் அங்கே இருக்கிறார்கள். சாலை மறியல் தொடங்கி அரை மணி நேரத்தில் மேலும் 25 போலீஸார் தான் வந்திருக்கிறார்கள்
.
இதிலே போலீஸ் அதிகாரிகளின் லட்சணம் தெரிகிறது. அங்கே ராமநாதபுரம் எஸ்.பி.யான மகேஸ்வர் காளிராஜ் இருக்கிறார். ஏற்கனவே அந்த மாவட்ட எஸ்.பி.யாக இருந்து, சென்னையில் அடையாறு துணை கமிஷனராக இருக்கும் செந்தில் வேலன் இருக்கிறார். இவர்கள் சாலை மறியலை கைவிடுமாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் வருகிறார்.
ஆனால், அங்கே கூடியிருந்த மக்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீஸ் படை இல்லை.4 உடனே, செந்தில் குமார் “சார் இன்னும் நமக்கு ஸ்டெந்த் தேவை’ என்கிறார். உடனே, டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் தென் மண்டல ஐ.ஜி.யான ராஜேஷ் தாஸூக்கு தகவல் கொடுக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து 500க்கும் மேற்பட்ட போலீஸார் வருகிறார்கள்
.
அதற்குள் எல்லா எழவும் நடந்து முடிந்துவிட்டது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை என வீசி வீசி பார்த்துவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூடும் நடத்தியாகிவிட்டது. இந்த அதிகாரிகளுக்கு எங்கே போனது புத்தி? ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் படையை, சாலை மறியல் நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்த புத்திசாலி அதிகாரி யார்? ஏன் அவர் முன் கூட்டியே பரமக்குடியில் போலீஸாரை குவிக்கவில்லை? இதையெல்லாம் செய்திருந்தால், வெறும் தடியடியோடு முடிந்திருக்கும். கண்ணீர் புகைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் வேலை இருந்திருக்காது.
ஒரு நிகழ்ச்சி நடக்கப்  போகிறது. அது என்ன மாதிரியான நிகழ்ச்சி. என்னவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள். அவர்களே இப்படி கோமாளித்தனமாக இருந்தால்?
5
முதலில், இச்செயலுக்கு தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யான ஜார்ஜை குற்றஞ்சாட்ட வேண்டும். அவர் தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எல்லா இடங்களுக்கும் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் செல்ல முடியாது என்றாலும், அவர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடன், உளவுத்துறையின் எச்சரிக்கையை சொல்லி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்திருக்க வேண்டும். முதல் தவறு ஜார்ஜ் செய்ததுதான்.

அடுத்து, தென் மண்டல ஐ.ஜி.யான ராஜேஷ் தாஸ். இவருக்கும் சட்டம்-ஒழுங்கு விவகாரத்துக்கும் ரொம்ப தூரம். இவர் பத்து ஆண்டுகளுக்கு  மேலாக, சட்டம்- ஒழுங்கு பணியிலே இல்லை. அடுத்து டி.ஐ.ஜி,. சந்தீப் மிட்டல். இவர் சமீபத்தில் தான், மத்திய அரசுப் பணியிலிருந்து தமிழக பணிக்கு வந்தவர். இவருக்கு இம்மானுவேல் சேகரனையும் தெரியாது. முத்துராலிங்கத் தேவரையும் தெரியாது.
ஒரு ஊரின் டோப்போகிராபியும் தெரியாமல், அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தை கண்காணிப்பத்து என்பது சுலபமா? தற்போது ராமநாதபுரம் மாவட்ட எஸ்..பி.யாக இருப்பவர் மகேஸ்வர் காளிராஜ். இவர் பெயர் தான்

வடமாநில பெயர் போல தெரியும். தமிழர்தான் இந்த எஸ்.பி. மகேஸ்வர் காளிராஜ். இவர், காஷ்மீர் மாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி. அங்கே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்.6 இங்கே ஐந்து வருட டெப்டேஷன் பணிக்கு வந்திருக்கிறார். இவருக்கும் ராமநாதபுர மாவட்ட பிரச்னையில் என்ன ஈடுபாடு இருந்திருக்க முடியும்.
அடுத்து, அங்கே பாதுகாப்பு பணிக்காக சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன். இவர்தான் கலவரத்துக்கு காரணம் என்று இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்கள்.
பாதுகாப்பு பணிக்காக இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட அதிகாரியை குறை சொல்லி பயனில்லையே. அங்கே பொறுப்பான பதவியில் இருந்த ஐ.ஜி., டி.ஐ.ஜி., மற்றும் லோக்கல் எஸ்.பி. ஆகியோர் என்ன திட்டம் தீட்டினார்கள். ஒரு திட்டமும் தீட்டாமல், போலீஸாரை குவிக்காமல் தேமே என்று இருந்துவிட்டு, இப்போது கல்வரம் வெடித்துவிட்டது என்று செந்தில்வேலனை குறை சொல்வது நியாயமா?
அந்த செந்தில்வேலன் தான் காலில் ப்ராக்சர் ஏற்பட்டு, மதுரையில் இருக்கும் ப்ரீத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை குறை சொல்லும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், இம்மானுவேல் சேகரனின் நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள் என்று கேட்க வேண்டும்.
பரமக்குடியில் நடந்த கலவரம், மதுரையில் அவனியாபுரம் செக் போஸ்டில் நடந்த துப்பாக்கிச் சூடு ஆகிய அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் தென் மண்டல ஐ.ஜி.யும் ராமநாதபுர டி.ஐ.ஜி.யும் தான். இவர்களை முதலில் மாற்ற வேண்டும். இவர்களை மாற்றாமல் செந்தில்வேலனை மாற்றி இருப்பது சரியா?
சாதி ரீதியான நிகழ்ச்சி நடந்தால், என்ன விளைவுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்த்து அதற்கேற்றாற் போல நடந்துக் கொள்ளாமல், எனக்கென்ன போச்சு என்ற முறையில் நடந்தது போலீஸ் அதிகாரிகளின் தவறு.
அதற்காக, தண்டிக்கப்பட வேண்டியவர்கள் போலீஸ் அதிகாரிகளே. இவர்களின் திட்டமிடாத நடவடிக்கையால் தான் பரமக்குடியில் ஏழு பேரின் உயிர் குடிக்கப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக