ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 அக்டோபர், 2011

குற்றப்பரம்பரையா? சூத்திரப்பரம்பரையா?


இயக்குநர் தோழர் சீமான் அண்மையில் போராளி இமானுவேல்சேகரன் நினைவிடத்துக்கு சென்றார். பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கும் சென்றார். அரசியலுக்குப் போய்விட்டால் எல்லோரையும் அனுசரித்தே ஆகவேண்டும். அனுசரித்துக்கொள்ளட்டும். தேவர் நினைவிடத்துக்கு சென்றதற்காக விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் திராவிடர்கழக மாநாட்டிலேயே தேவர் படத்தைத் திறந்துவைத்த தோழர் வீரமணியை முதலில் விமர்சிக்கவேண்டும். இந்த ஆண்டுவரை தேவரின் குருபூஜைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு வரும் விடுதலை நாளேட்டை விமர்சிக்கவேண்டும். பெரியார் தி.க, ம.க.இ.க, ஆதித்தமிழர் பேரவை மற்றும் சில நக்சல்பாரி அமைப்புகள் தவிர அனைவரையும் விமர்சிக்க வேண்டும். நமது நோக்கம் அது அல்ல.
சீமான் மட்டுமல்ல. தோழர் திருமாவளவன், தோழர் தா.பாண்டியன், தோழர் வை.கோ போன்ற பல முக்கியத் தலைவர்களும் பசும்பொன் தேவரைப்பற்றியும், குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றியும் தவறான கருத்துக்களை கூறிஉள்ளனர். இந்தத் தலைவர்கள் அரசியலுக்காக செய்யும் சில மாற்று அணுகுமுறைகளை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றையே தவறாகச் சொல்வதும், ஒரு தத்துவத்தைக் கொச்சைப்படுத்துவதும், தமிழருக்கு வரலாற்றை உருவாக்கிய தலைவனை சிறுமைப்படுத்துவதையும் விமர்சித்தே ஆகவேண்டும்.
குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெரியார் என்ன செய்தார்? என அந்த மக்கள் கேட்கிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களுக்கு பெரியார் என்ன செய்தார் என ஒரு சராசரி மனிதன் கேட்டால் ஒரு உண்மையான பெரியார் தொண்டன் அடுத்த நொடியில் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
கள்ளர் மறவர் அகமுடையார்கள் அனைவரும் பார்ப்பனர்களின் தேவடியாள் மகன்கள் என இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கும் இந்து மதத்தை எதிர்த்து அந்த சூத்திரப்பரம்பரைச் சட்டமான இந்து லாவை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் தேவர் என்ன செய்தார்? என்று கேட்டிருக்க வேண்டும். அதன்பிறகு ஆதாரங்களைத் தேடிப்பிடித்து குற்றப்பரம்பரைச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா இல்லையா என்பதைச் சொல்லலாம்.
நான் திருடன், திருட்டுப்பரம்பரை என்பதை விட நான் தேவடியாள் பரம்பரை என்பதைத்தான் கேவலமாகக் கருதுவேன். சூத்திரப்பரம்பரை என இன்னும் இந்து மதத்தில் இருக்கிறதே அதை இன்னும் அனுமதித்துக்கொண்டு மானங்கெட்ட வாழ்வு வாழ்கிறேனே அதைத்தான் கேவலமாகக் கருதுகிறேன். மீசையை முறுக்கும் ஒவ்வொரு தமிழனும் இதைத்தான் கேவலமாகக் கருதுவான். எங்களைத் தேவடியாள் மகன்களாக வைத்திருக்கும் இந்து மதத்தை வெட்டிச்சாய்க்க இறுதிவரை போராடிய தலைவர் பெரியார். ஆயிரக்கணக்கான தோழர்களோடு இந்திய அரசியல் சட்டதையே கொளுத்தினார். எதற்காக? சட்டப்படி நாம் சூத்திரப்பரம்பரை என்பதை அழிப்பதற்காக. தமிழ்நாட்டில் கள்ளர், பள்ளர், மறவர், பறையர், வன்னியர், கவுண்டர் யாராகப் பிறந்தாலும் அவர்களுக்குத் தலைவன் முதலில் பெரியார். அப்புறம் யாரோ இருக்கட்டும். அவரை விமர்சிக்கும் முன்னர் வரலாறுகளைக் கொஞ்சம் படித்துப்பார்த்து விமர்சிக்க வேண்டும்.
குற்றப்பரம்பரை என்பதை இப்போது சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களே பெருமையாகத்தான் கருதிக்கொள்கிறார்களே தவிர. குறிப்பாக கள்ளர்கள் யாரும் குற்றப்பரம்பரை எனச் சொன்னதை கேவலமாக கருதவில்லை. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தேவர்கள் மட்டுமல்ல குறவர்களும் தான் கைரேகை வைத்தார்கள் என்றால் நம்மோடு அவர்களைச் சேர்த்துப் பேசாதே என சண்டைக்கு வருபவர்கள்தான் அதிகம். அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு மீசையை முறுக்கித் திரிபவர்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
குற்றப் பழங்குடியினர் சட்டம் ( Criminal Tribes Act )
கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக்கூட்டமாக இடம் விட்டு இடம் மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்துகொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத் திருந்தது. தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே குற்றப்பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று ஒரு தவறான கருத்து அனைத்து மட்டங்க ளிலும் உள்ளது. உண்மையில் தமிழ்நாட்டில் 89 சாதிகள் இப்பட்டியலில் இருந்தன.
அதில் குறவர், உப்புக்குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக்குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, வலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக்கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாரி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப்பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.
குற்றப்பரம்பரைப் பட்டியலில் உள்ள சாதிகளில் பிறந்த அனைத்து மக்களும் கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் 2 கோடிப்பேர் தினமும் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படியெல் லாம் எதுவும் நடக்கவில்லை.
மேற்கண்ட சாதிகளில் குறிப்பாக கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
அதேபோல கைரேகை வைக்கும் இடம் காவல்நிலையம் அல்ல. உள்ளுரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும் அதிலேயே கைரேகை வைக்கலாம். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச்சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப்பெரியவர் குழுவில் இந்த அடையாளச்சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச்சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச்சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாக காவல்நிலையத் தில் கைரேகை வைக்க நிர்பந்திக்கப்பட்டனர்.
சில மாகாணங்களில் மட்டும் இருந்த இந்த சட்டம் 1911 இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியகுழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் ஆவார்.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களான கள்ளர் பஞ்சாயத்துக்கள்உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஏ.கே. இராஜா என்ற பார்ப்பான்.
ஆகவே இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக்குற்றவாளி களை ஒடுக்குவது தவறில்லை என்றே1 பேசியிருக்கிறார்.
போராட்டங்கள்
இச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுமைக்கும் பல்வேறு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். எதிர்த்திருக்கிறார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். சரியாக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் பட்டியலில் கடைசியாக இடம்பெற வேண்டிய பெயர் தேவரின் பெயர் என்ற உண்மையை அறியலாம்.
தமிழ்நாட்டில் செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப்பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911 லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப்பகுதி ஈசநாட்டுக்கள்ளர்களை மீட்டிருக்கிறார். இந்தப் போராட்டங்களுக்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்போது அவருக்கு வயது 3.
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகமுக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.
அதன்பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்த வரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ்ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப்பரம்பரைச் சட்டத்திற் எதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ரோசாப்பு துரைஎன்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்றுவரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,
...இந்தியா மந்திரி அவர்களே குற்றப்பரம்பரையினர் எனப்படுபவரின் கொடூரநிலையை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். குற்றப்பரம்பரையினர் நாட்டு மக்களிடையே சிதறிக்கிடக்கின்றனர். பம்பாயில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து பேசுகிறேன். ..
...இந்த மக்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நலன்களைப் பாதுகாக்கவும் அந்தச் சட்டத்தில் ஆளுநருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தச்சட்டம் பத்தி 108 ன் கீழ் ஆளுநர் சில ஆணைகளைப் பிறப்பித்து, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்ற அந்த மக்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்ன?...
...ஒருவர் ஆதிவாசியா அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா என்று ஆளுநருக்குத் தெரிந்தவுடன் அவர்களது நலனுக்குச் சில சட்டங்கள் இயற்றலாம் அல்லவா? அவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தால் என்ன? மக்களிடையே வசித்தால் என்ன? கிரிமினல் இன மக்கள் சம்பந்தப்பட்ட சட்டம் அந்தக் குறிப்பிட்ட இன மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்குப் பாதகமாகவே இருக்கிறது.
என விரிவாகப் பேசி இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார். இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப்பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப்பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்2.
இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செப்டம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார். 1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி.வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழியவேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டணையில் இருந்தார். அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன்பிறகு தான் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார். ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக்கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜீலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதக்கிருஸ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர். ஆகியோர் நியமிக்கப் பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.
மிக முக்கியமாக தினகரன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் முதுகுளத்தூர் கலவரம் என்ற மிக முக்கிய வரலாற்றுப் பதிவை வெளியிட்ட தேவர் ஜாதியைச் சேர்ந்த தினகரனும் இக்கொடுஞ்சட்டத்தை எதிர்த்துப் போராடியுள்ளார்.
1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப்பழங்குடி சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத் தையும் பசும்பொன் தேவர் நடத்தவில்லை. பல கூட்டங்களில் அதுபற்றிப் பேசியுள்ளார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேயே அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அச்சட்டம் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளாக முத்துராமலிங்கத்தேவர் உட்பட யாரும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களையோ குறிப்பிடத்தகுந்த போராட்டங்களையோ நடத்தவில்லை. முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகும் - தேவர் காங்கிரசோடு அனுசரித்து இச்சட்டம் பற்றி கவலைப்படாத போதும் பெரியார் உறுதியாக அச்சட்டத்தை கடைசிவரை எதிர்த்திருக்கிறார்.
திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்
1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசரின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜென்ரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம். நாயர், கே.வி.ரெட்டி. சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன்வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச்சொல்லி அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம். நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.
பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவித்தது.
கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ் அலுவலரை நியமித்தது. லேபர் கமிஷனர் என அப் பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழுவீச்சில் செயல்படுத்தியது.
கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.
கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக்கடனுதவி அளித்தது.
கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து. அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.
இளைஞர்களுக்குத் தொழில்பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.
மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.
தஞ்சைமாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.
பெரியாறு அணைப் பாசனத்திட்டத்தில் கள்ளர்நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச்செய்தது.
1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள் விவசாயத்திற் காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங் களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங் களுக்கு மாகாண அரசே நிதிகொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற் கும் கடனை அளித்தது3.
இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத்தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும் போது தேவர் பொதுவாழ்வுக்கே வரவில்லை.
அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசு தான். வரதராஜீலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசில்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்படியலில் இருந்து நீக்கியது பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.
இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப்பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழிந்தது.
ஆக குற்றப் பழங்குடியினர் சட்டத்தை ஒழிப்பதற்கும் அச்சட்டத்தால் கொடுமைப்படுத்தப்பட்ட கள்ளர்கள் உட்பட அனைத்து ஜாதி மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உழைத்தது பெரியாரின் தொண்டர்கள் தான். காங்கிரஸ் அரசானாலும், நீதிக்கட்சி அரசானாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் அரசுப்பதவியில் இருந்தாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து சரியான செயல் களைச் செய்தவர்கள் பெரியார் ஆதரவாளர்களே! பெரியார் தொண்டர்களே! திராவிடர் இயக்கத்தவர்களே!
பெரியாரும் குற்றப்பரம்பரைச்சட்டமும்
முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கர் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டுப்ளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது,
. . . முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920ம் வருஷத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற் போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளை யும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்த சண்டாளர்கள்’’ மிலேச்சர்கள்’’ சூத்திரர்கள்’’ ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.
இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.
குடி அரசு 26.12.1937
என்றார். இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வாரானார். அனைத்து அடக்குமுறைச்சட்டங்களையும் ஒழிப்பேன் என்ற சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச்சட்டங்களை முன்பைவிட மிகக்கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.
சட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார். பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப்பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.
. . .தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதி யளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுல கமே பொன்னுலக மாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள் தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத் தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படு கின்றன.
காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் யோக்கியப் பொறுப்புடையவர் களானால் நேர்மையுடையவர்களானால் அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?
அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக் கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்ப மளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம். . .
குடி அரசு 24.07.1938
இந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்கு முறைச் சட்டத்தை யும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்துமூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் ஜாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர் காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடி அரசில் பெரியார்தான் அடக்குமுறைச்சட்டங்களை எதிர்த்து எழுதினார்.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 71எ படி 4மாதம், 6மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.
மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண் டும் வருகிறார்கள். இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங் கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடு வார்கள்? என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக் கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக தயாள குணத்தோடு இழகிய மனம் கொண்டு பேசியிருக் கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.
. .மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக் காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந் திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.
. . . நாம் வெறுத்த நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் தானா நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மா ஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமே யென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ""தேசத்துரோகி''ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
குடி அரசு 02.10.1938
1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாடு குற்றப்பரம்பரைச் சட்டத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச்சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜீன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு, கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச்சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச்சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரஸிலிருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்துவிட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கர் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி வாய்ப்பை இழந்தபின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.
பெரியாரும் தேவர்களும்
1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகத்துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடைஎன்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும்தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்கு துணையாக்கினார்.
1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000 பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப்பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்யமுடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் - இராஜாஜியை விரட்டி அடித்து குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக்கல்வித்திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?
1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ்.மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக இருந்தார். ஒரு நிலச்சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக்கூட்டத்தை நடத்துகிறார். பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடுஎன அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாயக் கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்றுவரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?
சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட. தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார். நூற்றுக் கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன?
மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல்பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
குற்றப்பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர்இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூடநம்பிக்கைகள் ஒழியும்.
தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்
1956 இல் நேரு தட்சிணப்பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். தென்மாநிலக் கூட்டமைப்பாகநான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி.இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20 அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என்றார். தட்சிணப்பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,
பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங் களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால்,
ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.
இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.
மூன்றாவது - இவர்கள் இருநாட்ட வர்களும் பெயரளவில் இருநாட்ட வர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள்.அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளா தாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்ப தால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக் கிறார்கள்.
இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந் திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.
என முழங்கினார்.
தட்சிணப்பிரதேச எதிர்ப்புப் போராட்டக்குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரிமாகாணபிரிப்பு மட்டும் போதாது.
1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத்துறைகளும் பிரியப்போகும் மொழிவாரி மாகாணங்களுக்கே இருக்கவேண்டும்.
2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடுஎன்று பெயர்சூட்ட வேண்டும்.
என இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார், தமிழரசுக்கழக ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.
திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.
இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ..தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை”.
என்பது தான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனா கட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக்கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல். அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார். அவரது சிந்தனைகள் பெரியார் திராவிடர் கழகத்தால் காலவரிசைப்படி தொகுக்கப் பட்டு அச்சிடப்பட்டும் தோழர் வீரமணி அவர்களால் வெளியிடத் தடைசெய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிந்தனைகள் முழுமையாக வெளிவந்தால் தோழர் தா.பாண்டியன், தோழர் திருமாவளவன், தோழர் சீமான் போன்றோர் வினா எழுப்பும் சூழலே வந்திருக்காது.
-ஆதார நூல்கள்
1. பசும்பொன் தேவரின் வரலாற்றுச் சுவடுகள்:முனைவர்.க.செல்வராஜ்
2. பாபாசகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 5
3. நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக?: முனைவர் பு.இராசதுரை
4.தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு : கவிஞர் கருணானந்தம்
5.குடி அரசு இதழ்கள்
6. பெரியார் முழக்கம் வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக