ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேரை போலீஸார் அடித்துக் கொன்றனர்- பிரிசில்லா பாண்டியன்

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேரை போலீஸார் அடித்துக் கொன்றனர்-பிரிசில்லா பாண்டியன் சென்னை: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 2 பேரை போலீஸார் சுட்டும், அடித்தும் கொன்றுள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜான் பாண்டியன் மனைவியுமான பிரிசில்லா பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரிசில்லா பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் சமநீதிக்காக போராடிய ஒரு மாபெரும் தியாகி. ஜனநாயகத்தை அழிக்கின்ற சாதிய சக்தியை ஒழிக்க போராடியவர். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், சமநீதி கிடைக்க போராடிய போராளி. சிறுவயதிலேயே இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தில் பங்கு கொண்டு தன் தந்தையுடன் 17 வயதில் சிறை சென்றவர். அவர் மதிக்கப்பட வேண்டிய தியாகி. இவரின் பெருமையை கவுரவிக்கவே கடந்த ஆண்டு மத்திய அரசு இவரின் உருவத்தில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவும், காமராஜரும் அவரின் இரங்கல் செய்தியில் தியாகியை சமநீதி போராளி என்று விவரித்துள்ளனர். இந்த தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைத்து தலைவர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, அவர் சார்ந்த அவரின் வாரிசுகளான அவர் வழியில் சமூக நீதியை வலியுறுத்தி சமூகத்தை வழி நடத்த கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களை, தடை உத்தரவு போடப்பட்டதாக கூறி செல்லவிடாமல் தடை செய்தது தியாகி இமானுவேல் சேகரனையும், கோடான கோடி மக்களையும் அவமதிப்பதாகும். இங்கு நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம். அப்பாவி மக்கள் 6 பேரின் உரிரை பிடுங்கி உள்ள இந்த காட்டுமிராண்டி செயலை செய்துள்ள ஒரு சில காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் இந்த சம்பவத்திற்கு காரணமான தென் மண்டல ஐஜி ராஜந்திரதாஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இறந்த 6 பேரில் இருவர் காவல் துறையினரால் சுடப்பட்டு அடித்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும் 4 பேர் துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது. மண்டல மாணிக்கத்தை சேர்ந்த மாணவன் பழனி குமார் தேவேந்திரன் இரு தினங்களுக்கு முன்பாக மற்றொரு ஜாதியினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான். இந்த சம்பவத்தால் பரமகுடியில் இந்த மாபெரும் துயர சம்பவத்தை நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜையை நடத்த விடாமல் தடுக்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு வன்மையாக கண்டிக்கத் தக்கது. எனவே இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகவும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தயங்காது என அறிவிக்கப்படுகிறது. இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் மற்றும் அரசு வேலை வழங்கப்படு வேண்டும். உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு குழு அமைத்து நீதி வீசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக