ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 பிப்ரவரி, 2015

ஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலர் லட்சுமணன் என்ற பாஸ்கரன் பிப்ரவரி 22இல் கொலை செய்யப்பட்டார். இதனால், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அப்பகுதிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.
அதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் செல்ல தனக்கு அனுமதி வழங்கவும், 144 தடை உத்தரவை ரத்து செய்யவும் உத்தரவிடக் கோரி, டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் கொலையாளிகளைக் கைது செய்யவில்லை. மேலும், குற்றவாளிகளுக்கு உதவியாக போலீஸார் விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியை கலவரப் பகுதியைப் போல மாற்றியுள்ளனர். 144 தடை உத்தரவால் பேருந்துகள் இயங்கவில்லை.
பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பிக்க தகுந்த காரணம் இல்லை. இந்தத் தடை உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதற்குத் தடைவிதிக்க வேண்டுóம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் உள்ளன. எனவே, எம்.எல்.ஏ. என்ற முறையில் நான் அங்கு செல்ல உரிமை உள்ளது என்றார்.
பின்னர், டாக்டர் கிருஷ்ணசாமி மார்ச் 1ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் செல்ல நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அன்றைய தினம் காலை 11 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் அவர் அங்கு இருக்கலாம். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 15 பேருடன் 3 வாகனங்களில் செல்லலாம். அதற்கு, போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஸ்ரீவைகுண்டத்துக்கு செல்லும் வாகன எண்களைப் போலீஸாரிடம் தெரிவிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. மேலும், இந்த மனுவுக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கண்டிப்பு
வழக்கு விசாரணையின்போது நீதிபதி எஸ். மதிவாணன், தூத்துக்குடி ஆட்சியரின் தடை உத்தரவு நகலைப் படித்துப் பார்த்தார். அதில், இடம்பெற்றுள்ள வாசகங்களுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், 144 தடை உத்தரவை எந்த அடிப்படையில் பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குத் தெரியவில்லை.
குறிப்பிட்ட பிரிவினர் அதிகம் உள்ள பகுதி என்றும், குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் அதில் குறிப்பிட்டு, அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்றால் மோதல் ஏற்படும் என ஆட்சியர் அச்சம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக நாடு. யாரும் எங்கும் சென்று வரலாம். தடை உத்தரவுக்கு இப்படிக் காரணம் கூறுவது சரியல்ல. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக