தூத்துக்குடி: பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.
கொலை வழக்கில் பிரபலம்
தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பசுபதி பாண்டியன். 1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார்.
25-12-90ல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.
மூன்று முறை குண்டர்சட்டம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 18 வழக்குகள் பதிவாகின. இதில் 9 கொலை வழக்குகள் ஆகும். பசுபதி பாண்டியன் கடந்த 97ம் ஆண்டு தூத்துக்குடி பின்னிங் மில் தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர். மேலும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மூலக்கரை பண்ணையார்
1990 களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியனின் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார்.
பலமுறை உயிர்தப்பியவர்
இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது.
இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப்பின்னர் பழிக்குப் பழியாக பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பசுபதி பாண்டியனைக் கொன்றது பண்ணையார் ஆதரவாளர்களா அல்லது வேறு குரூப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக