ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் இருவர் கைது


பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் பெண் உட்பட இருவர் கைது - பரபரப்பு தகவல்
1/1

திண்டுக்கல், ஜன.25 - திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய செயலாளர் மற்றும் பெண் ஆகிய இருவரை நேற்றுக்காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜனவரி 10ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது 14 பேர் கொண்ட கும்பல் இச்சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாகவும், அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 14 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சரணடைந்த இருவரைத் தவிர தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நந்தநவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலாதேவி(45) என்பவர் கொலையாளிகளுக்கு உளவு சொல்வதிலும், அவர்கள் தங்குவதற்கு வீடும் பிடித்து கொடுத்தது தெரியவரவே அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இக்கொலை வழக்கில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27) என்பவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா மற்றும் முத்துப்பாண்டியை நேற்றுக்காலை சுமார் 6 மணியளவில் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க அவர் உத்தரவிட்டதின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முத்துப்பாண்டி

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஜான் பாண்டியன் கட்சியில் இணைந்தார். இவர் மீது அடிதடி, பஸ் எரிப்பு, மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக முத்துப்பாண்டி இருந்து வந்ததால் அவரை இக்கொலை திட்டத்திற்கு நிர்மலாதேவி பயன்படுத்திக் கொண்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் பசுபதிபாண்டியன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறுதி யாத்திரையில் முத்துப்பாண்டியனும் மிகுந்த கவலையோடு சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக