ஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..!!!..கிராம மக்கள் , புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல்: 500 பேர் பங்கேற்பு.....வாசுதேவநல்லூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி இறந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்தோர் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் கரிவலம்வந்தநல்லூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள சங்குபுரம் காமராஜர் காலனியை சேர்ந்த கடற்கரை மகன் பாக்கியராஜ் (33). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், கடந்த 12ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்றபோது, வாசுதேவநல்லூர் அருகே மர்மமாக இறந்து கிடந்தார். அவர் மின்னல் பாய்ந்து இறந்ததாக வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் மற்றும் அப்பகுதி மக்கள் தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலையில் கரிவலம்வந்தநல்லூரில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் மறியலில் பங்கேற்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து, சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் வழியாக ராஜபாளையம் முக்குச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் பெர்மிவித்யா பேச்சு நடத்தினார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதில், புதிய தமிழகம் மாநில இளைஞரணிச் செயலர் எஸ்.பாஸ்கர் மதுரம், வடக்கு மாவட்டச் செயலர் இன்பராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் வீரா அரவிந்தராஜா, மேற்கு மாவட்டச் செயலர் ஜெயக்குமார், , மாவட்டப் பொருளாளர் விணுப்பாண்டியன், இணைச் செயலர் மாடசாமி, சங்கரன்கோவில் நகரச் செயலர் ராஜா, ஊர்த் தலைவர்கள் முத்துமாணிக்கம், சங்கர்கணேஷ், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிற்பகல் ஒரு மணிக்கு அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக