ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவிக்க வேண்டும்: ஜான்பாண்டியன்

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்தால் மக்கள் அமைதியுடன் வாழ வழிவகை கிடைக்கும் என்று ஜான்பாண்டியன் கூறினார். பரமக்குடி சம்பவத்தை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் போலீசாருக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- பரமக்குடியில் போலீசார் திட்டமிட்டே மோதலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த எனக்கு 3 மணியில் இருந்து 5 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாக போலீசார் திட்டமிட்டே காலை 11 மணிக்கு கலவரம் நிகழ்த்தியிருக்கிறார்கள். போலீசாரின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் எண்ணம். குறிப்பிட்ட பகுதிக்கு நான் போக கூடாது என்று 9-ந் தேதி கூறியிருந்தார்கள். நானும் போகவில்லை. இந்த நிலையில் 11-ந் தேதி காலையில் என்னை வல்லநாட்டில் கைது செய்தனர். அத்துமீறி செயல்பட்டு 6 பேரின் உயிரை கொன்ற காவல்துறையினரின் மீது வழக்கு போடாமல் தலித் மக்கள் 1,400 மீது வழக்கு போடுவதில் என்ன நியாயம்? இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். இதை பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அரசு விழாவாக அறிவிக்கும் பட்சத்தில் மோதல் சம்பவங்கள் எதுவும் நடைபெறாது. எங்கும் அமைதி நிலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக