ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை

வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

2. பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.

3. தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.

4. ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.

5. ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.

6. தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.

7. துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.

8. உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.

பரிந்துரைகள்:

1. தலித் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களிடம் நம்பிக்கையைக் கொண்டுவரும் வகையில், செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தீப் பட்டீல் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட மாவட்ட காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும். அரசாங்கம் அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் கொண்ட விசாரணைக் கமிஷனுக்குப் பதிலாக பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்கமிஷன் அமைத்திட வேண்டும். செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி, முதலமைச்சர் பொறுப்பிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் செயல்பட்டவிதம் குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும்.

2. தலித்துகள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், இனக் கலவரத்தை தூண்டுபவர்கள் என்றவகையில் தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.

3. மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உயர்மருத்துவ வசதியை அரசே தன் முழுப்பொறுப்பில் செய்திட வேண்டும். சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அடக்குமுறை, அச்சுறுத்தல் நோக்கத்துடன் பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போடப் பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். போலீஸ் தேடுதல் வேட்டை காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில் இது போன்ற தேடுதல் வேட்டைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்.

4. நேர்த்திக் கடனாக நாக்கை வெட்டிக் கொண்ட தனது கட்சிக்காரப் பெண்ணுக்கு ரூ 5 லட்சமும் அரசாங்கவேலையும் வழங்கும் அளவுக்கு ‘தாராள’ மனது படைத்த முதலமைச்சர், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சமும் அரசாங்க வேலையும் அளித்திடவேண்டும். தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் பச்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும். புதிய சாலை அமைத்து தர வேண்டும். வேலை இல்லாமலிருக்கும் அந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்.

5. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்கவேண்டும். தலித் அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைவதற்குள்ள தடையை நீக்க வேண்டும்.

6. தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.

7. ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டின்படி அரசாங்கம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலித்துகள் மீதான அரசாங்க வன்முறையும் காவல்துறை வன்முறையும் (கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி) அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். எனவே தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக