ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பரமக்குடி கலவரம்?

தியாகி இமானுவல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், அவர்களை தடுத்து நிறுத்த காவல் துறையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூட்டில் - இன்று காலை உயிரிழந்த ஒருவருடன் சேர்த்து - 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தியாகி இமானுவல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை - அவர் அங்கு அனுமதிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று காவல் துறையினர் கருதிய காரணத்தினால் - வழியிலேயே கைது செய்யப்பட்டதால், அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது. காவல் துறையினர் இப்படி எண்ணியதற்கு ஒரு காரணம் இருந்துள்ளது. அது, கடந்த சனிக்கிழமை எம் பச்சேரி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பழனி குமார் என்கிற ஒரு மாணவர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்துள்ளது. வன்முறை ஏதும் ஏற்படாமல் இருக்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. கொல்லப்பட்ட மாணவர் பழனி குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தியாகி இமானுவல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார் என்றும், பழனி குமார் வீட்டிற்குச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டால், அது சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று காவல் துறையினர் கருதியுள்ளனர். எனவே, வரும் வழியிலேயே அவரை கைது செய்துள்ளனர். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பரமக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுவே துப்பாக்சிச் சூட்டில் முடிந்து 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு வன்முறையான சூழல் ஏற்படாமல் தடுத்திருக்க முடியுமா என்பதே பொதுவாக எழும் கேள்வியாகும். பழனி குமார் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு தியாகி இமானுவல் நினைவிடத்திற்கு செல்ல ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார் என்றால், அதனை காவல் துறை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் உள்ளதா? நீங்கள் பழனி குமார் வீட்டிற்குச் சென்றால், அதன் காரணமாக வன்முறை ஏற்படலாம் என்பதை அவரிடம் விளக்கி, நினைவிடத்திற்கு மட்டும் சென்றுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்க முடியாதா? (அங்கு கலவரம் வெடித்த பிறகு புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களை காவல் துறை அனுமதி மறுத்தபோது அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனரே!) காவல் துறையினரால் அவ்வாறு நிச்சயம் செய்திருக்க முடியும். அதனை ஜான் பாண்டியன் ஏற்க மறுத்திருந்தால் பிறகு அவரைக் கைது செய்திருக்கலாம். அதை செய்யாமல், சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று காரணம் காட்டி, வழியிலேயே இடைமறித்து கைது செய்ததே அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வழிவகுத்துவிட்டது என்றும் கருத இடமேற்படுகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக எந்த ஒரு ‘தலைவரை’யும் அவருடைய விருப்பத்திற்கு எதிரான கைது செய்வது முதிர்ச்சியான நடவடிக்கையாகத் தெரியவில்லை. பல்வேறு வழக்குகளில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதனை வலியுறுத்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, சட்ட ரீதியான உரிமை மறுக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கை - தேவையான அளவிற்கு காவல் படைகளை நிறுத்தி நிலைநாட்ட வேண்டியதே காவல் துறையின் பணி சார்ந்த பொறுப்பாகும். எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்க சட்ட ரீதியான சரியான நடவடிக்கை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக