நெல்லை: பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10ம் தேதி திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சுரண்டை இடையர்தவணையைச் சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி முள்ளக்காடு அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பா அசுவதி, தாத்தா சுவசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்கு பழியாக பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் நேற்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
மானூர் அருகே கீழ தென்கலத்தில் காமராஜர் படம் பொறிக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகம்பங்கள் அடித்து நொருக்கப்பட்டன. கங்கைகொண்டான் அருகே மேட்டு பிரான் சேரியைச் சேர்ந்த எட்டப்பன் என்பவருக்கு சொந்தமான வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது.
வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டியில் பொங்கல் விளையாட்டு போட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். பேட்டை அருகே ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்தால் கிராமப்புறங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக