ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 19 அக்டோபர், 2011

தமிழக தென்மாவட்ட சாதிக் கலவரங்கள்: ஏன்? எதற்கு? எப்படி?

ஜெயலலிதாவின் ஆட்சி மீது மக்கள் வெறுப்படைய காரணமாகிய
சாதிக்கலவரம் பற்றியும் பார்க்கலாம். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஏற்பட்ட கலவரத்திற்கு முக்கிய காரணம் பொலீசின் கைங்கர்யமே என்று தகவல்கள் வெளியாகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக காவல் துறையில் சாதிய வெறி வோராடி போயிருக்கிறது என்பதை தெளிவாக காணமுடியும். தமிழகத்தின் மேல் மட்ட காவல் துறை அதிகாரிகள் பலர் குறிப்பிட்ட பதவிக்கு வந்தவுடன் அவரைப்பற்றிய முழுமையான விவரம் சகஅதிகாரிகள் முதல் சாதாரண பொலீசார் வரை பேசப்படுகிறது. ஒரே சாதி என்றால், அந்த அதிகாரியை அணுகுவது எளிது என்ற ரீதியில் இந்த சாதியை சக பொலீசார் கையில் எடுப்பதுண்டு.
இதே போல் ஒரு காவல் சரகத்திற்கு வரும் பொறுப்பாக வரும் பொலீஸ் அதிகாரியையும் அதே காவல் நிலையத்தில் இருக்கும் சாதாரண காவலர்கள், 'எந்த சாதியை சேர்ந்த அதிகாரி' ? என்று முதல் வேளையாக தெரிந்து வைத்துக் கொள்ள முயற்சிப்பதுண்டு. அதற்கேற்ப அவர்களது நடவடிக்கைகளும் பெரும்பாலும் இருக்கும். குறிப்பிட்ட சாதி என்றால் லீவு கொடுப்பது முதல் மெமோ கொடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு உள்ளாகும் பொலீசாரை கூட சாதாரணமாக விட்டு விடுவது வரை இந்த சாதி தாண்டவமாடும். இது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அதிகாரியின் எல்லைக்குள் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளி அதிகாரியின் சாதியை சேர்ந்தவராக இருந்து விட்டால் அந்த குற்றவாளியின் மேல் பதியப்படும் வழக்குகளும் சாதாரணமாகவே இருக்கும்.
தமிழக பொலீசில் இந்த சாதியின் தாக்கம் பல ஆண்டுகளாக தலைவிரித்தாடினாலும் இந்த மறைமுக பேராபத்தை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. விக்ரம் ஆறுச்சாமியாக நடித்த படத்தில் ஒரு காட்சி வரும். படத்தில் வில்லனாக வரும் நடிகர் பொலீஸ் அதிகாரியாக வரும் விக்ரமை பார்த்து தனது ஆட்களிடம் சொல்வது போல் அந்த காட்சி வரும். ' ஏலே! அவன் காதை பாத்தியாலே! அவன் நம்ம சாதிக்கார பயலே!' என்ற வசனம் வரும். இது ஏறத்தாழ உண்மையும் கூட. சமுக விரோதிகளும், குற்றவாளிகளும் தங்கள் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்திற்கு பொறுப்புக்கு வரும் அதிகாரிகளின் சாதி, ஊர், யாருக்கு உறவினர் என்ற தகவல்களையெல்லாம் திரட்டி வைத்துக் கொண்டு அந்த வழியில் சொந்தம் கொண்டாடி தங்களது குற்றத்திற்கு உடந்தையாக மாற்ற, அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க வழி வகை செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த படத்தில் வரும் வில்லன் போன்ற ஆட்கள் தான் தமிழகத்தின் பல இடங்களில் உண்மையில் இருக்கவும் செய்கிறார்கள். குறிப்பாக தென்மாவட்டங்களில் இதை பார்க்க முடியும். பேருந்து நிலையங்களில் இருக்கும் மலஜல கழிப்பறை முதல் பாலங்கள், சாலைகள் அமைப்பது வரையான ஒப்பந்தங்கள் வரை பெரும்பாலும் இது போன்றஆதிக்க சாதி ரவுடியுச சக்திகளிடம் தான் ஒப்படைக்கப்படுகின்றன. ஏற்கனவே ஆதிக்க சக்தியாக இருக்கும் இவர்களுக்கு இது போன்ற வேலைகளால் மேலும், மேலும் எளிதாக பணம் சேரத் தொடங்கியவுடன் அரசியலிலும் நுழைகிறார்கள். ஒரு கட்டத்தில் அமைச்சர்களாக, பிறகு கல்வித்தந்தைகளாக எளிதாக முன்னேறிவிடுகிறார்கள்.
தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் எஸ்ஸார்கோபியை இதற்கு உதாரணமாக கூறலாம். முக்குலத்தோர் என்ற சாதிபின்புலத்தையும், கூடவே எடுபிடியாக ரவுடிகளையும் வைத்துக் கொண்ட எஸ்ஸார்கோபியின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளில் இருக்கிறது என்கிறார்கள். சமுதாயத்தில் எந்தபடிப்பறிவும் இல்லாமல் சாதிபின்புலம் மற்றும் ரவுடித்தனம் என்ற இரண்டையும் மட்டுமே முதலீடாக கொண்டு வளரும் எஸ்ஸார்கோபி போன்றவர்களுக்கு, மத்திய அமைச்சர் பதவியில் இருபபவர்களே  மதிப்பும், மரியாதையையும் அளிப்பதை பார்த்து சாதாரண ரவுடிகளுக்கும் ஆசை கொடிகட்டி பறக்கிறது. அவர்கள் மேலும், மேலும் ரவுடிகளாக தங்களை தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள்.
இவர்களை எதிர்த்து அரசின் ஒப்பந்த வேலைகளையோ, வேறு சில பணிகளையோ எடுக்க கூட யாரும் முன்வருவதில்லை. உழைக்காமல், நோகாமல் பெரிய பணக்காரனாக மாறுவதற்கு சாதிபின்புலமும், சில ரவுடிகளையும் வைத்திருந்தால் போதுமானது என்பது தான் தகுதி என்று ஆகிவிட்டதற்கு, அழகிரி போன்றவர்கள் சாதாரண ரவுடிகளுக்கு தி.மு.கவில் பதவியும் கொடுத்து, பணத்தையும் சம்பாதிக்க பலவழிகளை காட்டியதும் ஒரு காரணம். அது ஒரு தவறான முன்னுதாரணம்.
பணமும், அரசியல் ரீதியான பலமும் வந்த பிறகு இவர்களுக்கு சட்டம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற நிலைக்கு ஆகிவிடுகிறது. இடைத்தேர்தல்களில் வெற்றி பெற தி.மு.கவுக்கு பல வகைகளில் கைகொடுத்தது இது போன்ற ரவுடிகள் தான் என்பதால், தி.மு.கவும் இது போன்ற ரவுடிகளை முழுமனதாக நம்பியது என்று சொல்லலாம். மதுரையில் அழகிரி தனது வசம் முக்குலத்தோர் சாதியை சேர்ந்த ரவுடிகளை பயன்படுத்திக் கொண்டது போல், திருச்சியில் கே.என்.நேரு தனது வலது கரமாக வைத்திருந்தவர் குடமுருட்டி சேகர் என்பவர். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அரசியல்வாதிகளுக்கு இது போல் ரவுடிகளின் நட்பு அதிகமாகவே தேவைப்படுகிறது.
தங்களை எதிர்ப்பவர்களை ஓரங்கட்டுவதற்கு அல்லது எதிர்க்கட்சியினரை அடக்கி வைப்பதற்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இவர்கள் தான் தங்கள் பணத்தையும், அதிகார பலத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். கட்சி அரசியல் நடைமுறை என்ற போக்கில் படித்த இளைய சமூகம் கூட, இதனை இயல்பாக எடுத்துக்கொள்ளத் துணிந்திருக்கும் ஒரு நிலை தமிழகத்தில் தோன்றியிருக்கிறது.
தற்போது நடைபெற்ற பரமக்குடி கலவரத்தில் பொலீசார் எதையும் யோசிக்காமல் எடுத்த துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு கூட சில பின்புலம் இருப்பதாக தற்போது மக்கள் மத்தியில் பரவலாக பேசிக்கொள்ளப்படுகிறது. அதாவது, சமீபகாலமாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் காணப்படும் ஆதிக்கசாதி சக்திகளுக்கு எதிரான எழுச்சியை பொலீஸ் துறையிலும், அரசியலிலும் இருக்கும் சிலர் கடும் வன்மத்துடன் பார்ப்பதாக தகவல்கள் இருக்கின்றன. எந்தக்காலத்திலும் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் இந்த சக்திகள் குறியாக இருக்கின்றன. அதன் ஒரு தாக்குதல் தான் அப்பாவிகள் மீதான துப்பாக்கி சூடு என்றும் பேசப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி இவ்வாறான ஆதிக்கசக்திகளின் போட்டிகள், அதனால் எழும் சமூகத்தாக்கங்களை சாதாரணமான மனநிலையில் இருந்து பார்க்கும் இளைஞர்களுக்கு, சாதியை தாண்டி வன்முறை வெறியாட்டம் ஆடும் நபர்களின் மீதான பொதுவான மன்னிக்க முடியாத கோபமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை கலவரத்தை தூண்டும் ஆதிக்க சக்திகளும் உணரவில்லை. அவர்களோடு மோதும் எதிர்தரப்பும் உணரவில்லை.
உதாரணமாக, தமிழ்நாட்டில் முக்குலத்தோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையில் தான் கடுமையான கலவரங்கள் நடந்தேறுகின்றன. இந்த கலவரத்தால், எந்த நோக்கமும் இல்லாத இந்த இரண்டு சாதிகளையும் சாராத, இடைப்பட்ட சாதிகளை சேர்ந்த அப்பாவிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற நபர்களின் கோபமும் ஒரு பக்கத்தில் கடுமையாக எழுந்து வருகிறது. இதுவும் எப்போதோ  ஒருநாள் பெரும்  அபாயத்தில் கொண்டு சென்றுவிடும் என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்த இருதரப்பினரின் கலவரத்திற்கிடையே சிக்கி, அன்றாட தனது பணிகளுக்கு செல்ல முடியாமலும், அல்லது இந்த கலவரத்தில் எந்த பங்குமில்லாமல் தனது உடமையை இழந்து அல்லது காயம் பட்டு வேதனைப்படும் அப்பாவிகளுக்கு இயற்கையாகவே கடுமையான கோபம் எழுவதுண்டு. இது தவிர்க்க முடியாதது. பரமக்குடி கலவரத்திற்கு பின் இது போன்ற நடுநிலை மனிதர்களின் கோபத்தை, அங்கு நேரடியாகக் காண முடிந்தது.
மக்களின் வரிப்பணத்தில் ஓடும் பேருந்துகள் ஆங்காங்கே நொறுக்கப்பட்டன. இதனால் அரசு பல்வேறு கிராமத்திற்கும் போகும் பேருந்துகளை நிறுத்திவிட்டது. இதனால் காலையில் வேலைக்கு வந்த பலர் மாலையில் வேலை முடிந்து தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இவர்களது குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் தங்களது தகப்பன் இந்த கலவரத்தில் எங்கு மாட்டிக் கொண்டு தவிக்கிறாரோ என்று புலம்ப, வேலைக்கு போன கணவன் வீடு வந்து சேரவில்லையே என்று மனைவி புலம்ப..இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது?
வேலைக்கு போய் திரும்பும் வழியில் பேருந்தில் கல்வீசி தாக்கும் கும்பலால் உழைத்து களைத்து வீட்டுக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருக்கும் பலர் காயம்பட்டு அப்படியே மருத்துவமனைக்கு போக நேரிடுகிறது. கலவரத்திற்கு எந்த காரணமில்லாமல் அடிபடும் இது போன்ற மனிதர்களின் கோபம் எந்த திசையில் திரும்பும்? யாராலும் அதை அனுமானிக்க முடியாது.
அதிமுகவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் நடந்த கலவரங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லி வரும் தலைவர்களால் நடந்த கலவரங்கள் சிலவற்றை இனிப்  பார்க்கலாம்.
ஜுலை 1995 முதல் மார்ச் 1996 முடிய நடந்த கலவரங்கள்
நெல்லை மாவட்டம் வீரசிகாமணி கிராமத்தில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 26.7.95 அன்று தொடங்கிய சாதிக்கலவரம் அப்போது ஆட்சியிலிருந்த இருந்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சி முடியும் வரை (மார்ச் 1996) வரை தொடர்ந்தது. இந்த கலவரம் கூட ஜெயலலிதாவின் ஆட்சி மீது மக்கள் வெறுப்படைய ஒரு காரணமாகவும் அமைந்ததாக கூறலாம்.
இந்தக் கலவரங்களின் போது, விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 கிராமங்கள் உள்பட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 40 கிராமங்கள் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டன. இதில் மூன்று கிராமங்களில் இருந்த சுமார் 1200 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இது தவிர வைக்கோல் படப்புகள், பேருந்துகள், நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள், தோப்புகளில் இருந்த மரங்களுக்கு கூட தீவைத்து அழிக்கப்பட்டன. இத்துடன் சிலர் வயல்களில் இருந்த பம்புசெட்டுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இது தவிர கலவரத்தை அடக்குகிறோம் என்ற பெயரில் காவல்துறையும் புகுந்து விளையாடியதில் பல கிராமங்கள் ஓய்ந்து போயின.
எம்.மகாலிங்கம் என்பவர் எழுதிய "கொடியங்குளம் முன்னும் பின்னும்" என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தகவல்படி, இந்த கலவரத்தில் நடந்த மொத்த கொலைகளில் தேவேந்திர குல வேளாளர் 27 பேரும், ஆதிதிராவிடர் ஒருவரும், தேவர் சாதியில் 20 பேரும், பிறசாதியினர் 26 பேரும் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில், இந்த கலவரத்திற்கு காரணம் அப்போது இருந்த சசிகலா ஆதிக்கம் நிறைந்த அ.தி.மு.க அரசு தான் என்று டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.கிருஷ்ணசாமி, சுப்பிரமணியசாமி, கலைஞர் கருணாநிதி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் ஜான்பாண்டியனும், தேவர் பேரவை அமைப்பின் பொன்பரமகுரு, டாக்டர்.கிருஷ்ணசாமியும் கூட இந்த கலவரங்களுக்கு காரணமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
ஜனவரி 1997 முதல் ஜுலை முடிய நடந்த கலவரங்களை நோக்குகையில்; ஒட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்து கொள்ளவிருந்த மனுநீதிநாள் நிகழ்ச்சியை, (ஒட்டப்பிடாரம் தொகுதி கயத்தார் பஞ்சாயத்து ஒன்றியத்தில் 7.1.1997 ல் நடக்கவிருந்த மனுநீதி நாளை) அந்த பஞ்சாயத்து ஒன்றிய உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி புறக்கணிக்க முடிவு செய்தனர். அந்த பஞ்சாயத்தின் ஆணையாளர் தவிர அனைத்து அலுவலர்களும் விடுமுறையில் சென்று விட்டனர். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிருஷ்ணசாமி மறியலில் இறங்கினார். கூடவே அவரது தொண்டர்களும் இருந்தனர். அவர்களை பொலீஸ் கைது செய்தது.
இவர்களை விடுவிக்க கோரி, 9.1.97 ல் மேலக்கடையநல்லூரில் தேவேந்திரகுல வேளாளர்கள் பஸ் மறியல் செய்தனர். 20 பேருந்துகள் வரை தீக்கிரையாக்கப்பட்டது. பொலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கோவில் பட்டி கலவரம்
எட்டயபுரம் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டியிலுள்ள செண்பகவல்லியம்மன் கோவில் திருவிழா ஏப்ரல் மாதம் 10 நாட்கள் வரை நடைபெறும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு நாள் மண்டகப்படி மரியாதை உண்டு. தேவேந்திர குலவேளாளர் தங்களுக்கும் ஒரு நாள் அந்த மரியாதை வேண்டும் என்று கேட்டு டாக்டர்.கிருஷ்ணசாமி மற்றும் அவரோடு அப்போது கூட்டாக இருந்த டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் சுவரொட்டிப் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சினையில் கோட்ட வருவாய் அதிகாரி தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி செண்பகவல்லியம்மன் கோவிலில், நாயுடு சமூகத்திற்கு மாலை 6 மணி முதல் 8 மணிவரையும், தேவேந்திர குல வேளாளருக்கு 8 மணி முதல் 10 மணிவரையும், செட்டியார்களுக்கு 10 மணிக்கு மேல் என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் கோவில் மானியநிலத்தை பெற்ற மூப்பன்பட்டி தேவேந்திரகுல வேளாளர் தங்கள் வழக்கப்படி தேருக்கு கட்டை போட வந்த போது கல்லெறி சம்பவம் நடைபெற அது கலவரமாக மூண்டது. இந்த கலவரத்தில் நாயுடு சாதியினருக்கு பாத்தியப்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள் அதிகமாக சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து நாயுடு மற்றும் பிறசாதியினர் இணைந்து சாலை மறியல் பிறகு கலவரம் என்று தொடர்ந்தது. இருதரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக