வியாழன், 15 செப்டம்பர், 2011
பரமக்குடி துப்பாக்கிச்சூடு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் எங்கள் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்திற்கு சென்று சி.பி.ஐ. விசாரணை கேட்போம் என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று போலீசார் சொல்வது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் இதுவரையில் நடைபெறாத வன்கொடுமையை காவல்துறை நிகழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் எங்கள் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்திற்கு சென்று சி.பி.ஐ. விசாரணை கேட்போம். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பழனிகுமாரின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
சட்டமன்றத்தில் பரமக்குடி சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் அளித்த விளக்கம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. காவல்துறை அளித்த தவறான தகவல்களை கொண்டு விளக்கம் அளித்திருக்கிறார். இது இருசமூகத்துக்கு இடையே வன்மத்தை தூண்டுகிறது. அதே போல் எதிர்கட்சி தலைவராக கருத்து தெரிவித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சு பொறுப்பற்ற தன்மையில் அமைந்துள்ளது. தலித் மக்களுக்கு எதிராகவும் உள்ளது. நீதி விசாரணை தேவையில்லை என்று அவர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு போலீஸ் வேன் கொளுத்தப்பட்டிருப்பதற்கு 6 பேரின் உயிரா? அப்படியென்றால் இந்த அரசு தலித் விரோத அரசு தான். ஒவ்வொரு ஆண்டும் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் தலித் இளைஞர்கள் உயிர் இழப்பது நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்ச்சியாக அறிவித்து நடத்த வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 16-ந் தேதி சென்னையிலும், 20-ந்தேதி மதுரையிலும் எங்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக