வெள்ளி, 30 செப்டம்பர், 2011
பரமக்குடி படுகொலைகள் : உண்மையறியும் குழுவினரின் அறிதல்கள்
வியாழன், 29 செப்டம்பர், 2011
மாவீரர் இம்மானுவேல் சேகரனின் குருபூஜையில் நடந்தது என்ன ?
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க வேண்டும்
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்யக்கோரி மனு
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை
பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் படுகொலைகள்
பரமக்குடி துப்பாக்கி சூடு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கலெக்டர்-போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பரமக்குடி துப்பாக்கி சூடு- கலெக்டருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
பரமக்குடி துப்பாக்கி சூடு தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தேவேந்திரகுல இனப்படுகொலைகள்
பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்
வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார், எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லால் ஆன சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.
சிலைகளைத் திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துபோன தலைவர்களுக்கு இடையே அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர்முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாகத் திகழும் சுயசாதிப் பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனமாக விளங்குகின்றது. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுயலாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன. அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினைப் போக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினைப் போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்துத் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினைப் பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுவதும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி திராவிடர்களின் நல வாழ்விற்கான உண்மையான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும்போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில், இந்த சாதீயம்தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவைப் போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய, தமிழர்களின் ஒற்றுமைக்காக, பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை. ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரத்தில்தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியைப் போற்றி, பராமரித்து, பாதுகாக்கின்ற அரணாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட்குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட்குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும். எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கர்கூட, இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இதுவரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.
தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து, இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.
பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரம் ஆதிக்க உளவியலில் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்குத் தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளைக் கையாண்டது எதன் பொருட்டும் ஏற்கக் கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களைக் கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும்போது அரச அதிகாரத்தின் ஆதிக்க சாதி முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம். பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.
வரையறுக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிற்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும்போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண, காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின்போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரைப் பறிக்க துவக்குகளைத் தூக்குகிறது. இராணுவத்திற்கு எதிராக கல்லெறிந்து போராடி வரும் காஷ்மீர் மக்களைக் கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.
பல்வேறு சாதி மக்கள் வாழக்கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான, எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின்போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக, இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.
சாதிதான் பெரிதென்றால் சுயசாதிப் பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்தியிருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்து கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது.
ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுபட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்தப் பகையை, இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போகப் போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விடக் கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்துப் பேசுவதன் மூலம் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தளப் போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.
பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் தொல்.திருமாவளவன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை, திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அருவருப்பான செயல். முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களைப் பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த 'இணையத்தளப் போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை எந்த தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்.. சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற 'நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இந்த இரண்டகன்களுக்குப் பிடிக்கவில்லை.
தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரைத் தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார், பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி, மத மக்களுக்காக ஈகை செய்தார்கள்?- இனத்தின் மேன்மைக்காக, இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறிகொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டுச் சிரிப்பினை உணர்ந்து ஒன்றாகக் கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும். எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர்வழிப் பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது. இன்னமும் ஈழப் போரின்போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களுக்கு நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டிருக்கிறது சா’தீ’. திசைதிருப்பல்கள் மூலமாகவே திசையற்றுப் போனான் தமிழன்.
பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், அவர்கள் மீதான கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினைப் பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரிப்பதுதான் இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.
சாதீய முரண்கள் களையப்பட வேண்டுமானால், சுயசாதிப் பெருமிதம் சாக வேண்டும். சுயசாதிப் பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக, முரணாக நிற்கும் ஒட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலோங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்து கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப்படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.
மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை
வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
2. பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.
3. தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.
4. ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.
5. ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.
6. தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.
7. துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.
8. உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.
பரிந்துரைகள்:
1. தலித் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களிடம் நம்பிக்கையைக் கொண்டுவரும் வகையில், செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தீப் பட்டீல் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட மாவட்ட காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும். அரசாங்கம் அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் கொண்ட விசாரணைக் கமிஷனுக்குப் பதிலாக பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்கமிஷன் அமைத்திட வேண்டும். செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி, முதலமைச்சர் பொறுப்பிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் செயல்பட்டவிதம் குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
2. தலித்துகள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், இனக் கலவரத்தை தூண்டுபவர்கள் என்றவகையில் தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.
3. மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உயர்மருத்துவ வசதியை அரசே தன் முழுப்பொறுப்பில் செய்திட வேண்டும். சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அடக்குமுறை, அச்சுறுத்தல் நோக்கத்துடன் பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போடப் பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். போலீஸ் தேடுதல் வேட்டை காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில் இது போன்ற தேடுதல் வேட்டைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
4. நேர்த்திக் கடனாக நாக்கை வெட்டிக் கொண்ட தனது கட்சிக்காரப் பெண்ணுக்கு ரூ 5 லட்சமும் அரசாங்கவேலையும் வழங்கும் அளவுக்கு ‘தாராள’ மனது படைத்த முதலமைச்சர், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சமும் அரசாங்க வேலையும் அளித்திடவேண்டும். தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் பச்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும். புதிய சாலை அமைத்து தர வேண்டும். வேலை இல்லாமலிருக்கும் அந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்.
5. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்கவேண்டும். தலித் அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைவதற்குள்ள தடையை நீக்க வேண்டும்.
6. தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.
7. ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டின்படி அரசாங்கம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலித்துகள் மீதான அரசாங்க வன்முறையும் காவல்துறை வன்முறையும் (கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி) அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். எனவே தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்: அதிமுக மீது டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனியாக போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தென்மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.
புதிய தமிழகம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவி, கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.
அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து தான் போட்டியிட போகிறது, கூட்டணி கிடையாது என்று எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்போம். ஆனால் கடைசி வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு ஏமாற்றி விட்டனர்.
பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை காக்கும் முயற்சியில் அரசு ஈடுபட கூடாது. பரமக்குடி சம்பவம் போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, அனைத்து சமூகத்தினர் கலந்து கொள்ளும் சமூக நல்லிணக்க உண்ணாவிரதம் முதுகுளத்தூரில் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இமானுவேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9ந் தேதி, பரமக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!
பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:
“ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”
இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.
ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?
அ.தி.மு.க. ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கிசூடு ///தி.மு.க ஆட்சியில் தாமிரபரணிபடுகொலை...
.....
தாமிரபரணி நதிக் கரையில் நின்று போலீஸ் போட்ட வெறியாட்டம் பற்றிய கடந்த
ஆம்... வெள்ளிக்கிழமை மூன்றாக இருந்த உயிர்ப் பலிகள், 17 ஆக உயர்ந்திருக்கிறது. தேடத் தேட ஆற்றுக்குள் இருந்து கிடைத்த உடல்களைக் கண்டு, நெல்லை நகரமே பதைபதைத்துப்போனது.
திங்கட்கிழமை 'பந்த்' என்று 'புதிய தமிழகம்' முதலில் அறிவித்து இருந்தபோதிலும், நெல்லை வந்து சோகத்தில் பங்கெடுத்த மூப்பனார், ''பந்த் வேண்டாம். இதை ஒரு கறுப்பு தினமாக துக்கம் அனுஷ்டிப்போம்...'' என்று சொல்லிவிட்டார்.
பந்த் என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்திப் பழிவாங்கக்கூடும் என்று பரவியிருந்த அச்சம், இதன் மூலம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டது.
இறந்த 17 பேரில் 11 பேர் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 'வேறு மாநில டாக்டர்களைக்கொண்டு போஸ்ட்மார்ட்டம் செய்யாவிட்டால், இந்த உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்' என்று அக்கட்சியினர் விடாப்பிடியாகச் சொல்வதால், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய குளிர்சாதன வசதி இல்லாத மார்ச்சுவரியில் அந்த உடல்கள் 'டீ-கம்போஸ்' ஆகி சிதையத் துவங்கி உள்ளன. இன்னும் இரண்டொரு நாட்களில் உடல்களைப் பெறாவிட்டால், அரசே தகனம் செய்துவிடவும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடக்கிறது.
எதிர்பாராத விதமாக போலீஸ் நிகழ்த்திய இந்தப் படுகொலைகளால், நிலைதடுமாறிப் போயிருக்கும் தமிழக அரசு, சட்ட அமைச்சர் ஆலடி அருணாவையும் கூடுதல் டி.ஜி.பி-யான குமாரசாமியையும் நெல்லையிலேயே முகாமிடச் செய்து பதற்றம் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நடக்கப்போகும் விசாரணையில், 'எங்கள் மீது தவறு இல்லை' என்று போலீஸ் சொல்லக்கூடும். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த நிருபர்களுக்கு இன்னமும் பதற்றம் அடங்கவில்லை.
ஊர்வலத்தினர் தங்கள் மீது கல் எறியத் துவங்கியதும், போலீஸ் அவர்களைத் துரத்தித் தாக்கியபோது தாமிரபரணி தண்ணீர் முழுக்க மனிதத் தலைகள்தான். தண்ணீரில் தத்தளித்தவர்கள் கரைக்கு வர முயல, தண்ணீரிலும் சில போலீஸார் நீண்ட லத்திகளை வீசி மண்டையைப் பிளந்தனர். நீச்சல் தெரிந்த ஆண்களும், சில பெண்களும் மறு கரைக்கு நீந்தித் தப்பித்துவிட, மற்றவர்கள் தண்ணீர் குடித்தே மூழ்கிவிட்டனர்.
தன் கண் முன்னே அடிபட்டவர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சாக, அதிர்ஷ்டவசமாக மீண்டு வந்திருக்கும் மாஞ்சோலை டீ எஸ்டேட் பெண் தொழிலாளி விக்டோரியா படபடப்புடன் நம்மிடம் பேசினார். ''நீச்சல் தெரியாத நான் தண்ணீரைக் குடிச்சுட்டே இருந்தேன். மூச்சு வேற வாங்குது. நல்லபடியா ஒரு படிக்கல் கிடச்சப்போ அதைப் பிடிச்சுக்கிட்டேன். அதுக்குள்ள தத்தளிச்ச ஒரு பொண்ணை கேமராக்காரர் குதிச்சுக் காப்பாத்தினார். கட்சிக்காரங்க சிலரும் பெண்களைக் காப்பாத்திக் கரையில் போட்டாங்க. எனக்கும் ஒருத்தர் கை கொடுத்தார். அவரை என் வயித்துல ரெண்டு மூணு முறை இடிக்கச் சொன்னேன். அதுக்கப்புறம்தான் குடிச்சிருந்த தண்ணி எல்லாம் வெளியே வந்து எனக்கு சுவாசிக்கவே முடிஞ்சது!'' என்றார்.
சென்ற இதழில், இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பெண்ணின் புகைப்படம் வந்திருந்ததே... அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடித்துப் பேசினோம். மாஞ்சோலையைச் சேர்ந்த அவர் பெயர் பார்வதி. ''முதுகுல அடிபட்ட உடனேயே தண்ணியில குதிச்சுட்டேன். எனக்கு நீச்சல் தெரியும் உடனே நீந்தி கரைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு பெண் மூழ்கிட்டிருக்க... யாரோ ஒரு ஆள் அவர் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்கிக் கரைக்குத் தூக்கிப் போட்டார். இதைப் பார்த்த நான் குழந்தையைக் கையில் தாங்கிப் பிடிச்சுக்கிட்டேன். குழந்தை கையில் இருந்ததால், போலீஸ்காரங்க என்னை அடிக்கலை. 'குழந்தையைக் கொண்டுட்டு ஓடுடீ'னு விரட்டினாங்க. அப்புறம் பெண் போலீஸார் வந்து என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினாங்க. போற வழியிலேயே அந்தக் குழந்தை விக்னேஷ் இறந்துட்டான். இன்னிக்குத்தான் அந்தக் குழந்தையின் தாய் ரத்தினமேரியும் இறந்துட்டாங்கன்னும், அவங்க பாட்டி மேரி என்கிற மாரியம்மாள் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றதும் தெரிஞ்சது...'' என்று கண் கலங்கினார். குழந்தையின் தந்தை மாரியப்பன், கடந்த மாதம் நடந்த மாஞ்சோலை டீ எஸ்டேட் போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கிறாராம்.
இரண்டாவது நாள் மீட்புப் பணியின்போது, ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த கெய்சரின் உடல் கிடைத்தபோது, ஆரூண் எம்.எல்.ஏ. கலங்கிவிட்டார். ஐக்கிய ஜமாத்தின் சென்னை அலுவலகத்தைக் கவனித்தவர் கெய்சர். ராமநாதபுரத்துக்காரர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாம். அவர் அணிந்திருந்த ஒமேகா வாட்ச் உடலோடு சேர்ந்து ஒரு நாள் முழுக்க மூழ்கிக்கிடந்தும் ஓடிக்கொண்டே இருந்தது. அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எது நடந்தாலும் அவற்றை வீடியோ எடுக்கும் போலீஸார், இந்த முறை ஒன்றுக்கு மூன்றாக கேமராக்களை வைத்து ஊர்வலம், தடியடி எல்லாவற்றையும் 'ஷூட்' பண்ணினார்கள். மதுரையில் இருந்து வந்த தென் மண்டல ஐ.ஜி-யான விபாகர் ஷர்மா இந்த வீடியோ டேப்பைப் போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.
அரணாக நின்று போலீஸாரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, தலைவர்கள் ஜீப்பை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கும்படி தொண்டர்கள் கோஷம் போடுகிறார்கள். அப்போது யாரோ சிலர் அங்கே நின்றுகொண்டு இருந்த ஒரு பெண் போலீஸைத் தொட போலீஸ் வெறிகொள்கிறது. அங்கே நின்று இருந்தவர்களைக் கலைக்க முதலில் கலவரத் தடுப்புப் படை லத்தியைச் சுழற்றுகிறது. அந்தப் பகுதியில் இருந்து நதிக் கரையை நோக்கி ஓடியவர்கள் கற்களை வீச, போலீஸ் மீதும் எதிர்ப் புறம் நின்ற மக்கள் மீதும் கற்கள் விழுகின்றன. தலைவர்கள் நின்று இருந்த ஜீப் அருகே நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்தும் சிலர் போலீஸாரை நோக்கிக் கற்களை வீச, அதன் பிறகுதான் ஒட்டுமொத்தமாக இரண்டாவது கட்டத் தடியடி... போலீஸாரும் கற்களைத் தூக்கி மக்கள் மீது விட்டெறிகிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட அதே நேரத்தில், விண்ணை நோக்கியும் இரண்டு முறை போலீஸார் துப்பாக்கியால் சுடுகிறார்கள். மேலப்பாளையம் நோக்கி விரையும் தலைவர்கள் ஜீப்புக்குப் பின்னாலேயே ஒரு பெண் ஓடுகிறார். அதிரடிப் படையினர் அந்த ஜீப்பை நோக்கியும் கற்களை வீசிய காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது!
மக்களின் கல்லெறியில் இருந்து தப்ப சுவர் ஏறிக் குதித்து ஓடியும், நெஞ்சில் காயம்பட்டு மயங்கி விழுந்த பெண் போலீஸ் ஒருவர் பி.ஆர்.ஓ அலுவலகத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டது.
தூத்துக்குடி டி.எஸ்.பி-யான மாரியப்பன் முகத்தில் கல் பட்டு ரத்தம் சொட்ட... இன்னொரு போலீஸ்காரரின் தலையிலும் கல் பட்டு ரத்தம் கொட்டியது. துணை கமிஷனர் சைலேஷ் குமார் யாதவின் கையில் கல்லடி பட்டாலும், கையை உதறிக்கொண்டே திரும்பி, கல் எறியும் போலீஸாரைத் தடுக்கிறார் அந்த வீடியோ காட்சியில். ஐ.ஜி. விபாகர் ஷர்மா இந்த வீடியோ காஸெட்டுகளை அப்படியே காப்பி எடுத்து சென்னைக்கு அனுப்பியதுடன், ''மூன்றாவதாக ஆற்றுக் கரையிலும் ஓடிச் சென்று தடியடி நடத்தாமல் பொறுமை காத்திருந்தால், இத்தனை சாவுகள் நடந்திருக்காதே...'' என்று அதிகாரிகளிடம் கோபம் கொட்டினார். இந்த காஸெட்டுகளை எடிட் பண்ணாமல் அப்படியே கமிஷன் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சாவுகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும் புகார் செய்யப்படுகிறது.
கலெக்டர் தனவேல் மற்றும் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி-யான ராஜேந்திரன் இருவர் மீதும் முக்கியமாகக் குற்றம்சாட்டுகிறார்கள் தொண்டர்கள்.
இதுபற்றி நாம் டி.ஐ.ஜி-யிடம் கேட்டபோது, ''நான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்துகொண்டு, 'மைக்'கை வாட்ச் பண்ணியபடியே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால்தான் ஸ்பாட்டுக்கு வர முடியவில்லை. தலைவர்கள் போலீஸ் தடுப்பை மீறிச் செல்ல ஜீப்பைக் கிளப்பியபோது, டென்ஷனான தொண்டர்கள் மறுபக்கமும் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால்தான், தடியடி நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்தச் சோகம் நிகழ்ந்திருக்காது...'' என்றார்.
ஏற்கெனவே டி.ஐ.ஜி-க்கும் உதவி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாட்டால் இரண்டு பேருமே சரிவரக் கலந்தாலோசித்துச் செயல்படவில்லை. அதனால் வந்த வினைதான் அத்தனையும் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைப்படி நீதி விசாரணை நடத்தப்பட்டால், டி.ஐ.ஜி. தலைதான் அதிகம் உருளும் என்கிறது போலீஸ் வட்டாரம்.
மனதைப் பிசையும் கடைசிச் செய்தி: இது வரையிலும் 17 உடல்கள் கிடைத்தாலும் 40 முதல் 50 பேரை இன்னமும் காணவில்லை என்று கிராமப்புறங்களில் இருந்தும் மாஞ்சோலைப் பகுதியில் இருந்தும் தகவல் வந்திருப்பதாக கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் சொல்கிறார். காணாமல் போனவர்களின் பட்டியலையும் தயாரித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்!
கட்டுரை, படங்கள்: அ.பால்முருகன்
நிருபர்களும் சிக்கினர்!
பத்திரிகை புகைப்படக்காரர்களுக்குக் கல்வீச்சில் லேசாகக் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாது அவர்கள் தடியடியைப் படம் எடுத்துக்கொண்டு இருக்க, தனியார் டி.வி. நிருபர் ஒருவர் போலீஸாரால் தாக்கப்பட்டார். தடியடி ஓய்ந்து, ஆற்றில் மூழ்கிய குழந்தையைப் படம் எடுக்கப்போன இன்னொரு பத்திரிகை நிருபரைப் 'படம் எடுக்காதே' என்று சொல்லியபடியே இரண்டு போலீஸார் சுற்றி வளைத்துத் தாக்கியதில், அவரது கேமரா 50 அடி தூரத்தில் பறந்து சென்று விழுந்தது. வயிற்றில் பூட்ஸ் காலால் எட்டி மிதித்தனர். முதுகில் லத்தித் தழும்புகள். பின்பு, அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக... கலெக்டர், டி.ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் சென்று பார்த்து, வருத்தம் தெரிவித்தனர்!
பந்த் ரத்தான கதை...
ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்த மூப்பனார், பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடைசியாக, ஒன்றரை வயதுச் சிறுவன் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது, அவர் கண்கள் கலங்கிவிட்டன.
எம்.ஜி.ஆர். சிலை முதல், தடியடி நடந்த பி.ஆர்.ஓ. அலுவலகம் வரை நடந்தே சென்று பார்த்தார். அங்கு குவிந்துகிடந்த செருப்புகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, அவசர அவசரமாகத் தண்ணீர்விட்டு கழுவிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்துக் கொதித்துப்போன மக்கள், ''இங்கே ரத்தக்காடாக் கிடந்தது ஐயா... எல்லாத்தையும் தண்ணி ஊத்திக் கழுவிவிட்டிருக்காங்க...'' என்று கொதிப்புடன் முறையிட்டனர்.
பின்பு, அவர் ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்த ஷாநவாஸ் என்பவரின் அம்மா மும்தாஜ் பேகம், ''இப்போதானே ஐயா அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சான்... அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே...'' என்று கண்ணீர்விட்டு அழுதார். விதவையான அவருக்கு இரண்டு பையன்கள். இரண்டாவது பையனுக்குப் 12 வயதுதான் ஆகிறது!
பின்பு நிருபர்களை சந்தித்த மூப்பனார், ''இந்தப் போராட்டத்துக்குச் சாதிச் சாயம் பூசுவது தவறு. இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் பிரச்னை. ஆகவேதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி இருக்கின்றன. போலீஸாரின் அத்துமீறலுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்...'' என்று கோபம் கொப்பளிக்கச் சொல்ல... உறுதியான தி.மு.க. எதிர்ப்பு நிலையை அவர் எடுத்துவிட்டார் எனப் புரிந்துகொண்டனர் அங்கு இருந்தவர்கள்......