ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிச்சனார்தோப்பிற்கு செல்ல கிருஷ்ணசாமிக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீ வைகுண்டம் நகர செயலாளர் லட்சுமணன் (எ) பாஸ்கர் கடந்த பிப்.22ல் கொலை செய்யப்பட்டார். உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதனிடையே ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. எம்எல்ஏவான என்னால் கூட அந்த பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடந்த கொலைக்காக தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறு. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு உரிய காரணம் கூறப்படவில்லை. எனவே தடை உத்தரவை சட்ட விரோதம் எனக் கூறி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜராகி, தடை உத்தரவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது சட்டவிரோதம் எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளதால் பிரச்னை ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது. நமது நாடு மதசார்பற்ற நாடு. எதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது தெரியாமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் மார்ச் 1ம் தேதி காலை 11 முதல் 1.30 மணி வரை கொலை செய்யப்பட்ட லட்சுமணனின் கிராமமான பிச்சனார்தோப்பிற்கு சென்று வரலாம்.
அவருடன் 15 பேர் 3 கார்களில் செல்லலாம். மைக்கில் பேசவோ, கோஷமிடவோ கூடாது. தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், மனு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக