நெல்லை: நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாழையுத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டீபன். பைனான்ஸ் தொழி்ல் செய்து வந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஸ்டீபனை அவரது உறவினர் ஐசக் மது விருந்துக்கு அழைத்துச் சென்றார். ஊர் விலக்கில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் மது விருந்து நடந்தது. இதில் ஐசக்,ஸ்டீபன் மற்றும் 10 பேர் மது அருந்தி விட்டு கோழிக்கறி சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமைடந்தவர்கள் ஸ்டீபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகன், ரூபன், ராகுலன், பாலாமடை விஜயராகவன், கணேசன், குட்டி, மணிமாறன், கீழபாட்டம் சுப்பையா, காட்டாம்புளி நிர்மல், சண்முகராஜ், ஐசக் ஆகிய 11 பேர் கொலை செய்தது தெரிய வந்தது.
இதில் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் போலீசில் அளித்துள்ள வாக்குமுலத்தில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட அன்று ஸ்டீபன் திண்டுக்கல் சென்றிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த நாங்கள் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். இதற்காக அவரது உறவினர் ஐசக்கை அணுகி ஸ்டீபனை பொங்கல் விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினோம்.
அதன்படி ஐசக் ஸ்டீபனை அழைத்து வந்தார். நாங்கள் அனைவரும் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஸ்டீபனை அரிவாளால் வெட்டிக் கொன்றோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக