மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை மனிதநேய மக்கள் கட்சி மிகவும் துரதிருஷ்டவசமான, துயர நிகழ்வாக கருதுகின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகியுள்ளன. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனிகுமார் என்ற மாணவர் விஷமிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக காவல்துறையினர் கைதுச் செய்திருந்தால் கொந்தளிப்பான உணர்வுகள் தணிக்கப்பட்டிருக்கும். இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரூ 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதனை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது.
இதே போல் இந்த கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சிக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்தது முதல் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு வரை நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினர் மீதும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மாச்சரியங்களை கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக