ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பரமக்குடியில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பரமக்குடி அருகே தலித் சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவன் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவ்வாறு செய்யாத காவல்துறை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை பரமக்குடிக்குள் நுழைய அனுமதித்தால், அவர் கொல்லப்பட்ட மாணவனின் வீட்டிற்கு ஆறுதல் கூற செல்வார் என்றும், இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் என்றும் கூறி அவரைக் கைது செய்துள்ளது. இது காவல்துறையினர் செய்த மிகப்பெரிய தவறாகும். இதனால்தான் அப்பகுதியில் பெரும் பதற்றமும், போராட்டமும் வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய எந்த எச்சரிக்கையையும் காவல்துறையினர் செய்யவில்லை என்று சேதிகள் வெளிவந்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தினால்கூட முழங்காலுக்கு கீழேதான் சுடவேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களில் சிலருக்கு தலையில் குண்டு பாய்ந்திருப்பதை வைத்து பார்க்கும்போது காவல்துறையினர் எவ்வளவு வெறியுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடக்கூடிய நிகழ்வுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது உள்பட பல்வேறு தவறுகளை செய்த காவல்துறையினர், தங்கள் தவறை மறைக்க அப்பாவிகளை சுட்டுக்கொன்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு காரணமான வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம், இவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை தனியாக விசாரிக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களின் உயிரை குறைத்து மதிப்பிடுவதாகும். விலங்குகளால் எதிர்பாராமல் கொல்லப்படும் உயிர்களுக்கு கூட 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, காவல்துறையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு வெறும் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவது சரியல்ல. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும், காயமடைந்தோருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கவேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன். துப்பாக்கிச்சூடு நடந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பிவரும் போதிலும், அண்டை மாவட்டங்களில் கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற செயல்கள் நடைபெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. தென்மாவட்ட அமைதியை சீர்குலைக்கும் எந்த முயற்சிக்கும் இடமளிக்காமல் அங்குள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக